முக்தி தலம் காசி. அதற்காகவே காசிக்குச் சென்று வருவார்கள் பக்தர்கள்.
அந்தக் காசி இருப்பது வடநாட்டில். அங்குள்ள பிரதான தெய்வம் காசி
விஸ்வநாதர். அவரே இங்கு தென்னாட்டில், சென்னை மேற்கு மாம்பலத்தில் குடி
கொண்டு அருள்பாலிக்கிறார் என்பது ஐதீகம். மாம்பலம் சுமார் நானுறு ஆண்டுகளுக்கு முன் மகாபிலம் என்ற வில்வ மரம்
நிறைந்த தோப்பாக இருந்தது. ஏரி கொண்ட அழகிய வனம். இந்த வனத்தில் இருந்த
பழைமையான சிவன் கோயில்தான் அருள்மிகு காசி விசாலாட்சி உடனுறை காசி
விஸ்வநாதர் கோயில். அக்கோயிலை சீர்திருத்தி செப்பனிட்டு, மக்கள் வசதியாக
இறைவனை வணங்கும் வண்ணம் 2008 -ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இத்திருக்கோயிலில் 2015 பிரம்மோற்சவம் மார்ச் 25-ம் தேதியன்று
தொடங்குகிறது. இந்த நேரத்தில் திருக்கோயில் தரிசனம் பன்மடங்கு புண்ணிய பலனை
அளிக்கும் என்பது ஐதீகம்.
கோயிலுக்குள் கோசாலை
இக்கோவிலின் கிழக்கு பார்த்த பிரதான வாசல் வழியாக வந்தால் எதிரில் தெரிவது
அழகிய கொடிமரம். அதனை வணங்கி உள்ளே சென்றால் விநாயகர் சன்னதி.
இச்சன்னதிக்குச் சற்று முன்னால் காணப்படுவது சுத்தமாகப் பராமரிக்கப்படும்
`கோசாலை`. விநாயகரை வணங்கினால் நவகிரங்களையும் வணங்கிய பலன் கிடைக்கும். அருள்மிகு
காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் மூலவர் காசி
விஸ்வநாதர் சுயம்பு லிங்கத் திருமேனியாக அலங்காரத் திருக்கோலத்துடன் காட்சி
அளிக்கிறார். இச்சன்னதியில் உள்ள மூலவர் மிகப் பழைமையானவர். இச்சன்னதியை வலம் வந்தால்,
அறுபத்து மூவர் சன்னதி, நால்வர் சன்னதி, தொகையடியார்கள் சன்னதி உட்பட
சுவரில் விநாயகர் மாடம், அடுத்து தட்சிணாமூர்த்தி மாடம், துர்க்கை மாடம்
ஆகியன காட்சி அளிக்கின்றன.
அம்பாள் சன்னதி மற்றொரு கோபுர வாசலை நோக்கி இருக்கிறது. அழகிய தோற்றத்துடன்
காணப்படும் அம்பாள் கருணை முகம் காட்டுகிறாள். இச்சன்னதியில் மஞ்சள்
குங்குமப் பிரசாதம் வழங்கப்படுகிறது. சன்னதிக்கு எதிரில் உள்ள தூணில்
காணப்படும் யோக ஆஞ்சநேயர், சரபேஸ்வரர், சூலினி துர்க்கை ஆகிய சிலாரூபங்கள்
பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
அம்பாள் சன்னதிக்கு வலப்புறம், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி
சன்னதி அழகுற அமைந்துள்ளது. அரச மரத்தடி நாக சிலாரூபங்களை வலம் செய்து
நேராக வந்தால் கால பைரவர் சன்னதி. அச்சன்னதிக்கு அருகே இருப்பது நவகிரக
சன்னதி. கொடி மரத்தின் கீழே உள்ள நந்திகேஸ்வரரை வணங்கிக் கண் உயர்த்திப்
பார்த்தால் சிவனும், பார்வதியும் அருகருகே அமர்ந்த திருக்கோலக் காட்சி
தெரிகிறது.
இத்திருக்கோயிலின் கருங்கல் கூரையில் மீன் சின்னம் காணப்படுகிறது. இது விஜய
நகர சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த நாயக்க மன்னர்களின் கோயில்களில் காணப்படுவது
போல் அமைந்துள்ளது. அது இத்திருக்கோயிலின் பழமையை உணர்த்துகிறது எனலாம்.
காசிக்குச் சென்றால் `வீசம்` புண்ணியம் என்பார்கள். வீசம் என்பது ஓர் அளவை.
இந்தக் காசி விஸ்வநாதரை தரிசித்தால் அளவற்ற புண்ணியம் கிடைக்கும் என்பது
ஐதீகம்
No comments:
Post a Comment