முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இது முதல்படைவீடாகும். இங்கு மட்டுமே முருகனின் வேலுக்கு அபிஷேகம் நடக்கிறது. இங்கு சத்தியகிரீஸ்வரர் (சிவன்), மகாவிஷ்ணு/பவளக்கனிவாய் பெருமாள், கற்பகவிநாயகர், சுப்பிரமணியர், துர்க்கையம்மன் என பஞ்ச தெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டி ஒரே குடவரையில் அருளுகின்றனர்.
காலை 5.30 மணி முதல் 1 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
+91- 452- 248 2248, 248 2648, 98653- 70393, 98421- 93244, 94433 - 82946.
கொடிமரத்தின் அருகே மலையை நோக்கி, அதன் அளவிற்கேற்ப பெரியநந்தி இருக்கிறது. இதற்கு அருகிலேயே மூஞ்சூறு, மயில் வாகனங்களும் உள்ளது. மகாமண்டபத்தின் முகப்பில் நந்திகேஸ்வரர், தன் மனைவி காலகண்டியுடன் இருக்கிறார். மகாமண்டபத்தில் நடராஜர், சுற்றிலும் ரிஷிகளுடன் பார்வதியின் அம்சத்தில் அன்னபூரணி, சிவசூரியன், சந்திரன் ஆகியோர் இருக்கின்றனர். குடவறைக்கு வலது புறத்தில் பஞ்சலிங்கங்கள், அம்பாள்களுடன் திருமணக்கோலத்தில் இருக்கிறது. அருகில் கார்த்திகை முருகன், வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். இவருக்கு அருகில் கருடாழ்வார் நின்றகோலத்தில் இருப்பது விசேஷ தரிசனம். இக்கோயிலுக்கென மொத்தம் 11 தீர்த்தங்கள் இருக்கின்றன. தோல் வியாதிகள் உள்ளவர்கள் லட்சுமி தீர்த்தத்தில் உப்பு, மிளகு போட்டு வேண்டிக்கொள்கின்றனர். இக்கோயில் குடவறையாக அமைந்திருப்பதால் மலையே விமானமாக கருதப்படுகிறது. ஆரம்ப காலத்தில், திருப்பரங்குன்றம் கோயிலுக்கு பின்புறத்திலுள்ள தென்பரங்குன்றம் குடவறைக் கோயிலே பிரதானமாக இருந்திருக்கிறது. இக்கோயில் சேதமடைந்ததால், கோயிலை மறுபக்கத்திற்கு மாற்றி முருகப்பெருமானை வடக்கு திசை நோக்கி திருப்பி அமைத்திருக்கின்றனர். எனவே "திருப்பிய பரங்குன்றம்' என்றழைக்கப்பட்ட இவ்வூர் "திருப்பரங்குன்றம்' என்று மருவியது.திருமண கோலத்தில் முருகன்: அறுபடை வீடுகளில் இத்தலம் முதல் படை வீடாகும். மற்ற ஐந்து தலங்களில் நின்ற கோலத்தில் அருளும் முருகன், இங்கு தெய்வானையை மணம் முடித்த கோலத்தில் அமர்ந்தபடி காட்சி தருகிறார். இவரது அருகில் நாரதர், இந்திரன், பிரம்மா, நின்றகோலத்தில் வீணையில்லாத சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும், மேலே சூரியன், சந்திரன், கந்தர்வர்களும் இருக்கின்றனர். சுப்பிரமணியருக்கு கீழே அவரது வாகனமான யானை, ஆடும் உள்ளது. முருகன் குடவரை மூர்த்தியாக இருப்பதால் புனுகு மட்டும் சாத்தப்படுகிறது. சுப்பிரமணியரின் தரிசனம் காண்பதற்காக, தேவர்கள் மற்றும் மகரிஷிகள் வெண்ணிற மயில் வடிவில் வசிப்பதாக ஐதீகம்.
தேவி லிங்கம்: சிவன், பார்வதிக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்தபோது, அம்பாளின் மடியில் இருந்த முருகன் அதனைக் கேட்டுக்கொண்டிருந்தாராம். அம்மந்திரத்தை குருவிடம் இருந்து முறையாக கற்காமல், மறைமுகமாக கேட்டது தவறு என எண்ணிய முருகன், இத்தலத்தில் சிவனை வேண்டி தவம் செய்தார். அவருக்கு ஒரு தைப்பூசத்தன்று சிவன் காட்சி தந்தார். இந்த சிவன், சுப்பிரமணியர் கோயிலுக்கு எதிரே ஆதிசொக்கநாதராக அருளுகிறார். திருப்பரங்குன்றம் செல்பவர்கள் முதலில் இவரை வணங்கிவிட்டு செல்ல வேண்டும் என்பது ஐதீகம். கருவறையில் சிவலிங்கத்திற்கு பின்புறம் சிவன், பார்வதி மற்றும் முருகனுடன் "சோமாஸ்கந்தராக' இருக்கிறார். இது விசேஷமான அமைப்பாகும்.
No comments:
Post a Comment