வருடம் முழுமைக்குமான முழு உழைப்பை தேர்வறையில் நிரூபித்து, தங்கள் வெற்றியை மாணவர்கள் பதிவு செய்வதற்கான தருணம் வந்துவிட்டது. தேர்வுக்கு முந்தைய தினங்கள், தேர்வு நாள், தேர்வறை எதிர்கொள்ளல்கள், தேர்வுகளுக்கு இடையிலான விடுமுறை, உணவு, தூக்கம், இறுதி திருப்புதல் உள்ளிட்ட அம்சங்களில் கவனம் தேவை.
இந்த உதவிக் குறிப்புகள் நிச்சயம் மாணவர்கள் மத்தியிலான தேர்வு காலத்தில் எழும் வீண் அச்சம், சந்தேகம், பதட்டம் போன்றவற்றை நீக்கி தன்னம்பிக்கையையும் தெளிவையும் தரும்.
மாணவர்களுக்கு கைகொடுக்கும் ’டானிக்’ குறிப்புகளை வழங்குகிறார்கள் ஓய்வு பெற்ற கல்வி அதிகாரிகளான திருச்சி ஆர்.முத்துக்கிருஷ்ணன் (முதன்மைக்கல்வி அலுவலர்), பெரம்பலூர் கே.காமராஜ் (முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்).
தேர்வு என்பது வாய்ப்பு
தேர்வு என்பதை ஏதோ சினிமா கிளைமாக்ஸ் போல நகம் கடித்து காத்திருக்கும் கவலைக்குரிய அம்சமாக பலர் பாவித்திருக்கிறார்கள். உண்மையில் தேர்வு என்பது அருமையான வாய்ப்பு. உங்களை உங்களுக்கும் உலகத்துக்கும் நிரூபிப்பதற்காக இதுவரை நீங்கள் எதிர்பார்த்திருந்த வாய்ப்பு.
உற்சாகமான சவால். தேர்வுகளை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள். இந்த தன்னம்பிக்கையும் நேர்மறை சிந்தனையும் மதிப்பெண்களை சிதறாது சேகரிக்க உதவும்.
தேர்வுக்கு முந்தைய தினம்
தேர்வுக்கு முந்தைய தினத்தில் புதிதாக எதையும் படிக்க வேண்டாம். இதுவரை படித்ததை திட்டமிட்டு திருப்பிப் பார்க்கலாம். குறிப்பாக முக்கிய பாடங்களை, படங்களை, சூத்திரங்களை திருப்புதல் மேற்கொள்ளலாம். அனைத்து பாடப் பகுதிக்கும் சமமான வாய்ப்பு வழங்கும் வகையில் பரவலான திருப்புதல் அவசியம்.
பாடப்பகுதி திருப்புதல் தவிர தயாராக வேண்டிய வேறு சில அம்சங்களும் இருக்கின்றன. தேர்வறை, அதில் உங்களது இருக்கை ஆகியவற்றை முன் தினமே தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது. தேர்வு முகாம் பிறிதொரு பள்ளி எனில், சில தினங்கள் முன்பாக நேரடியாக ஒரு நடை சென்று பார்த்துவிட்டு வருவதும், தேர்வு முகாமுக்கான எளிதான பயண தூரம், மாற்று வழிகள், பயண நேரம் குறித்த திட்டமிடல்களையும் பெரியவர்கள் உதவியுடன் தெரிந்துகொள்வது கடைசி நேர பதற்றத்தை தவிர்க்கும்.
இந்த கல்வியாண்டில் புதிய முறையாக, சில குறிப்பிட்ட பாடங்கள் தவிர்த்து பெரும்பாலான தேர்வுகளில் கோடிட்ட விடைத்தாள்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. இதை எதிர்ப்பார்த்து மாணவர்கள் செல்வது நல்லது. கோடிட்ட தாளில் வேகமாக எழுத முடியுமா என்ற சந்தேகமுள்ள மாணவர்கள், திருப்புதலின் போதே அவ்வப்பது கோடிட்ட தாளில் எழுதி தயாரித்துக் கொள்ளலாம்.
தேர்வறை உபகரணங்கள் எல்லாவற்றிலும் 2 செட் வைத்துக்கொள்வது சிறப்பானதுதான். அதற்காக தேர்வுக்கு என்று புதிய பேனாக்களை வாங்கி, அதை தேர்வறையில் பரிசோதிப்பது தடுமாற்றம் தரலாம். நுழைவுச்சீட்டு மற்றும் வழக்கமான எழுது பொருட்களை ஒரு முறை சரிபார்த்து முன்தினமே எடுத்து வைத்துக்கொள்ளலாம்.
தேர்வு நாள்
தேர்வு நாளை மற்றுமொரு வழக்கமான நாளாகவே, சற்றே கூடுதல் சுதாரிப்போடு எதிர்கொண்டால் போதும். விளையாட்டு மைதானத்தில் உங்கள் திறமையை நிரூபிக்க செல்வது போல் துடிப்போடு கிளம்புங்கள். கடைசி நேரத்தில் குழப்பமோ, தயக்கமோ வருவதைத் தவிர்க்கவும். தேர்வறைக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு சற்று முன்பாகவே, அதிலும் முதல் நாள் ஒரு மணி நேரம் முன்பாக செல்லலாம்.
தானே இருசக்கர வாகனத்தை ஓட்டி செல்வது, வேகமாக செல்வது, கோவில்களில் புதிய பிரார்த்தனைகளை காத்திருந்து மேற்கொள்வது, மூடநம்பிக்கை சகுனங்களை மனதில் ஏற்றிக்கொள்வது ஆகியவற்றை தவிர்க்கலாம். கூட்டமான பேருந்துகளில் பயணிப்பது, படிக்கட்டுகளில் தொங்குவது உள்ளிட்டவையும் இதில் அடங்கும்.
தேர்வறைக்கு செல்லும் முன்னர் பிற மாணவர்களிடம் படித்தது, படிக்காதது குறித்து விவாதிப்பதை தவிர்க்க வேண்டும். தேர்வறை எதிர்கொள்ளல் தொடர்பாக பள்ளியில் உங்களுக்கு முன்னரே வழங்கப்பட்ட உடை, உடன் எடுத்துச்செல்லும் பொருட்கள் குறித்த அறிவுறுத்தல்களை சரிபார்த்துக்கொள்ளவும்.
மறதியாக ஒட்டிக்கொள்ளும் சிறு காகித துணுக்கும் தேர்வறை சோதனையில் உங்களுக்கு பெரும் நேரவிரயத்தையும் மன அழுத்தத்தையும் தந்துவிடும். தன்னை சரிபார்த்துக்கொள்வது மட்டுமல்ல, அமருமிடத்திலும், எழுதும் பலகையிலும் இண்டு இடுக்குகளை பார்த்துவிடுவது உசிதமானது.
தேர்வு நேரம்
ஒரு மைதானத்தில் முழு மூச்சாக உங்கள் திறமையை வெளிக்காட்டும் போக்கையே தேர்வறையில் பிரயோகிக்கலாம். மற்றபடி புதிதாக மாணவர்கள் எதையும் செய்யப்போவதில்லை. வழக்கமாக படித்தது, பல்வேறு திருப்புதல் தேர்வுகளில் எழுதியது ஆகியவற்றை சற்றே கூடுதல் சிரத்தையுடன் எழுதப் போகிறார்கள். அவ்வளவுதான். இயல்பான சுவாசத்துடன், முழு கவனத்துடன், நேர மேலாண்மையை பின்பற்றி தன்னம்பிக்கையோடு தேர்வுகளை எழுத வேண்டும்.
தேர்வறையில் சுற்றி நடப்பவை குறித்து திசைதிருப்பம் வேண்டாம். சக மாணவர் விரைவாக கூடுதல் விடைத்தாள் கோருவது, மற்றொரு மாணவர் தடுமாறுவது குறித்தெல்லாம் கவனம் சிதறக்கூடாது. அதேபோல தேர்வு கண்காணிப்பாளர் மற்றும் பறக்கும் படையினர் தேர்வு சரியாக நடைபெறுவதற்காக தங்கள் கடமையை செய்ய நியமிக்கப்பட்டவர்கள். அவர்களின் செயல்பாடுகள் தொடர்பாக அதிருப்தியோ, அலட்சியமோ வேண்டாம்.
காலி இடங்களை அடிப்பது, எழுதியதை அடித்துவிட்டு வேறு பதில் எழுதுவது உள்ளிட்ட தேர்வறை எதிர்கொள்ளல்களில் ஏற்கனவே ஆசிரியர் வழங்கிய குறிப்புகளை முறையாக பின்பற்றவும். எழுதிக்கொண்டிருக்கும் தாளின் கடைசி பக்கத்தை தொடங்கும்போதே, கூடுதல் விடைத்தாள்களை கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
திருப்புதலுக்குப் போதுமான நேரம் ஒதுக்கித் தேர்வை எழுதுவது நல்லது. திருப்புதல் என்பது விடைகளை சரிபார்ப்பது மட்டுமல்ல, அவற்றின் சரியான எண்ணிக்கை, வரிசை எண்கள், பக்கங்களைத் தொகுத்து சரியாக முடிச்சிடுவது உள்ளவற்றையும் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
இடை விடுமுறைகள்
தேர்வுகளுக்கு இடையே வரும் விடுமுறைகளை வரப்பிரசாதமாய் எடுத்துக்கொள்ளலாம். நேர்மாறாக நன்றாக படிப்பவர்கள்கூட இந்த விடுமுறையில் கவனம் சிதறி மதிப்பெண் இழப்பதுண்டு. அதற்கு வாய்ப்பு தராமல், தேர்வு கால அட்டவணை மற்றும் ஆசிரியரிடம் ஆலோசனை பெற்று, திட்டமிட்ட திருப்புதலை இந்த விடுமுறை நாட்களில் மேற்கொள்ள வேண்டும்.
எழுதி முடித்த தேர்வுகள், அவற்றில் கிடைக்கும்/ இழக்கும் வாய்ப்பிலான மதிப்பெண்கள் குறித்து அசைபோட்டு நேர விரயம் செய்யக்கூடாது. சில பாடங்கள் திருப்புதலின்போது குழுவாக அமர்ந்து படிப்பது ஏற்புடையதாகவும், பழக்கமுடையதாகவும் இருக்கலாம். ஆனால், குழுவினரில் யாராவது கவனச்சிதறலோ, அதைரியமோ தருவார்கள் எனில் தனித்து படிப்பதே உத்தமம்.
தேர்வுக்கு இடையிலான விடுமுறை என்பது ஓய்வுக்கானது அல்ல. ரிலாக்ஸ் செய்கிறேன் பேர்வழி என்று செல்போன், கம்ப்யூட்டர் கேம்ஸ், சமூக ஊடகங்கள் என்று கவனம் சிதறக்கூடாது. முக்கியமாக டிவி, சினிமா உள்ளிட்ட காட்சிப் பதிவுகளை பார்க்கும்போது அவை மூளையில் எளிதாக பதியும் என்பதால், படித்தவற்றை மறந்து போவது மற்றும் நினைவுகூர்வதில் தடுமாற்றம் நேரிடும்.
புதிய இடங்களுக்கு செல்வது, நீர் நிலைகளில் குளிப்பது, வாகனங்கள் ஓட்டுவது, மரம் ஏறுவது, அடிபடக்கூடிய விளையாட்டுகளை தவிர்த்தாக வேண்டும். பாடத் தயாரிப்புக்கு இடையே மாற்றுத் தேவையெனில் சிறு நடை, மூச்சுப்பயிற்சி, பசுமையான வெளியை கவனிப்பது, எதிர்கால இலக்கு, அதற்கான வெற்றிப்படிகள் குறித்த உற்சாகம் தரும் பழகிய கற்பனையை சில நிமிடம் மட்டுமே அசைபோடுவது போன்றவை போதும். மீண்டும் தேர்வுக்கான தயாரிப்புகளுக்கு திரும்பி, அதில் மூழ்கிவிடலாம்.
உணவு, உறக்கம், ஓய்வு
டெங்கு, பன்றிக் காய்ச்சல் தொற்றுகள் தீவிரமாக பரவும் காலம் இது. தேர்வு தருணத்தில் உடல் நலத்தில் காட்டும் சிறு அலட்சியமும் உடல் எதிர்ப்பு சக்தியை குறைத்து இது போன்ற பாதிப்புகளுக்கு ஆளாக்கிவிடும். எனவே, தேர்வு காலத்தில் முறையான உணவு உறக்கத்தில் குறை வைக்கக்கூடாது. எண்ணெய் பலகாரங்கள், துரித உணவு உள்ளிட்டவற்றை தவிர்த்துவிட்டு, செரிமான மண்டலத்துக்கு சிரமம் தராத ஆவியில் வெந்த உணவுகள், காய்ச்சி ஆறி வடிகட்டிய குடிநீர் போன்றவற்றை உட்கொள்ளலாம்.
தொடர் படிப்பால் சோர்வுறும் மூளைக்குத் தேவையான ஆக்ஸிஜனை குடிநீர் வழங்கும் என்பதால், படிக்கும் இடத்தில் எப்போதும் உடன் ஒரு குடிநீர் குவளையை தயாராக வைத்திருப்பது நலம். அதேபோல விளம்பர மோகத்திலோ, சக மாணவர் பரிந்துரையின் பேரிலோ புதிய ஊட்டச்சத்து பானங்கள், ஞாபகசக்தி மருந்துகள், மாத்திரைகள் உட்கொள்வது தேர்வு காலத்தில் அறவே கூடாது. குடும்பத்தில் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் சத்துபானம் இதில் விதிவிலக்கு.
தேர்வு காலத்தில் வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். தூக்கம் வரும் என்று சில மாணவர்கள் சரியாக சாப்பிட மறுப்பார்கள். சேர்ந்தார்போல சாப்பிடும்போது, உண்ட களைப்பு வரலாம். ஆனால், அவற்றை சிறு பகுதிகளாக குறிப்பிட்ட இடைவெளிகளில் எடுத்துக்கொள்ளும்போது தூக்கம் தட்டாது. தேர்வு காலத்துக்கு முன்புவரை விழித்திருந்து படிப்பதெல்லாம் சரி. தேர்வு நாட்களில் குறைந்தபட்ச உறக்கம் அவசியம். சிறு உடல்நலக் கோளாறு என்றாலும் குடும்ப மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது, பெரும் பாதிப்புகளை ஆரம்பத்திலேயே தவிர்க்கும்.
பெற்றோர் ஆசிரியர்களுக்கு
தேர்வு காலம் என்பது, மாணவர்கள் தங்கள் திறமையை வெளிக்கொணர்வதற்கான தங்கத் தருணங்கள். மாணவர் ஒவ்வொருவரும் தனித்துவம் கொண்டவர்கள். அவரது தனித்தன்மைக்கான ஆதரவும், ஊக்குவிப்பும், கவனமும் தந்தால் தங்கள் திறமையை நிச்சயம் நிரூபிப்பார்கள். குடும்பத்தினரும் பரீட்சைக்கு தயாராகும் மாணவருக்காக ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே டிவி, இரைச்சல் இல்லாத அமைதியான சூழலை ஏற்படுத்தி தரவேண்டும். குடும்பத்தினரின் சிறு தியாகங்கள் மாணவரின் எதிர்காலத்துக்குப் பெரும் உதவியாக அமையும்.
அதேநேரம் தேர்வு கால நெருக்கடியில் இருக்கும் மாணவர்களுக்கு கூடுதல் அழுத்தங்களை அட்வைஸ் என்ற பெயரில் தருவதைத் தவிர்க்கலாம். ஆசிரியர்கள் தங்கள் அலைபேசி எண்களை மாணவர்களிடம் அளித்து, அவர்களின் கடைசி நேர சந்தேகங்களுக்கும் செவிமடுக்கலாம். மாணவர்களின் கடைசி நேர பதற்றங்களை நீக்குவதோடு, கடமையையும் பரிபூரணமாக செய்த திருப்தி கிடைக்கும்.
புத்தகத்தைக் கரைத்துக் குடித்தால் 100க்கு 100தான்
சென்னையைச் சேர்ந்த கணித ஆசிரியைகள் கே.கல்பனாவும் சொர்ணவல்லியும்.
பொதுவானவை
தேர்வறைக்குள் நுழைந்ததும் விடைத்தாளை அமைதியாக படிக்கவும். நன்றாகப் படிக்கிற மாணவர்கள் கூட பதற்றத்தில் பிளஸ் குறி போடும் இடத்தில் மைனஸ் குறி போட்டு மொத்த மதிப்பெண்கள் இழந்து போகிற சம்பவங்களும் நடக்கின்றன. பதற்றம் வேண்டவே வேண்டாம்.
வினாக்களின் எண்களை மிகச்சரியாக குறிப்பிட்டு விடைகளை எழுத வேண்டும். இல்லையென்றால் மதிப்பெண் இழப்பு ஏற்படும்.
கேள்விக்கான விடையை செய்து பார்ப்பதற்கு விடைத்தாளில் ஒரு பகுதியை ஒதுக்குவார்கள். செய்து பார்க்கிற பகுதியில் சரியான விடையை உருவாக்குகிற மாணவர்கள் கூட அந்த விடையை எடுத்து எழுதும்போது தப்பாக எழுதும் விசித்திரமும் நடக்கிறது. கவனம் தேவை. விடைத்தாள் திருத்தும் ஆசிரியர் சரியான விடையை மாணவர் உருவாக்கி உள்ளார். ஆனால் எடுத்து எழுதும்போதுதான் தவறு செய்துள்ளார் என உணர்ந்தாலும் அவரால் மார்க் போட முடியாது.
ஒரு கணிதக்கேள்விக்கான விடையை நிறுவும்போது படிநிலைகளில் வரிசைக்கிரமமாக,நிறுவுதல் முக்கியமானது. அதற்கு ஸ்டெப் மார்க் உண்டு. நிறுவலை தவறாக எழுதிவிட்டு விடையை சரியாக எழுதினாலும் மதிப்பெண்கள் கிடைக்காது.
பத்து மதிப்பெண்கள் கேள்விகளான செய்முறை வடிவியல்,வரைபடம் ஆகியவற்றுக்கும் இத்தகைய ஸ்டெப் மார்க் உண்டு. வடிவியல் கேள்விகளுக்கான விடை எழுதும்போது உதவிப்படம், வரைபடம், வரைபடமுறை,நிரூபித்தல் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மதிப்பெண்கள் உண்டு.கவனம் தேவை.
விடைத்தாள்களை திருத்துவதற்கான வழிகாட்டலாக அரசாங்கம் ஆசிரியர்களுக்கு கையேடு வழங்கும்.அதில் ஸ்டெப் மதிப்பெண்கள் வழங்கவும் வழி உள்ளது.
தெளிவான கையெழுத்தில், விடைகளை அடித்தல் ,திருத்தல் இல்லாமல் எழுதுவது அதிக மதிப்பெண்களை பெற உதவும். விடைத்தாளின் கடைசி இரண்டு வரிகளில் புதிய கேள்வியை ஆரம்பிக்க வேண்டாம்.
கடைசி நிமிடம் வரைக்கும் தேர்வு எழுத வேண்டாம். பத்து நிமிடம் முன்னதாகவே முடிக்கவும். எழுதி முடித்ததை முழுமையாக பரிசீலிக்கவும். அப்படி செய்தால் அதில் கவனக்குறைவான விடுதல் இருந்தால் சரி செய்ய முடியும்.
10 மதிப்பெண்கள் பகுதியில் உள்ள செய்முறை வடிவியல்,வரைபடம் ஆகிய இரண்டு வினாக்களுக்கான விடைகளை முதலில் எழுதினால், கடைசி நேர பதற்றம் இல்லாமல் அழகாக அவற்றை வரைய முடியும். அப்படி செய்தால், 20 மதிப்பெண்களை பெற்றுவிட்ட தன்னம்பிக்கையில் அடுத்த பகுதிகளை பார்க்கலாம்.
கணித தேர்வு என்றால்…
பொதுவாக, தேர்வில் கேட்கக்கூடிய மிகப் பெரும்பாலான கேள்விகளும் பாடப்புத்தகத்தை அடிப்படையாக கொண்டே கேட்கப்படும்.
பாடப்புத்தகங்களில் உள்ள ஒரே மாதிரியான கேள்விகள்தான் தேர்வுக்கு தேர்வு மாறி மாறி உங்களிடம் வந்து கொண்டிருக்கிறது. கேள்விகளுக்கு சாய்ஸாக புத்தகத்தில் வருகிற கேள்விகள்கூட மாறுவதில்லை. எனவே, பாடப்புத்தகத்தை முழுமையாக பயிற்சி செய்வதுதான் மாணவர்களுக்கு உதவும்.
பாடப்புத்தகத்தில் உள்ள அத்தியாயம் 10:1 மற்றும் 10:2-ல் பயிற்சிகள் உள்ளன. அதிலும் குறிப்பாக,10:2 பயிற்சியில் உள்ள பயிற்சிகளை முழுமையாக படித்தால் எளிதாக 10 மதிப்பெண்கள் பெறலாம்.
செய்முறை வடிவியலில் மூன்று பயிற்சிகள் உள்ளன. அதில் ஏதாவது இரண்டு பயிற்சிகளை முழுமையாக பயின்றாலே,கண்டிப்பாக 10 மதிப்பெண்கள் கிடைத்துவிடும்.
மூன்றாவது அத்தியாயத்தில் உள்ள இயற்கணிதம்,வர்க்கமூலம், காரணிப்படுத்து,ஆகிய பயிற்சிகளை படித்தால் ஒரு ஐந்து மதிப்பெண் கேள்விக்கு விடையளித்துவிடலாம்.
புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில் கணங்களும், சார்புகளும் பற்றிய பயிற்சிகளில் நான்கு கணித விதிகள் உள்ளன. அவற்றிலிருந்து இரண்டு ஐந்து மதிப்பெண் கேள்விகள் வரும்.
நான்காம் அத்தியாயத்தில் அணிகள் பற்றிய பயிற்சிகளில் ஒரு ஐந்து மதிப்பெண் கேள்வி வரும். 12 வது அத்தியாயத்தில் உள்ள நிகழ்தகவு பற்றிய பயிற்சிகளில் பகடை உருட்டல்,நாணயங்கள் சுண்டுதல், சீட்டுக்கட்டுகள் தொடர்பான பயிற்சிகள் வரும். அவை எல்லாவற்றும் ஒரே பார்முலாதான். அந்த பார்முலாவை நன்கு பயிற்சி எடுக்கக்கூடியவர் ஒரு ஐந்து மதிப்பெண்ணை அள்ளிவிடலாம்.
சுமாராக படிக்கிற மாணவர்களுக்காக
ஐந்து மதிப்பெண்களுக்கான கேள்விகள் வரக்கூடிய புத்தகத்தின் அத்தியாயங்கள் 1,4,12 ஆகியவற்றை நன்றாக பயிற்சி எடுத்தாலே இரண்டு மதிப்பெண்கள் பகுதியில் உள்ள 2,3 கேள்விகளுக்கும் பதில் அளிக்கும்வகையில் திறமை பெற்றுவிடுவீர்கள்.
புத்தகத்தின் ஒன்று, நான்கு, 12வது அத்தியாயங்களில் உள்ள பயிற்சிகளை முழுமையாக பயின்றாலே, 30 மதிப்பெண்களை எளிதாக எடுக்கலாம். 10 மதிப்பெண்கள் கேள்விகளான செயல்முறை வடிவியல்,வரைபடம் தொடர்பான இரண்டு கேள்விகளையும் சரியாக போட்டுவிட்டாலே 50 மதிப்பெண்களை நீங்கள் எட்டிவிடலாம்.
புத்தகத்தின் இந்தப்பகுதிகளை இன்னமும் பயிற்சி எடுக்காதவர்கள் கூட இன்று ஆரம்பித்தால் கூட 10 நாள்களில் படித்து தேர்வை எழுதிவிடலாம்.
புத்தகத்தில் உள்ள நான்காம் அத்தியாயத்தில் உள்ள அணிகள் தொடர்பான பயிற்சிகளில் எண் 4:3 ல் உள்ள பயிற்சிகளைச் செய்து பார்த்தாலே 5 மதிப்பெண்கள் எடுக்கலாம்.
சென்டம் மாணவர்களுக்கு
100க்கு 100 வாங்க வேண்டும் என நினைக்கிற மாணவர்களைப்பொறுத்தவரையில் கணித அறிவை அவர்கள் புத்தகத்துக்கு வெளியிலும் தேடும் அளவுக்கு தங்கள் தேடுதல் வேட்டையை விரிவுபடுத்த வேண்டும்.
இன்று கணித அறிவை தேட இணையத்தில் பலவிதமான புதுமையான நவீன வசதிகள் உள்ளன. ஆனாலும் மதிப்பெண்கள் அடிப்படையில் பார்க்கும்போது பாடப்புத்தகத்தை முழுமையாக புரிந்து பயிற்சி எடுப்பதும் மனப்பாடம் செய்வதும்தான் அவர்களுக்கு உதவும்.
புத்தகத்தில் இருந்துதான் அனைத்து வினாக்களும் தேர்வுக்கு வரும். புத்தகத்தில் உள்ள எல்லா பயிற்சிகளையும் முழுமையாக பயில்பவரே 100க்கு 100 எடுக்க முடியும்.
கணிதத்தையும் ஒரு ஜாலியான விளையாட்டாக ரசித்து பயிலும் மனநிலைக்கு வந்து விட்டால் கணிதத்திலும் அள்ளலாம் நூற்றுக்கு நூறு.
மாணவர்களுக்கான இணைய தளங்கள்தொகுப்பு: ரா.தாமோதரன், தமிழாசிரியர், தஞ்சாவூர்
தமிழ்நாடு அரசுப் பாடத்திட்டத்தின்கீழ் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு என்று பல வலைத் தளங்கள் உள்ளன. கீழே உள்ள வலைத்தளங்கள் உபயோகமாக அமையும்.
பொதுத்தளங்கள்
அனைத்துப்பாடங்களுக்குமான குறிப்பேடுகள், பவர்பாயின்ட், விடியோ, ஆடியோ ஆகியவை கீழே உள்ள வலைத்தளத்தில் கிடைக்கின்றன .
தமிழ்
இவ்வலைப்பூவில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்ப் பாடத்திட்டம், வினாத்தாள் அமைப்பு, கற்றல் குறைவான மாணவர்களுக்கான வினா-வங்கி, ஒரு மதிப்பெண் கேள்விகள் ஆகியவை இடம்பெறு கிறது. பாடம் தொடர்பான கால்குலேட்டர், பவர்பாயின்ட் , வீடியோ, ஆடியோவும் கிடைக்கும்.
Maths
இத்தளத்தில் கணிதப் பாடக்குறிப்புகள் கிடைக்கும். பாடம் சம்பந்தமான பவர்பாயிண்ட் கிடைக்கிறது.
Science
இத்தளத்தில் அறிவியல் பாடக்குறிப்புகள் கிடைக்கும்.
No comments:
Post a Comment