வீட்டில் உள்ள அழுக்குகளைப் போக்குவதற்கு ஹைட்ரஜன் பெராக்ஸைடு பல வழிகளில் உதவியாக உள்ளது. பொதுவாக கால் அல்லது கைகளில் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால் தான் ஹைட்ரஜன் பெராக்ஸைடு பயன்படுத்துவோம். அவ்வாறு முதலுதவிக்கு பயன்படுத்தும் ஹைட்ரஜன் பெராக்ஸைடு, வீட்டையும் சுத்தம் செய்யப் பெரிதும் உதவியாக உள்ளது. உதாரணமாக, மரத்தாலான காய்கறி நறுக்கும் பலகையில் உள்ள கறைகளை, எந்த ஒரு பாதிப்புமின்றி போக்குவதற்கு, விலை மலிவாக கிடைக்கும் ஹைட்ரஜன் பெராக்ஸைடைப் பயன்படுத்தலாம்.
அதே சமயம், காய்கறிகளின் மேல்புறத்தில் உள்ள பாக்டீரியாக்களைப் போக்குவதற்கு, சிறிது ஹைட்ரஜன் பெராக்ஸைடு தெளித்தால், கிருமிகள் அழிந்துவிடும். சரி, இப்போது இத்தகைய சிறப்புகளைக் கொண்ட ஹைட்ரஜன் பெராக்ஸைடை, வேறு எவற்றையெல்லாம் சுத்தம் செய்யப் பயன்படுத்தலாம் என்று பார்ப்போமா!!!
* துணிகளில் படிந்திருக்கும் இரத்தம், ரெட் ஒயின், வியர்வை அல்லது எண்ணெய் கறைகளைப் போக்குவதற்கு, ஹைட்ரஜன் பெராக்ஸைடை நீரில் ஊற்றி, பின் அதில் கறையுள்ள துணிகளை ஊற வைத்து, துவைத்தால் கறைகளை எளிதில் போக்கலாம்.
* வீட்டில் உள்ள வெள்ளைத் தரைகளில் இருக்கும் கறைகளைப் போக்கி, தரைகளை மின்னச் செய்வதற்கு, ஹைட்ரஜன் பெராக்ஸைடு மற்றும் வினிகரை கலந்து, தரைகளை துடைக்க வேண்டும்.
* சமையலறையில் உள்ள நிறையப் பொருட்களை சுத்தம் செய்வதற்கு ஹைட்ரஜன் பெராக்ஸைடு உதவியாக உள்ளது. அதிலும் காய்கறி நறுக்கும் பலகை, ஸ்பாஞ்ச் போன்றவற்றில் உள்ள கிருமிகளைப் போக்குவதற்கு, ஹைட்ரஜன் பெராக்ஸைடு ஊற்றி கழுவினால், அவை சுத்தமாக இருக்கும்.
* சமையலறையில் உள்ள பாத்திரம் கழுவும் தொட்டியில் உள்ள கறைகள் மற்றும் துர்நாற்றத்தைப் போக்குவதற்கு, ஹைட்ரஜன் பெராக்ஸைடு உதவியாக உள்ளது. மேலும் குளியலறையில் உள்ள வாஷ்பேசினை சுத்தம் செய்யவும் பயன்படுத்தலாம்.
* கிருமிகளை அழிக்கவும் ஹைட்ரஜன் பெராக்ஸைடு பயன்படுகிறது. அதிலும் காய்கறிகள் மற்றும் கிச்சன் ஸ்லாப்பில் உள்ள பாக்டீரியாக்களை அழிப்பதற்கு பயன்படுத்தலாம். அதுவும் காய்கறிகளில் உள்ள கிருமிகளைப் போக்க பயன்படுத்தும் போது, ஹைட்ரஜன் பெராக்ஸைடு ஊற்றிக் கழுவியப் பின்பு குறைந்தது 1 மணிநேரம் கழித்து உபயோகிக்க வேண்டும்.
* பெரும்பாலான வீடுகளில் குளிர்சாதனப் பெட்டி மிகவும் மோசமாக இருக்கும். எனவே குளிர்சாதனப் பெட்டியை சுத்தப்படுத்த ஹைட்ரஜன் பெராக்ஸைடு பயன்படுத்தினால், விரைவில் சுத்தப்படுத்திவிடலாம்.
* கழிவறையில் உள்ள மஞ்சள் நிறக் கறைகளை போக்குவது என்பது மிகவும் கடினமானது. எனவே இத்தகைய கறைகளை எந்த ஒரு கஷ்டமுமின்றி போக்குவதற்கு, ஹைட்ரஜன் பெராக்ஸைடு சிறந்ததாக இருக்கும். இதனால் கழிவறையில் உள்ள பாக்டீரியாக்கள் அழிவதோடு, துர்நாற்றமும் நீங்கி, பார்ப்பதற்கே அழகாக இருக்கும்.
இத்தகைய ஹைட்ரஜன் பெராக்ஸைடானது சாதாரண மெடிக்கல் கடைகளில் கிடைக்கும். ஆகவே இதனை வாங்கி பயன்படுத்தி, வீட்டை சுத்தம் செய்யுங்கள்.
No comments:
Post a Comment