Friday, August 9, 2013

Aanmeega News/ஆன்மிக தகவல்கள்

* கோயில் கொடிமரத்தைத் தாண்டித் தான் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டுமா?  ஆமாம். கோயிலில் ஒவ்வொரு சுவாமிக்கும் தனித்தனியாக நமஸ்காரம் செய்யக் கூடாது. கொடிமரத்திற்கு வெளியில் செய்தால் எல்லா சுவாமிக்கும் சேர்த்து நமஸ்காரம் செய்த புண்ணியம் கிட்டும்.



* இரட்டைத்திரி போட்டுத் தான் விளக்கேற்ற வேண்டுமா? அப்படி ஒன்றும் விதி கிடையாது. விளக்கின் அளவிற்கு ஏற்றாற்போல் ஒரே திரியாகப் போட்டு ஏற்றினால் போதுமானது.

* குளித்து விட்டு ஈரத்துணியுடன் வழிபாடு செய்யலாமா? ஈரத்துணியுடன் எந்த நல்ல செயல்களும் செய்யக்கூடாது. துவைத்துக் காய்ந்த தூய்மையான ஆடைகளை அணிந்தே வழிபாடு செய்ய வேண்டும். 

* நாம சங்கீர்த்தனம் சிறப்பானது என்று சொல்வது ஏன்? பகவான் நாமத்தைச் சொல்லிக் கொண்டே இருப்பதையே நாம சங்கீர்த்தனம் என்பர். கலியுகத்தில் நல்லவர் கெட்டவர் என்ற பாகுபாடின்றி எல்லோருக்கும் கஷ்டங்கள் ஏற்படத்தான் செய்கிறது. இதிலிருந்து ஓரளவாவது நம்மைக் காப்பாற்றக் கூடியது இதுதான். 

* சந்திராஷ்டமம் இருந்தால் சுபவிஷயம் செய்யலாமா? கூடாதா? சந்திராஷ்டம தினத்தில் மனக்கசப்பு, சண்டை முதலியன ஏற்பட வாய்ப்புண்டு என்பார்கள். எனவே, தான் சுபநிகழ்ச்சிகள் செய்யவேண்டாம் என்று கூறுகிறார்கள். செய்து தான் ஆக வேண்டும் என்ற சூழலில் விநாயகருக்கு அருகம்புல் சாத்தி வழிபட வேண்டும். அன்று கூடுமானவரை மவுனமாக இருப்பது நல்லது.

* குடும்ப ஒற்றுமைக்கு எந்த ஸ்லோகம் சொல்லி வழிபட வேண்டும்? ஒருவர் இல்லாதபோது அவரைப் பற்றி கிசுகிசுப்பது, மருமகள் மாமியார் இருவரும் ஒருவருக்கொருவர் தவறு கண்டுபிடிப்பது, கணவன், மனைவி சிறிய பிரச்னையை பெரிதாக்கிப் பேசுவது, இது போன்ற கதைகள் இடம்பெறும் "டிவி' சீரியல்களைப் பார்ப்பது...இவையே குடும்பத்தைப் பிரிக்கின்றன. இவற்றை தவிர்த்து விட்டாலே ஸ்லோகம் சொல்ல தேவையிருக்காது. பொறுமையுடன் விட்டுக் கொடுத்து வாழப் பழகுவது தான் குடும்ப ஒற்றுமைக்கான முதல் ஸ்லோகம். கல்யாண கோலத்தில் காட்சி தரும் தெய்வங்களிடமும் மனப்பூர்வமாக வேண்டிக் கொள்ளுங்கள். 

சூரியன் அஸ்தமிக்கும்(மறையும்) போது சூரிய வழிபாடு செய்யலாமா? சூரியநமஸ்காரம் செய்பவர்கள் சூரிய உதயத்தின்போது தான் செய்ய வேண்டும். அஸ்தமிக்கும்போது சூரிய நமஸ்காரம் என்பது கண்கெட்ட பிறகு செய்வதைப் போன்றது. சந்தியாவந்தனம், அனுஷ்டானம் செய்பவர்கள் மூன்றுவேளையும் சூரியவழிபாடு

(அர்க்கியம் கொடுத்தல்) செய்வார்கள்.

* நந்தியின் காதில் வேண்டுகோளைச் சொல்லலாமா? மாலை 4,30- 6 மணிவரையிலான வேளைக்கு பிரதோஷ காலம் என்று பெயர். இதனை "நித்ய பிரதோஷம்' என்பர். தேய்பிறை அல்லது வளர்பிறையில் திரயோதசி கூடிய மாலை வேளையில் எல்லாரும் விரதம் இருப்பர். இந்த பிரதோஷ வேளையில் சிவன் நந்தியின் கொம்புகளுக்கு இடையே நடனம் புரிவதாக ஐதீகம். இதனால், நந்தியின் கொம்புகளுக்கு இடையே சிவனை மனக்கண்ணால் தரிசிப்பது விசேஷம். நந்தியின் கொம்புக்கிடையில் சிவனை மனதால் நினைத்து தூரத்தில் இருந்து வணங்க வேண்டுமே தவிர, நந்தியின் கொம்பில் முகத்தை வைத்துப் பார்ப்பது, காதில் வேண்டுகோளைச் சொல்வது போன்றவை தவறு.


வீட்டில் பீரோவை எந்தத் திசையில் வைப்பது நல்லது? பூஜையறை பக்கத்தில், தனியாக லாக்கர் ரூம் அமைத்து அதில் வடக்குநோக்கி பீரோவை வைப்பது நல்லது. இப்படி செய்ய வசதியில்லாதவர்கள் தங்கள் அறையிலேயே வடகிழக்கு அல்லது தென்மேற்கு மூலையில் கிழக்கு நோக்கி வைத்துக் கொள்ளலாம்.


ருத்ராட்சத்தை எந்த வயது முதல் அணியலாம்? ஏழு வயது முதல் அணியலாம். விபூதி பூசி ஐந்தெழுத்து மந்திரத்தைத் தெரிந்து ஜெபம் செய்யக்கூடிய வயதும் அது தான். எல்லோரும் கட்டாயம் இதைப் பின்பற்றினால் மக்களிடையே பண்பாடு அதிகரிக்கும்.


* பெற்றோர்களின் பாவபுண்ணியம் பிள்ளைகளைச் சேருமா? நீதிநூல்கள் அப்படித்தான் சொல்கின்றன. பெற்றோர் செய்த புண்ணியம் பிள்ளைகளுக்கு வாழ்வைத் தரும். இதே போலவே, பாவம் அவர்களின் வாழ்வைப் பாதிக்கும். பாவத்தினால் ஏற்படும் கஷ்டங்களைப் போக்க வேண்டுமானால், பிள்ளைகள் தங்களைத் திருத்திக் கொண்டு அதிகமான புண்ணியங்களைச் செய்வது தான் ஒரே வழி.


* மூன்றாம் பிறையை பார்க்கக்கூடாது... ஏன்? மூன்றாம் பிறையை தாராளமாக பார்க்கலாம். இதையே "சந்திரதரிசனம்' என்பர். இதனால், செல்வவளம் பெருகும் என்பர். சிவன் மூன்றாம்பிறையைத் தன் தலையில் சூடிக் கொண்டிருப்பதை சுந்தரர், "பித்தா பிறைசூடி' என்றே சுந்தரர் தேவாரத்தில் போற்றுகிறார். நான்காம் பிறையைத்தான்(சதுர்த்தி திதியன்று) பார்க்கக்கூடாது. ஒருவேளை அன்று கண்ணில் சந்திரன் பட்டு விட்டாலும், விநாயகரை வணங்கி விட்டால் தோஷம் நீங்கிவிடும்.


அமாவாசை தவிர மற்ற நாட்களிலும் காகத்திற்குச் சாதம் வைக்கலாமா? தினமும் காகத்திற்கு சாதம் வைப்பது நல்லது. அரிசிமாவினால் கோலம் இடுவதால் எறும்பு போன்ற சிறிய உயிர்களுக்கும், சாதம் வைப்பதால் காகம் முதலிய பறவைகளுக்கும், அன்னதானம் அளிப்பதால் ஏழைகளுக்கும் உணவளித்த புண்ணியம் உண்டாகும். உயிர்களுக்கு உதவுவதை "பூதயக்ஞம்' என்று சாஸ்திரம் கூறுகிறது. இதனை தினமும் செய்யவேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.


அரசமரம், வேம்பு இரண்டையும் இணைத்து வைப்பதன் தத்துவம் என்ன? அரசமரம் மகாவிஷ்ணுவின் சொரூபம். அஸ்வத்த நாராயணன் என்று பெயர். வேம்பு மகாலட்சுமியின் சொரூபம். இரு மரங்களையும் இணைத்து வளர்த்து திருமணமும் செய்வித்தால் அந்த ஊர் மக்கள் சுபிட்சமாக வாழ்வர் என்பது ஐதீகம்.


வீட்டில் பூஜையறை எந்த திசையில் அமைக்கவேண்டும்? தெய்வீக மூலைகளான வடகிழக்கு, தென்மேற்கு திசைகளில் அமைப்பது சிறப்பு. தனியறை அமைக்க இடம் இல்லாவிட்டால், பூஜை அலமாரி இந்த மூலைகளில் இருக்கும்படி செய்து கொள்வது நல்லது.


** சனீஸ்வரரை வீட்டில் வைத்து பூஜிக்க விரும்புகிறேன். நல்லது தானா? விநாயகர், முருகன் போன்ற தெய்வங்களின் படங்கள் முன்பு கிடைத்தன. இவையே பூஜைக்கு உகந்ததாகவும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. தற்போது சனீஸ்வரர், பைரவர், வாஸ்து புருஷன் போன்றோரின் படங்கள் விற்பனைக்கு வந்துவிட்டன. விற்பவர்களும், வாங்குபவர்களும் முன்பே கேட்டிருந்தால் யோசித்துச் செய்யும்படி கூறியிருக்கலாம். 


* ராமேஸ்வரத்தில் நீராடுபவர்கள் பழைய துணிகளை அங்கேயே விட்டு வருகிறார்களே ஏன்? நோய் நீங்கவும், பாவம் தீரவும் பக்தர்கள் இவ்விதமாகச் செய்கிறார்கள். இதனால் சுற்றுச்சூழல் தான் பாதிக்கப்படுகிறது. ஒருவகையில், இது பாவமும் கூட. இப்படி செய்யாமல், அங்கிருக்கும் ஏழை மக்களுக்கு புதிய ஆடைகளை வாங்கிக் கொடுத்தால் புண்ணியம் கிடைக்கும். 


பிரதோஷ காலத்தில் உணவருந்தக் கூடாது என்பது உண்மையா? ஒவ்வொரு நாளும் வரும் மாலைநேரமும் "பிரதோஷம்' தான். இதற்கு "இரண்ய வேளை' என்றும் பெயருண்டு. அதாவது, பெருமாள் நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யனின் குடலை எடுத்த நேரம். இந்த நேரம் வழிபாட்டுக்குரியது. அதனால், அந்த சமயத்தில் உணவருந்தக் கூடாது என்று சாஸ்திரம் விதித்திருக்கிறது. 


ருத்ராட்சத்திற்கு தீட்டு உண்டா? அல்லது எப்போதும் அணியலாமா? ""ஸூதகே மிருதகே சைவ ருத்ராட்சம் நது தாரயேத்'' என்பது சாஸ்திர வாக்கியம். அதாவது பிறப்பு, இறப்பு தீட்டுக்களின் போது ருத்ராட்சம் அணியக்கூடாது என்பது பொருள்.



* வீட்டில் யாருக்காவது அம்மை கண்டால் விளக்கேற்றி வழிபடக்கூடாது என்கிறார்களே! ஏன்? 
மாரியம்மன் அவர்களிடத்தில் இருப்பதாக ஐதீகம். அதாவது அம்பாளே ஒருவரிடத்தில் வந்து இருப்பதால் மற்றைய விசேஷ பூஜைகளை செய்யத் தேவையில்லை என்பதன் அடிப்படையில் இவ்வாறு சொல்வார்கள். இந்நேரத்தில், பத்தி, சாம்பிராணி போடுதல், கடுகு, மிளகாய் எண்ணெயில் வறுத்தல் போன்றவற்றை தவிர்ப்பது நலம். உடலில் கொப்புளம் இருக்கும் போது கமறுவது, இருமுவது போன்றவற்றால் அவர்கள் கஷ்டப்படுவர். அதைத் தவிர்க்கவே இந்த ஏற்பாடு. இவர்களுக்கு காய்ந்த திராட்சை சாறு கொடுக்கலாம். விபூதி பூசி வேப்பிலையால் தடவி மாரியம்மன் பாடல்களைப் பாடலாம். அந்தக் காலத்தில் கஸ்தூரி மாத்திரை கொடுத்தார்கள். தற்கால அறிவியல் பிரகாரம் தடுப்பூசி போடுகிறார்கள். 

** பெரியவர்களை சாஷ்டாங்கமாக வணங்கும்போது எந்தத் திசை நோக்கி இருக்க வேண்டும்? 
பெரியவர்களை வணங்க வேண்டும் என்று சொல்கிறீர்களே! அதற்காகவே உங்களை பாராட்டலாம். இந்த வழக்கமெல்லாம் இப்போது ரொம்பவே குறைந்து விட்டது. பெரியவர்கள் கிழக்கு அல்லது மேற்குமுகமாக இருக்கலாம். வடக்கில் தலை வைத்து வணங்கவேண்டும். தெற்கு நோக்கி நிற்கவோ, தலை வைத்து வணங்கவோ கூடாது. 

* வீட்டில் பூஜை செய்தால் போதாதா? கட்டாயம் கோயிலுக்குச் செல்ல வேண்டுமா? வீட்டில் பூஜை செய்தாலும் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தால் தான் சிறப்பு. இறைவன் எழுந்தருளியிருக்கும் திருக்கோயில் சந்நிதிக்கென்று விசேஷமான சக்திகள் நிறைய உள்ளன. அங்கு உச்சரிக்கப்படும் மந்திரங்களின் ஒலி அதிர்வுகள் கோயில் முழுதும் நிரம்பியுள்ளன. அந்த அருளைப் பெற கோயிலுக்குத் தான் செல்ல வேண்டும்.

* பெண்கள் சிதறுகாய் அடிக்கக் கூடாதாமே! ஏன்? ஆன்மிகம் சம்பந்தப்பட்ட வரையில் சில செயல்களைப் பெண்கள் தான் செய்ய முடியும். விளக்கேற்றுவது, முளைப்பாரி எடுப்பது போன்று எவ்வளவோ உள்ளன. அதுபோல, சிதறுகாய் உடைப்பது, பூசணிக்காய் வெட்டுவது போன்றவற்றை ஆண்கள் மட்டுமே செய்ய வேண்டும் என பெரியவர்கள் வகுத்துள்ளனர். மங்களகரமான, எளிமையான செயல்களைப் பெண்கள் செய்தால் நலம். கடினமான சில விஷயங்களை ஆண்களுக்கு ஒதுக்கியுள்ளதாக வைத்துக் கொள்ளுங்களேன்.

இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா? நீதிசாஸ்திரம் என்னும் நூல், நமது வாழ்வில் ஐந்து விஷயங்களை கவனத்துடன் கடைபிடிக்க வேண்டும் என கூறுகிறது. காலை வெயிலில் காய்வது, பிணப்புகையை சுவாசிப்பது, தன்னை விட வயது முதிர்ந்த பெண்ணை மணம்புரிவது, குட்டை நீரைப் பருகுவது, இரவில் தயிர்சாதம் உண்பது இவை ஐந்தும் கூடாது. அதே சமயத்தில் மாலை வெயிலில் காய்வது, வேள்விப்புகையை சுவாசிப்பது, தன்னை விட வயது குறைந்த பெண்ணை மணப்பது, சுத்தமான நீரைக் குடிப்பது, இரவில் பால்சாதம் சாப்பிடுவது ஆகிய ஐந்தும் ஆயுளை அதிகரிக்கச் செய்யும்.

** கடவுளுக்கும் திருஷ்டி கழிக்கிறார்களே. இது அவரது சக்தியைக் குறைத்து மதிப்பிடுவது போல இருக்கிறதே?  தெய்வீகசக்தி, தீயசக்தி என இரண்டுமே உலகில் இருக்கின்றன. தெய்வமாக போற்றப்படும் சுவாமி விக்ரஹத்திற்கு "பிராண பிரதிஷ்டை' (சக்தியை அதிகரிப்பது) முறையாக ஜெபிக்கப்படும் மந்திர முயற்சியால் தான். உடலுக்கு உணவு போல சிலைகளுக்கு மந்திரங்கள் ஆற்றலைத் தருகின்றன. திருஷ்டி போன்ற தீயசக்திகளால் அவற்றுக்கு தீங்கு நேராதபடி காப்பதற்காக திருஷ்டி போக்குவது அவசியமாகிறது. முறையான மந்திரங்கள் சொல்லாத இடங்களில் தான் சிலை திருட்டு, சிதிலமாதல் போன்றவை நடக்கின்றன என்று கூட சொல்லலாம்.

* புனிதநதிகளில் நீராடும் போது எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா?  எண்ணெய் ஸ்நானம் செய்யும் வழக்கம் கிடையாது. தீபாவளியன்று மட்டும் "தைலே லக்ஷ்மி' என்று நல்லெண்ணெயில் லட்சுமி வாசம் செய்வதாகச் சொல்வர். அதனால், தீபாவளியன்று மட்டும் விதிவிலக்கு. மற்ற நாட்களில் நதிகளில் சாதாரணமாக குளித்தாலே போதும்.

* ருத்ராட்சம் என்பதன் பொருள் என்ன? ருத்ரன்+ அக்ஷம் என்பதே ருத்ராட்சம். "சிவனின் கண்' என்று பொருள். சிவசின்னங்களில் ஒன்றாக திகழும் ருத்ராட்சத்தை அணிந்து கொண்டால் தீயசக்திகள் அணுகாது. இதை அணிந்து குளித்தால் கங்கையில் நீராடிய புண்ணியம் உண்டாகும். ருத்ராட்சம் அணிபவர்கள் மனத் தூய்மையோடு இருப்பது அவசியம்.

* கண்ணன் புல்லாங்குழல் வைத்தபடம் வீட்டில் வைத்தால் ஆகாது என்கிறார்களே. ஏன்?  குழல் ஊதும் கிருஷ்ணனால் செல்வம் கரையும் என்று சொல்வதெல்லாம் அறியாமை. கண்ணன் குழல் ஊதி பிருந்தாவனத்தில் மேயும் பசுக்களை ஒன்று சேர்த்தார். லட்சுமியின் அம்சமான பசுக்களால் செல்வவளம் பெருகும். இதேபோல, லட்சுமி நரசிம்மர், நடராஜர், சிவலிங்கம், காளி போன்ற தெய்வங்களை வீட்டில் வழிபடுவதால் நன்மையே கிடைக்கும்.

* குழந்தை பெற்று எத்தனையாவது மாதம் வரை தாய் பூஜையறைக்குச் செல்லக்கூடாது? 22 நாட்கள் வரை தான் பூஜையறைக்குச் செல்வது, சமைப்பது கூடாது. மறுநாள் முதல் வழக்கம் போல எல்லாம் செய்யலாம். வழிபாட்டில் முழுமையாக ஈடுபடலாம்.

* எலுமிச்சம்பழ மூடியில் விளக்கேற்றுவது சரிதானா? இது பற்றி சாஸ்திர ரீதியாக எதுவும் சொல்ல முடியாது. பிற்காலத்தில் பழக்கத்தில் வந்து விட்டது. எனினும் அனுபவத்தில் பலருக்கும் மனதிருப்தி தரும் வழிபாடாகி விட்டது. எனவே, செய்யலாம். தற்போது பூசணிக்காயில் கூட விளக்கேற்றுகிறார்கள். 

* சுபநிகழ்ச்சிகளில் எவர்சில்வர், பிளாஸ்டிக் பொருள் பயன்படுத்தலாமா? எவர்சில்வர் முழுமையான இரும்புப்பொருள் அல்ல என்பதால் பரவாயில்லை என்று நிலையில் பயன்படுத்தலாம். செம்பு, பித்தளையே மிகவும் உகந்தது. கோயில் வழிபாடு தவிர்த்து, திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்கலாம். கேரிபேக், தரம் குறைந்த பிளாஸ்டிக் போன்றவை மாசு உண்டாக்குவதால் அவற்றைத் தவிர்த்து விட வேண்டியது தானே! 

** பிரம்ம முகூர்த்தம் பற்றிச் சொல்லுங்கள். உலகம் தோன்றியது, உயிர்கள் பிறந்தன என்று சொல்கிறோம். தோன்றுதல், பிறத்தல் ஆகியவற்றை சிருஷ்டி என்கிறது சாஸ்திரம். இதைச் செய்பவர் பிரம்மா. அன்றாடம் பகலில் இயங்குவதும், இரவில் உறங்குவதும் மீண்டும் அதிகாலையில் எழுந்து பணிகளைத் தொடங்குவதும் உயிர்களின் இயல்பு. உறக்கத்தில் இருந்து எழுவது மறுபிறவி போன்றது. அதிகாலை 4.30- 6 என்பது பிரம்மா எழும் காலமாக (உலக இயக்கத்தின் சிருஷ்டி துவக்க நேரம்) இருப்பதால் அவரின் பெயரால் "பிரம்மமுகூர்த்தம்' என்றனர். எந்த தோஷமும் இல்லாத நேரம் இது.

* கோயில்களில் பெறும் விபூதி, குங்குமத்தை நெற்றியில் இட்டபின் மீதியை என்ன செய்வது? பிரசாதமாக விபூதி, குங்குமத்தை சிறிதளவே வாங்குங்கள். அர்ச்சகர்களும் போதுமான அளவு கொடுத்தால் போதும். மீதி இருந்தால் அதை வீட்டுக்கு கொண்டு வந்து பயன்படுத்துவதே நல்லது. கோயில் தூண்களில் குவித்து கலைச்சிற்பங்களை பாழாக்குவது சரியல்ல. அர்ச்சகர்களும் இதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* வலம்புரிச்சங்கை வீட்டில் வைத்து பூஜிப்பதால் நன்மை உண்டா? மங்கலப்பொருள்களில் சங்கும் ஒன்று. சிவனுக்கு கார்த்திகை சோமவாரத்தில் சங்காபிஷேகம் நடக்கும். பாஞ்சஜன்யம் என்ற சங்கினை விஷ்ணு தன் கையில் தாங்கியிருப்பார். பூஜையறையில் சங்கு இடம் பெற்றிருப்பது செல்வவளம் தரும். 

* நிறைந்த அமாவாசையில் சுபநிகழ்ச்சி நடத்தலாமா? அமாவாசை பிதுர்வழிபாட்டுக்குரிய நாள். ஆனால், நிறை அமாவாசை என்று பலரும் சுபநிகழ்ச்சி நடத்துகின்றனர். அவரவர் குடும்பப் பெரியவர்கள் அமாவாசையில் சுபநிகழ்ச்சி நடத்தியதாகவும் சொல்கின்றனர். அமாவாசை, பிரதமை ஆகிய இரு திதிகளும் முடிந்தபிறகு, வளர்பிறை துவிதியை முதல் சுபநிகழ்ச்சி நடத்துவதே நல்லது.

தாயை வணங்கினால் உண்டாகும் நன்மைகள் என்ன?  "தாயிற்சிறந்த கோயிலுமில்லை' என்பார்கள். பாலூட்டி சீராட்டி கண் போல காத்தவள் தாய். திருமணம், பணிவாய்ப்பு போன்ற சுபவிஷயங்களின் போது பெற்றோரை வணங்க வேண்டியது அவசியம். பெற்றோருக்கு பாதபூஜை செய்வது இதற்காகவே. ஜோதிட ரீதியாக தாயை வழிபட்டவருக்கு சந்திரன் நன்மை அளிப்பதாகச் சொல்வர். சந்திராஷ்டம நாட்களில் தாயை வணங்குவது பிரச்னையைத் தீர்க்கும்.

சாதத்தை எடுக்க காகம் வராவிட்டால் கிணற்றில் அதனைப் போடலாமா? கிணற்றில் போடுவதால் மீன் முதலிய உயிரினங்கள் பலன் பெறும். இருந்தாலும், குடிநீர் கிணற்றில் சாதத்தைபோட்டால் அசுத்தமாகி விடும். அதனால், ஏதாவது மரத்தடியில் வைத்தாலே காக்கை, குருவி போன்ற பறவைகள் வந்து உண்ணும். 

* வாரம் ஒருமுறை திருவிளக்கு பூஜை நடத்த விரும்புகிறேன். செய்யலாமா?  திருவிளக்கு பூஜை நடத்த பூர்வஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்கவேண்டும். வாரம் ஒருமுறை என்ன! வசதியிருந்தால் தினமும் கூட நடத்தலாம். உத்ராயண புண்ணிய காலமான தையிலேயே தொடங்கி விடுங்கள். அதிலும் தைவெள்ளி மிகமிக சிறப்பு. 

* எந்தெந்த கிழமையில் எந்தெந்த கடவுளை வணங்குவது சிறப்பு?ஞாயிறு - சூரியன், காளி, பைரவர், சிவன் 
திங்கள் - அம்பிகை, சந்திரன், நடராஜர்
செவ்வாய் - விநாயகர், முருகன், நரசிம்மர்
புதன் - விஷ்ணு, சரஸ்வதி, ஹயக்ரீவர்
வியாழன் - தட்சிணாமூர்த்தி, ராகவேந்திரர்
வெள்ளி - லட்சுமி, ரங்கநாதர், மாரி, 
சனி - ஏழுமலையான், சனீஸ்வரர், ஆஞ்சநேயர் 
ஆனால், இது ஒன்றும் விதியோ, கட்டாயமோ அல்ல! எந்த தெய்வத்தையும் எப்போது வேண்டுமானாலும் வழிபடலாம். பக்தி தான் முக்கியம். 

*சுவாமி சிலைகளில் எண்ணெய்ப் பிசுக்கைப் போக்க மாக்காப்பு போட்டிருக்கும்போது தரிசிக்கலாமா?கூடாது. காலை பூஜை முடிந்த பிறகு மாக்காப்பு போட்டு ஊறவைக்க வேண்டும். மாலை பூஜை ஆரம்பிக்கும் முன் சுத்தப்படுத்தி, அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாத்தி அலங்கரித்து அதன்பின்பே வழிபட வேண்டும்.

* பூஜையறையில் பீடம், மேற்கூரையில் கும்பம் போன்ற அமைப்பு வைத்துக் கட்டியுள்ளேன். இது சரியா?பூஜையறையில் சுவாமிபடங்கள், சிறிய விக்ரஹங்கள் வைத்து வழிபடலாம். பீடம் வைத்து பிரதிஷ்டை செய்தால் அஷ்டபந்தன மருந்து சாத்த வேண்டும். கும்பம் வைத்து விட்டால், அது கோயிலாகவே மாறிவிடும். வீட்டு பூஜைமுறை வேறு. கோயில் பூஜைமுறை வேறு. கோயிலில் வீடும், வீட்டில் கோயிலும் இருப்பது கூடாது.

* விரதம் இருப்பவர்கள் சாப்பிடாமல் தான் இருக்க வேண்டுமா? இறையுணர்வை அடைய உதவும் சாதனம் விரதம். விரதநாளில் உணவு, உறக்கம், சுகபோகங்களை மறந்து முழுமையாக இறைசிந்தனையில் ஈடுபட வேண்டும்.ஒரு வேளை மட்டும் உண்ண வேண்டும். காலை, இரவில் பால்,பழம் சேர்த்துக் கொள்ளலாம். தவறில்லை. விரதம் என்பதற்கு "உறுதியான தீர்மானம்' என்பது பொருள். இறை சிந்தனையில் மன உறுதியோடு ஈடுபட்டாலே விரதம் இருந்த பலன் கிடைத்து விடும். 

* பீமரத சாந்தி என்பதற்கான விளக்கம் தேவை. எழுபது வயது பூர்த்தியன்று செய்யப்படுவது பீமரத சாந்தி. யமனுக்கு உக்ரரதம், ருத்ரரதம், பீமரதம், விஜயரதம் என்ற கோரைப் பற்கள் உண்டு. இந்த பற்களினால் நமக்கு ஆயுள்பங்கம் ஏற்படாமலிருக்க 59 வயதில் உக்ரரத சாந்தியும், 69 வயதில் ருத்ர ரத சாந்தியும், 70 வயதில் பீமரத சாந்தியும், 75 வயதில் விஜயரத சாந்தியும் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால், நூறுவயது வரை நோய்நொடி இல்லாமல் வாழலாம் என்பது ஐதீகம்.

*கண்திருஷ்டி பற்றி விளக்கம் தேவை. பிறர் பார்த்து பிரமிக்கும் விதமாக ஒன்று இருந்தால் திருஷ்டி தோஷம் உண்டாகி விடும். இதனைப் போக்குவது அவசியம். மிளகாய் வத்தல், உப்பு, நடைபாதை மண் ஆகிய மூன்றாலும் திருஷ்டி பட்டவர்களுக்கு வலமாக மூன்று முறையும், இடமாக மூன்றுமுறையும் சுற்றி நெருப்பில் போட வேண் டும். இதனை "கண்ணேறு கழித்தல்' என்பார்கள். திருஷ்டி என்பது தவிர்க்க முடியாதது. கழித்து விட்டால் பாதிப்பு உண்டாகாது.


** கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்துவதன் நோக்கம் என்ன? கர்ப்பிணிகளுக்கு ஏழு அல்லது ஒன்பதாம் மாதத்தில் வளைகாப்பு நடத்துவர். காப்பு என்பது ரட்சை. தாயும், சேயும் பாதுகாப்பாக நலமோடு இருக்க வேண்டும் என்பதற்காகவே குலதெய்வத்தை வேண்டி இச்சடங்கை நடத்துகிறார்கள். கைநிறைய அணியும் கண்ணாடி வளையல்களால் எழும்பும் "ஜல்ஜல்' ஓசை கேட்டு குழந்தை விழிப்புணர்வைப் பெறுவதோடு, தாயோடு நெருங்கிய தொடர்பையும் பெறுகிறது. 

* ÷க்ஷத்திராடனம் சென்று வந்தவர்களை ஏன் சேவிக்க வேண்டும்? அருளாளர்களின் பாதம் பட்ட திவ்யதேசங்களை தரிசிப்பது புண்ணியம். அங்கு சென்று வந்தவர்களைச் சேவிப்பதன் மூலம் நாமும் அந்த புண்ணியத்தை பெறுகிறோம்."நல்லாரைக் காண்பதுவும் நன்றே' என்று அவ்வையார் சொல்வதும் இது போன்ற நல்ல விஷயம் குறித்தே.

*ஆரியங்காவு ஐயப்பன் திருமணமானவர் என்று சொல்கிறார்களே. உண்மையா? உண்மையே. ஆரியங்காவில் ஐயப்பன் புஷ்கலாதேவியுடன் மணக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். சபரிமலையில் யோகநிலையில் இருக்கும் அவரே ஆரியங்காவில் தம்பதி சமேதராக வீற்றிருக்கிறார். 

* ஏழரைச் சனிதோஷம் அகல என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? சனிதோஷம் நீங்க பிரதோஷத்தன்று சிவவழிபாடு செய்வது நல்லது. சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு துளசிமாலை அணிவித்து வணங்கலாம். நவக்கிரக மண்டபத்தில் உள்ள சனீஸ்வரருக்கு எள்தீபம் ஏற்றி வழிபடலாம். திருப்பதி வெங்கடேசப்பெருமாளை நினைத்து சனிவார விரதம் மேற்கொள்ளலாம். குலதெய்வ வழிபாடு மேற்கொண்டாலும் சனியின் கடுமை குறையும். 

* கல்யாணம் போன்ற சுபவிஷயங்களில் பூவும் தாருமாக குலையுடன் கூடிய வாழை மரத்தைக் கட்டுவது ஏன்? சுபநிகழ்ச்சிகள் நடக்கும் இடத்தை மங்களம் பொருந்தியதாக அலங்கரிக்க வேண்டும். மாவிலை, தென்னங்குருத்து தோரணம், வாழைமரம், மாக்கோலத்தை மங்களத்தின் அடையாளங்களாக சாஸ்திரம் கூறுகிறது. பொதுவாக எல்லோரும் விரும்புவது நம் குலம் தழைக்க வேண்டும் என்பதையே. பூவும் தாருமாக இருக்கும் வாழையின் அடியில் கன்றுகள் தோன்றி தழைக்கும். அதுபோல நம் வம்சமும் விருத்தியாக வேண்டும் என்று செய்கிறோம்.

* விபூதியை எந்த விரலில் எடுத்துப் பூச வேண்டும்? விபூதியை இரண்டு விதமாகப் பூசிக் கொள்ளலாம். குளித்தவுடன், தண்ணீரில் குழைத்து கட்டைவிரல், சுண்டுவிரல் நீங்கலாக மற்றைய மூன்று விரல்களாலும் பட்டையாக இட்டுக் கொள்ள வேண்டும். மற்ற நேரங்களில் மேற்படி விரல்களால் புழுதியாகப் பூசிக் கொள்ள வேண்டும். பெரும்பாலானவர்கள் சிறிய கோடாக இட்டுக் கொள்கின்றனர். இதற்கு மோதிர விரலை உபயோகிக்க வேண்டும். ஆள்காட்டி விரலால் இடுவது கூடாது.

* அக்னிஹோத்ர ஹோமம் என்றால் என்ன? வேதியர்கள் தினமும் ஆஹவனீயம், தக்ஷிணம், கார்ஹபத்யம் என்று மூன்று அக்னிகளுக்குரிய தேவர்களுக்கு ஹோமம் செய்ய வேண்டும். சந்தியாவந்தனம், அனுஷ்டானம் போன்ற நித்ய கர்மாக்களை செய்வது போல, தினமும் வீட்டில் செய்யவேண்டிய யாகம் அக்னிஹோத்ரம். அக்காலத்தில், அரசர்கள் நல்லமழை பெய்து நாடு சுபிட்சமாக இருக்கவேண்டி அக்னிஹோத்ரம் செய்ய வீடு, நிலம், மாதவருமானத்தை வேதியர்களுக்கு நிரந்தமாக அளித்திருந்தார்கள். இது மீண்டும் தொடர்ந்தால் நாட்டில் சுபிட்சத்திற்கு குறையே இருக்காது.

* குருவுக்கு அர்ச்சித்த பிரசாதத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாமா? பரிகாரமாக செய்யப்படும் பிரசாதத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடாது என்ற தவறான செய்தியை யாரோ கிளப்பி விட்டதால் பலரும் குழம்பிப்போய் இப்படி கேட்கிறார்கள். எந்த தெய்வத்துக்கு அர்ச்சனை செய்தாலும், அதற்குப் பிரசாதம் என்று தான் பெயர். தாராளமாக வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். பிரசாதம் இறைவனுடைய திருவருள் சக்தி வாய்ந்தது. அதனை எடுத்துச் செல்லலாமா, கூடாதா என்றெல்லாம் யோசிக்கக் கூட செய்யாதீர்கள்

** கலியுகம் எப்போது முடிவுக்கு வரும்? கலியுகம் மொத்தம் 4,32,000 ஆண்டுகள். தற்போது 5114 வருடங்களே கடந்துள்ளன. இப்போதே இப்படி இருக்கிறதே! இனி போகப் போக என்னாகுமோ என்ற ஆர்வத்தில் இந்தக் கேள்வியை கேட்டீர்களா! அல்லது இந்த யுகம் சீக்கிரம் முடிந்து, அடுத்த யுகத்தை நம் வாழ்நாளிலேயே பார்த்து விடலாம் என நினைத்தீர்களா... தெரியவில்லை. 

** வீட்டின் மொட்டை மாடியில் புறாக்கூண்டு அமைப்பது நல்லதா? எந்த பறவையையும் கூண்டில் அடைத்து வளர்ப்பது பாவச்செயல் தான். புறா இயல்பாகவே ஒற்றைக்காலில் நின்று ஆடிக் கொண்டு, ஒரு மாதிரி சப்தமிட்டுக் கொண்டேயிருக்கும். இது வீட்டுக்கு ஆகாது என்று பெரியவர்கள் சொல்வார்கள். 


* குழந்தையின் ஜென்ம நட்சத்திரப்படி தான் பெயர் வைக்க வேண்டுமா? குழந்தையின் ஜென்ம நட்சத்திரப்படி பெயர் வைக்கலாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால், இப்படித் தான் வைக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. பெற்றவர்கள் அவர்களின் பெற்றோர் பெயரிட விரும்புவார்கள் அல்லது குடும்ப குருவிடம் கேட்டும் வைப்பார்கள். எல்லாமே சரி தான். 


* எனது வீடு தெருக்குத்தில் (தெருக்களின் சந்திப்பில் உள்ள வீடு) உள்ளதாகச் சொல்கிறார்கள். அதைச் சரிசெய்ய ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள். இல்லாவிட்டால் விற்க முடிவு செய்துள்ளோம்.

வாங்குவதற்கு முன்னும் யோசிக்கவில்லை. உங்களிடம் வாங்கப் போகிறவர்களைப் பற்றியும் யோசிக்கவில்லை. சரி....போகட்டும்! இந்த வீடு வாங்கிய பிறகு உங்களின் மனநிலை, வாழ்க்கைத்தரம் எப்படி இருக்கிறது என்பதை யோசித்து முடிவு செய்யுங்கள். மற்றவர் ஆயிரம் சொன்னாலும் அவற்றை அப்படியே எடுத்துக் கொள்ளவேண்டும் என்ற அவசியமில்லை. வாசலில் ஒரு பிள்ளையார் சிலை வைத்து பூஜித்து வந்தால் தெருக்குத்து தோஷம் நீங்கிவிடும். உங்களின் வாழ்வு படிப்படியாக உயரும்.

* தீபத்தை வாயால் ஊதி அணைக்கக் கூடாது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், பிறந்தநாளில் குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏற்றி அணைப்பது ஏற்புடையதா? பெரியவர்கள் இது போன்ற நல்ல விஷயங்களைச் சொல்லி வைத்த காலத்தில், பிறந்தநாளன்று மெழுகுவர்த்தி அணைத்தல், கேக் வெட்டுதல் போன்ற கலாசாரம் நம்மிடத்தில் வரவில்லை. வெள்ளையர்களின் வரவால் விளைந்த ஒரு சில சீர்கேடுகளில் இதுவும் ஒன்று. இது தவறு என்று நாம் சொல்வதைச் சொல்லிக் கொண்டிருப்போம். 


* உடலை விட்டு உயிர் எங்கே போகிறது? உயிர்களுக்குப் பல பிறவிகள் உண்டு. ஒவ்வொரு பிறவியிலும் பாவ, புண்ணியத்திற்கு தகுந்தாற்போல புல், புழு முதலாக மனிதன் வரையில் உடல் நமக்கு கிடைக்கிறது. பாவச் சுமை குறைந்தால் தான் மனிதப்பிறவி கிடைக்கும். அரிதான மனிதப்பிறவி கிடைத்தும் புண்ணியத்தைத் தேடாமல் பாவச் சுமையை அதிகரித்தால் மீண்டும் பூமியில் பிறப்பு உண்டாகும். பாவம் முற்றிலும் நீங்கிவிட்டால் இறைவன் திருவடியில் பேரின்பவாழ்வு பெற்று மகிழலாம்.

* பைரவர் ஆடையின்றி இருப்பது ஏன் என்று விளக்குங்கள். பைரவருக்குத் திகம்பரர் என்ற பெயர் உண்டு, "திக் அம்பரர்' என்பதே திகம்பரர். "திக்' என்றால் "திசை'. "அம்பரம்' என்றால் "ஆடை'. திசைகளையே ஆடையாக அணிந்தவர் என்பது பொருள். அதனால், நம் ஊனக்கண்கள் கொண்டு அவரைப் பார்க்கக்கூடாது. அவரும் "திசை' ஆடை அணிந்தவர் தான். ஜைனர்களிலும் இப்படி ஒரு பிரிவினர் இருக்கிறார்கள்.

** பழைய துணிகளை தானமாக பிறருக்குக் கொடுக்கலாமா? பழைய துணிகளைக் கொடுக்கலாம். ஆனால், அதை தானம் என்று சொல்லக்கூடாது. உங்களால் உபயோகிக்க முடியாததை வைத்துக் கொள்ள இஷ்டப்படாததைத் தானே கொடுக்கிறீர்கள். தானம் என்பது வாங்குபவர்கள் மனம் மகிழ, புதிதாக வாங்கிக் கொடுப்பது தான்.


* குரு பார்க்க கோடி நன்மை என்பது ஏன்?  நவக்கிரகங்களில் முழுமையான சுபகிரகம் குரு. இவர் தேவர்களுக்கு பாடம் போதிக்கும் குருவுமாவார். எனவே, இவரது பார்வை எந்த ராசியின் மீது பட்டாலும் எல்லாத் தோஷங்களும் நீங்கிவிடும். ஒருவருடைய ராசிப்படி ஏழரைச்சனி நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த ராசிக்கு குரு பார்வை இருந்தால் கெடுதல் விளையாது என்பதையே குரு பார்க்க கோடி நன்மை என்கிறார்கள். "கோடி' என்றால் "அளவு கடந்த' என்றும் பொருள் உண்டு.


* எவர்சில்வர் குத்துவிளக்கினை வீட்டில் ஏற்றலாமா? இரும்பில் செய்யப்படும் குத்துவிளக்கு, பாத்திரங்களை பூஜைக்கு உபயோகிப்பதில்லை. இரும்பை பூஜைக்கு உபயோகிக்கலாகாது என்பது சாஸ்திரம். இருப்பினும், எவர்சில்வர் என்பது முழுமையான இரும்பு கிடையாது என்பதால் மன சஞ்சலமில்லாமல் தாராளமாக ஏற்றலாம். 


* வயோதிகத்தினாலும், உடல் நலக்குறைவினாலும் 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை வாசல் தெளித்து மாக்கோலம் இடுகிறேன். இது சரியா இல்லை தினமும் கோலம் இடத்தான் வேண்டுமா? 
உடல்நலக்குறைவு, வயோதி கம் என்று சொல்லி விட்டால் அப்பீலே கிடையாது. உதவிக்கு ஆட்களும் இல்லை என்னும் போது, வேறு என்ன வழி? எனவே, நீங்கள் இதற்கெல்லாம் கவலைப்படவேண்டாம். இத்தனை நாட்கள் செய்து வந்தது உங்களைக் காப்பாற்றும். இனி இயன்றபோது செய்து வாருங்கள். இத்தனை வயதிலும் தெய்வ காரியங்களைச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களே! அதுவே மகிழ்ச்சியைத் தருகிறது.

** குழந்தைக்கு ஞாபகசக்தி அதிகரிக்க ஏதாவது ஸ்லோகம் சொல்லுங்கள். படி! படி! என்று அவர்களை எப்போதும் தொந்தரவு செய்யாமல் இருங்கள். சுயமாக யோசிக்கப் பழக்குங்கள். விளையாட்டாகப் பேசும் வழக்கிலேயே பாடங்களை நினைவுபடுத்திக் கொண்டிருங்கள். பிறரோடு ஒப்பிட்டுப் பேசுவதைக் கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள். அதுவே போதும். அவர்களது தன்னம்பிக்கை வளர்வதற்கு! தினமும் உதய வேளையில் சூரியனைப் பார்த்தவாறு, ""புத்தி வர்த்தக தேவேச திவாகர நமோஸ்துதே'' என்ற மந்திரத்தை 12 முறை சொல்லச் சொல்லுங்கள். ஒவ்வொரு முறை சொல்லி முடித்ததும், சூரியனை நமஸ்காரம் செய்யச் சொல்லுங்கள்.

* நாளும் கோளும் நலிந்தோருக்கு இல்லை என்பது உண்மைதானா? நலிந்தோர் என்றால் ஏழைகள் அல்ல. திடீரென ஒரு பிரச்னை ஏற்பட்டு உடனடியாக நிவாரணம் செய்ய வேண்டிய நிலையில் இருப்பவர்களையே நலிந்தவர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். இவர்கள் இக்கட்டான சூழ்நிலையில் நாளும் கோளும் பார்க்க வேண்டியதில்லை. 


* வீட்டில் சிவலிங்கம் இருந்தால் நந்தி சிலை வைக்க வேண்டுமா? தேவையில்லை. சமயத்தில் உங்களிடம் கோபித்துக் கொண்டு நந்தி மீது ஏறி சென்றாலும் சென்று விடுவார். ஏராளமான சுவாமி விக்ரஹங்களை வைத்துக் கொண்டு சரிவர பூஜை செய்ய முடியாமல் கஷ்டப்பட வேண்டாமே என்பதையே விளையாட்டாகச் சொன்னேன். வாழ்த்துக்கள்.


* மலரைப் பறித்ததும் முகர்ந்து பார்க்கக் கூடாது என்பது ஏன்? இறைவனுக்காக வைத்திருக்கும் எந்தப் பொருளையும் இப்படித்தான் கையாள வேண்டும். அபிஷேகப்பொருள், மலர், நைவேத்யம் இப்படி எல்லாமே எந்த வகையிலும் நாம் உபயோகிக்காததாக இருக்க வேண்டும். பூஜை தவிர மற்ற தேவைக்காக பறிக்கப்படும் பூக்களை முகர்ந்து பார்க்கலாம்.


* பெண்கள் வாசல்படியில் அமரக்கூடாது என்கிறார்களே ஏன்? வாசல்படி, நிலை இவற்றிலெல்லாம் பொதுவாக உட்காரக்கூடாது. கடன் தொல்லை அதிகமாகும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். "கடன்காரன் மாதிரி ஏன் வாசலில் உட்கார்ந்திருக்கிறாய்?' என்று கேட்பது கூட வழக்கத்தில் இருக்கிறது.


* அம்மனுக்கு சாத்திய புடவையை ஏலத்தில் எடுத்து பெண்கள் வாங்கி உடுத்துவது சரியா? அந்தப் புடவையை அம்மன் பிரசாதமாக ஏற்று அணியலாம். ஏலத்தில் கிடைக்கும் பணம் கோயில் செலவுக்குத் தானே உபயோகிக்கப்படுகிறது.

* சாலையோர கோயில்களுக்கு காணிக்கையை வாகனத்தில் அமர்ந்தபடியே வீசிச் செல்வது சரிதானா? வண்டியை நிறுத்தி சற்றுநேரம் இறங்கி அந்த தெய்வத்தை வணங்கிவிட்டு, உண்டியலில் காணிக்கை செலுத்தி விட்டு சென்றால், தெய்வத்திற்கு மரியாதை செய்வதாக இருக்கும். சில நேரங்களில், உங்கள் காணிக்கை அங்கு நிற்கும் வேறு யாரோ சிலர் கையில் சிக்கவும் வாய்ப்புண்டு. என்ன அவசரம்! இறங்கியே காணிக்கை செலுத்தி விட்டு செல்லுங்கள்.

* கோயில் குளத்தில் உப்பு மிளகு இடுவதன் நோக்கம் என்ன? உடலில் பருக்கள், கட்டிகள், தீப்புண்கள், தழும்பு ஏற்பட்டால் கோயிலுக்கு உப்பு, மிளகு காணிக்கை செலுத்துவதாக வேண்டிக் கொள்ள வேண்டும். இறைவன் அருளால் அவை மறைந்துவிடும். நேர்த்திக்கடனாகிய உப்பு மிளகை வாங்கி கோயிலில் செலுத்த வேண்டும். குளத்தில் போடக்கூடாது. உப்பைப் போடுவதால் குளத்து நீர் மாசுபடுவதுடன் நீர்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படும். குளத்துக்குள் பாலிதீன் பேப்பர்களும் மிதக்கும்.


* பரிகார பூஜை செய்தால் துன்பத்தை அடியோடு தவிர்க்க முடியுமா? ஒருவருக்குக் கடுமையான தலைவலி வந்துவிட்டது. சாதாரண டாக்டர்களை நம்பாமல் மிகப்பெரிய மருத்துவமனையில் உள்ள டாக்டரிடம் காண்பித்தார். அவரும் மருந்து மாத்திரை கொடுத்தார். தலைவலி தீருமோ, தீராதோ என்ற அவநம்பிக்கையுடன் மருந்தைச் சாப்பிட்டதால் தலைவலி தீரவில்லை. பிறகு இதைப்போலவே நம்பிக்கையில்லாமல் பல டாக்டர்களிடமும் மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை. கடைசியாக அமெரிக்காவில் வைத்தியம் செய்து கொள்ள முடிவெடுத்தார். அங்கு ஒரு டாக்டரைப் பார்த்து தன் கதையை ஆரம்பத்திலிருந்து எடுத்துச் சொன்னார். பலவகையான டெஸ்டுகளை செய்தபின் ஒரு மருந்துப்பொடியைக் கொடுத்தார். அவரும் அதை சாப்பிட்டார். சிறிது நேரத்திலேயே குணம் தெரிந்தது. ""தீராத என் தலைவலியை ஒரு பொட்டல மருந்திலேயே குணப்படுத்தி விட்டீர்களே!'' என்று ஆச்சரியம் கொண்டார். டாக்டர் அவரிடம்,""உங்கள் நம்பிக்கை குறைவினால் தான் தலைவலி தொடர்ந்தது. இப்போது தான் நம்பிக்கையுடன் சாப்பிட்டதும் தலைவலி தீர்ந்து விட்டது,'' என்றார். இந்த கதைபோலத் தான் உள்ளது உங்களின் கேள்வி. எதையும் நம்பிக்கையில்லாமல் செய்யாதீர்கள். நம்பிக்கை முழுமையாக இருந்தால் பலன் நிச்சயம் கிடைக்கும்.


** மனிதர்களாகப் பிறந்தவர்களை மகான்கள் என்று போற்றிக் கொண்டாடுவது சரிதானா? மனிதர்களில் உயர்ந்தவர்களை, அதாவது தெய்வம் போல் பாரபட்சமின்றி உதவுபவர்களை "மகான்' என்று வேதங்கள் கூறுகின்றன. உண்மை, தவம், தியாகம், மக்கள் தொண்டு, மனதால் கூட நெறி பிறழாமை இது போன்ற குணங்கள் ஒட்டு மொத்தமாக ஒருவரிடம் இருந்தால் அவர் தான் மகான். மகாத்மாவாக போற்றப்பட வேண்டியவர் அவர். "தைத்ரீய உபநிஷத்' என்னும் வேதப்பகுதியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. தங்களைத் தாங்களே மகான்களாகக் காட்டிக் கொள்பவர்களை வைத்து, உண்மை மகான்களைப் போற்றத் தவறிவிடாதீர்கள்.


* அமாசோமவாரம் என்றால் என்ன? திங்கட்கிழமையும், அமாவாசையும் சேர்ந்து வந்தால் "அமாசோமவாரம்' என்று பெயர். அன்றையதினம் விடியற்காலையில் அரசமரத்தை மூன்றுமுறை வலம் வந்து வணங்கினால் நோய்நொடி இல்லாமல் வாழலாம்.

* லலிதாசகஸ்ரநாம பாராயணத்தின் மகத்துவத்தைக் கூறுங்கள்.  ஓம் ஸ்ரீ மாத்ரே நம: என்னும் முதல் நாமாவளியே உயர்ந்தது தான். மாதா என்றால் அன்னை. தாய்க்கு நமஸ்காரம் என்பது இதன் பொருள். உரையாசிரியர்களின் உரையினால் சிறப்பு பெற்றவை இரண்டு. ஒன்று லலிதா சகஸ்ரநாமம். மற்றொன்று விஷ்ணுசகஸ்ரநாமம். பாஸ்கரராயர் என்பவரால் "ஸெளபாக்ய பாஸ்கரீ' என்னும் பெயரில் உரை எழுதப்பட்டது லலிதாசகஸ்ரநாமம். அவர் தமது உரையில் முதல் நாமாவளியாகிய ஸ்ரீமாதா என்பதற்கு மட்டுமே மிக விரிவாக உரை எழுதியுள்ளார். மாதா என்றால் தாய். ஸ்ரீமாதா என்றால் எல்லையில்லாக் கருணையுடைய தாய். ஆனால் உரையாசிரியர் பல பொருள் தரும் ஒரு சொல்லாக அதனைக் குறிப்பிடுகிறார். "ஸ்ரீ' என்பதற்கு அழகு, பெருமை, மகிமை, செல்வம், லட்சுமி என்னும் பொருள்களோடு விஷம் என்ற பொருளும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்த போது வெளிப்பட்ட விஷத்தால் பலர் மூர்ச்சையாயினர். எல்லோரும் சிவனைத் தஞ்சம் அடைந்தனர். அவர்களைக் காப்பாற்ற, விஷத்தைத் தானே விழுங்க முன்வந்தார் அவர். விஷத்தின் கொடுமையால் பெருமானது உடலிலும் வயிற்றிலும் உள்ள மற்ற உலகங்கள் பாதிக்கப்படுமே என்று அஞ்சினாள் உமாதேவி. தொண்டையிலேயே தடுத்து நிறுத்தி உயிர்களைக் காப்பாற்றினாள். ஸ்ரீ என்றால் விஷம். "மாதி' என்றால் தடுத்து நிறுத்தியவள் என்று பொருள். இலக்கணக் குறிப்புகளால் ஸ்ரீமாதி என்பதே "ஸ்ரீமாதா'வாகி நாமாவளியில் நான்காம் வேற்றுமையாக "ஸ்ரீமாத்ரே நம:' என்றாகியது என்று அவரது உரையில் உள்ளது. எனவே, லலிதா சகஸ்ர நாமாவளிகளில் எல்லாமே உயர்ந்தவை தான். எப்போது வேண்டுமானா<லும் பாராயணம் செய்யலாம். இதனால் வாழ்வில் எல்லா சவுபாக்கியங்களும் கிட்டும்.

* ஒரே குடும்பத்தில் ஒரே நட்சத்திரத்தில் இரு குழந்தைகள் இருந்தால் பரிகாரம் செய்ய வேண்டுமா?

அப்படி எதுவும் சாஸ்திரங்களில் கூறப்படவில்லை. இது இயற்கையாக நிகழ்வது. நல்லதாகவே எடுத்துக் கொள்வோமே.

** பெரியவர்கள் ஆசிவழங்கும்போது அட்சதை போடுவது ஏன்? அட்சய, அட்சத என்ற சொற்களுக்கு "குறைவில்லாதது' என்று பொருள். மணிமேகலையின் அட்சய பாத்திரம் எடுக்க எடுக்க குறையாதது. அரிசியில் மஞ்சள் பொடியைக் கலந்து அட்சதையாக்கி பெரியவர்கள் நம் மீது போட்டு வாழ்த்துவதால், வாழ்வில் எந்த குறைவும் ஏற்படாது.


சிவன் கோயிலில் முதலில் வணங்கவேண்டியது அம்மனா? சுவாமியா? வீட்டில் முதல்மரியாதை மனைவிக்கா கணவருக்கா? சுவாமியைத் தானே முதலில் வழிபடவேண்டும். எனினும் மதுரையில் இருந்து கேட்பதைப் பார்த்தால் ஏதோ விஷயம் இருக்கிறது என்பது புரிகிறது. மதுரையில் மீனாட்சிக்குத் தான் முதல்பூஜை. பிறகுதான் சுந்தரேஸ்வரருக்கு. சுவாமி அங்கு மட்டும் விட்டுக் கொடுத்திருக்கிறார்.

** கும்பாபிஷேகத்தின் போது கோபுர கலசத்தில் வரகு தானியத்தைஏன் போடுகிறார்கள்? கோபுரகலசம் தெய்வசக்தியை வரவழைக்கும் ஆற்றல் உடையது. மூலஸ்தானக் கருவறையில் இருக்கும் தெய்வ விக்ரஹத்தின் சக்தியானது இதன் மூலமே பெறப்படுகிறது. இக்கலசம் இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்படாமல் இருக்க அதனுள் வரகு தானியம் இடப்படுகிறது. அதாவது மிக உயரத்தில் இருக்கும் உலோகத்தால் ஆன கோபுர கலசத்தை மின்னல், இடி போன்றவை தாக்கும் வாய்ப்புகள் அதிகம். வரகு, மின்னலின் சக்தியை செயலிழக்கச் செய்து விடும். இந்ததானியத்திற்கு இயற்கையாக இத்தன்மை உண்டு. கோபுரக்கலசங்களின் வாயிலாக அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கூட இடி தாக்காமல் பாதுகாக்கும்அரிய முறையினை நம் ஆன்றோர்கள் அக்காலத்திலேயே கண்டுபிடித்துள்ளனர்.

* பெண்கள் கோயிலில் முடிக் காணிக்கை செலுத்தலாமா? பெண்குழந்தைக்கு ஏழுவயதுக்குள் முடியிறக்கும் வேண்டுதல்களை நிறைவேற்றி விட வேண்டும். முடியாத பட்சத்தில் ஒன்பது வயதுவரை செய்யலாம். அதற்குப்பிறகு பெண்கள் முடியிறக்குவது கூடாது. அதுவும் திருமணமான பெண்கள், சுமங்கலிகள் என்ற பெயர் பெற்று விடுவதால் கண்டிப்பாக முடியிறக்கக் கூடாது.


* கடவுளை நேருக்குநேர் நின்று வணங்குவது அல்லது ஒருபக்கமாக நின்று வணங்குவது எது சரியானது?

இறைவனுக்கு மூன்று கண்கள். இவற்றில் நெற்றிக்கண் நெருப்பு வடிவமானது. இந்த பார்வை நன்மை அளிக்காது. மற்றைய இரு கண்கள் சூரியசந்திர வடிவமானவை. இவை நன்மை பயக்கக்கூடியவை. தெய்வத்தின் கடைக்கண் பார்வை தான் நமக்கு வேண்டும். இதைத் தான் ""கடாக்ஷம்'' என்பர். ""கட'' என்றால் கடைசி. ""அக்ஷம்'' என்றால் கண். அதாவது, கடைக்கண் பார்வை. இது கருணையே வடிவமானது. சகல ஐஸ்வர்யங்களையும் தர வல்லது. அதற்காகத்தான் நேருக்குநேர் நின்று தரிசிக்காமல் பக்கமாக நின்று வழிபட வேண்டும்.

* வடக்கு நோக்கி தலை வைக்கக் கூடாதாமே! ஏன்? தன் ஊரில் கிழக்கேயும், வேற்று ஊரில் மேற்கேயும் தலை வைத்துப் படுக்க வேண்டும் என்பது கிராமத்துப் பழமொழி. பொதுவாக இந்த நியதி சாஸ்திரங்களிலும் காணப்படுகிறது. ஆனால், தெற்கே தலை வைத்துப் படுப்பது, சில இடங்களில் காலங்காலமாக வழக்கத்தில் இருக்கிறது. வடக்கே தலை வைத்துப் படுக்கக்கூடாது. இது வீட்டுக்கு ஆகாது என்று சொல்வர். வடக்கில் காந்த ஈர்ப்பு சக்தி அதிகமுண்டு என்றும் அதனால், மூளை பாதிக்கப்படும் என்ற கருத்தும் இருக்கிறது. திசை காட்டும் கருவியின் முள் வடக்கு நோக்கி திசை காட்டுவது, அந்த திசையின் காந்த சக்தியால் தான்.

* அரச மரத்தை மாலையில் சுற்றக் கூடாது என்று சொல்வதன் பொருள் என்ன? சூரிய உதய காலத்தில் லட்சுமி நாராயணர் அரசமரத்தில் இருந்து அருள்கிறார். அந்த நேரத்தில் வலம் வந்தால் கேட்டது கிடைக்கும். பொதுவாக மரங்கள் பகலில் ஆக்சிஜனையும், இரவில் கார்பன் டை ஆக்ஸைடையும் வெளிப்படுத்தும் இயல்புடையவை. அதுவும் விடியற்காலையில் அரசமரம் வெளியிடும் பிராணவாயு உடலுக்கு மிகவும் நல்லது. மாலைநேரத்தில் இந்நிலை மாறிவிடுவதால் கூடாது என்றும் கூறுகின்றனர்.

புத்தாடைகளில் மஞ்சள் வைத்து உடுத்துவது ஏன்? சுபநிகழ்ச்சிகளுக்குப் புத்தாடை அணியும்போது மங்களத்தின் சின்னமான மஞ்சளைத் தடவி அணிவது நம் மரபு.


** இறைவனை வணங்கும்போது சிலர் கைகளை தலைக்குமேல் தூக்கி வணங்குகிறார்கள். சிலர் கைகளைக் குவித்து முகத்திற்கு அருகில் வைத்து வணங்குகிறார்கள். எது சரியானது? இரண்டுமே சரியானது தான். ஒரு விரலால் கன்னத்தில் தட்டிக் கொண்டும், ஆள்காட்டி விரலை மடக்கி வாயில் வைத்து "ச்' கொட்டியும் வணங்கும் இன்றைய நாகரிகத்தில், கைகளைக் கூப்பி வணங்குபவர்களை முதலில் நாம் வணங்கலாம். கரம் குவித்தல், சிரம் குவித்தல் என இரண்டையுமே மாணிக்கவாசகர் சிவபுராணத்தில் கூறுகிறார். தாங்கள் முதலாவதாகக் கூறியது சிரம் குவித்தலையும், இரண்டாவதாகக் கூறியது கரம்குவித்தலையும் சாரும். கரம் குவித்து வணங்கினால் சுவாமி சந்தோஷப்பட்டு கேட்டதைத் தருகிறார். சிரம் குவித்து வழிபட்டால் வாழ்க்கைத் தரத்தையே உயர்த்தி விடுவார். சிவபுராணத்தில், ""கரங்குவிப்பார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க; சிரங்குவிப்பார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க'' என்று மாணிக்கவாசகர் பாடுகிறார்.


கல்வியில் சிறந்து விளங்க சொல்ல வேண்டிய மந்திரம் என்ன? அதன் பொருளையும் சொல்லுங்கள்.
பெற்றோர், ஆசிரியர்களின் அன்பும் ஆதரவும் நிறைந்த வார்த்தைகள் தான் முதல்நிலை. குழந்தைகளிடம் தன்னம்பிக்கை வளர கீழ்க்கண்ட மந்திரத்தையும் சொல்லிக் கொடுங்கள்.

""சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி

வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவது மே ஸதா'' 
பொருள்: எல்லா வரங்களையும் தந்தருளும் சரஸ்வதி தாயே! எனக்கு கல்வி அறிவைப் பெருகச் செய்வாயாக! உனக்கு நமஸ்காரம். 

தெய்வங்களுக்கு உகந்த மலர்கள் யாவை? எந்த தெய்வத்திற்கு எந்த மலர் சூட்ட வேண்டும்? எருக்கு, செண்பகம், கொன்றை, நந்தியாவர்த்தம், மல்லிகை, காக்கரட்டை, அரளி, பவழமல்லி, மகிழம்பூ, செம்பருத்தி, தாமரை, அல்லி, மருதோன்றிப்பூ, வில்வம், துளசி, மரிக்கொழுந்து, மருள் ஆகியவை உகந்தவை. விநாயகருக்கு எருக்கு, அருகம்புல், முருகனுக்கு அரளி, மல்லிகை, சிவனுக்கு வில்வம், விஷ்ணுவுக்கு துளசி,பவழமல்லி, அம்மனுக்கு எருக்கு நீங்கலாக மற்ற பூக்கள் சிறப்பானவை. சிவனுக்கு செம்பருத்தி கூடாது.


சபரிமலை செல்லும்போது பம்பை நதிக்கரையில்திதி கொடுக்கலாமா?

பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி.
புண்ணிய நதிக்கரையில் திதி கொடுப்பது விசேஷமானது. பம்பை நதிக்கரையில் தாராளமாகத் திதி கொடுக்கலாம்.


* ஒருவருக்கு ஏழரைச்சனி முடிந்த பிறகும் எள்தீபம் ஏற்றி வழிபடலாமா? செய்வதானால் ஒன்றும் தவறில்லை. நமக்காக இல்லாவிட்டாலும் பொதுவாகக் குடும்பத்தாருக்காக தொடர்ந்து எள்தீபம் ஏற்றி வழிபடலாம்.


* குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவத்தைக் கூறுங்கள்? குலம் என்றால் குடும்ப பாரம்பரியம் என்று பொருள். நமது குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை நமது முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள். தனது அடுத்த சந்ததியினர் நன்றாக இருக்க வேண்டும் என்பதே குலதெய்வ வழிபாட்டின் முக்கிய குறிக்கோள். குழந்தைகளுக்கு முடிஎடுப்பது, காது குத்துவது, திருமணப்பட்டுப்புடவை, திருமாங்கல்யம் போன்றவற்றை வைத்துக் குலதெய்வபூஜை செய்வது, நாமும் நம் குலமும் (எதிர்கால சந்ததி) தழைக்கச் செய்யப்படுவதாகும்.


ராசிக்கல்மோதிரம் அணிந்தால் வாழ்க்கை உயருமா? ராசிக்கல் என்ன என்பதைப் பற்றியும், அதை அணிவதால் என்ன பலன் என்பது பற்றியும் சாஸ்திர நூல்களில் எதுவும் ஆதாரங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. புதிதாக வந்துள்ள செய்திகளைப் பற்றி கருத்து கூற விரும்பவில்லை. 


** சித்தர்களின் படங்களை வீட்டில் வைத்து வழிபடலாமா? தெய்வப்படங்களை வீட்டில் வைத்து வழிபடுகிறோம். காரணம் தெய்வத்திடம் வரம் பெற்று நலமாய் வாழவேண்டும் என்பது. மகான்களின் படத்தை வீட்டில் வைத்து வழிபடுகிறோம். காரணம் ஏதாவது சூழ்நிலையில் நாம் தவறு செய்ய முற்படும்போது அவர்களின் அருளுரைகள் நம்மைத் தடுத்து நிறுத்துவதற்காக. 18 சித்தர்களும் மனிதநேயமே உருவாக வாழ்ந்தவர்கள். கண்ணுக்குத் தெரியாமல் இன்னும் வாழ்வதாகக் கூறுகிறார்கள். தமக்கென எதுவுமே செய்து கொள்ளாமல் பிறருக்குத் தொண்டு செய்வதையே வாழ்க்கையாகக் கொண்டவர்கள். அவர்களது கொள்கையைக் கடைபிடிக்க விரும்பினால் தாராளமாக சித்தர்களின் படங்களை வீட்டில் வைத்து வழிபடுங்கள். ஜோதிடம், வாஸ்து, பரிகாரம் என்று கூறி அவர்களைத் தாழ்த்தி விடாதீர்கள்.

** இக்கால குழந்தைகளிடம் பக்தியை எப்படி வளர்க்க வேண்டும்? முதலில் பெற்றோர் தினமும் வழிபாடு செய்ய வேண்டும். பூஜைக்கு தேவையான உதவிகளான பூப்பறித்தல், விளக்கேற்றுதல், கோலமிடுதல் போன்றவற்றைச் செய்ய பழக்கவேண்டும். பக்திப்பாடல்கள், ஸ்தோத்திரங்கள் சொல்லும்போது அவர்களையும் நம்முடன் சேர்ந்து சொல்லச் செய்ய வேண்டும். சினிமா, சீரியல் குழந்தைகளுடன் சேர்ந்து பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் தெய்வீக விஷயங்கள், கதைகள், புராணங்களை எடுத்துச் சொல்ல வேண்டும். நம் குழந்தைகள் நல்லவர்களாகவும், தெய்வபக்தி உள்ளவர்களாகவும் வளர்வதற்கான முறையில், முதலில் பெரியவர்கள் தங்களைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டியதும் இதற்கு அவசியம். 

* 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்துவது ஏன்? ஆண்டுதோறும் பொங்கல் வருகிறது. வீட்டைச் சுத்தம் செய்து வர்ணம் தீட்டி கொண்டாடுகிறோம். அதுபோல, கடவுள் குடியிருக்கும் கோயிலை 12 ஆண்டுக்கு ஒருமுறையாவது சுத்தம் செய்து வர்ணம் தீட்டி கும்பாபிஷேகம் செய்யவேண்டும் என்கிறார் காஞ்சிப்பெரியவர். சுவாமி பீடத்தில் சாத்தப்படும் அஷ்டபந்தனமருந்து 12 ஆண்டுகளில் வலிமை இழந்து கரையத் தொடங்கிவிடும். எனவே, புதிதாக மருந்து சாத்தி, திருப்பணிகளையும் செய்துவிட்டால் தெய்வ சாந்நித்யம் குறையாமல் விளங்கும்.


* பணிக்காக கணவர் அதிகாலை வெளியூர் கிளம்பிய பிறகு மனைவி வாசல் தெளித்து கோலமிடுவது சரியா? காலை முதல் இரவு வரை செய்யப்படும் எல்லா விஷயங்களும் நல்லபடியாக அமையவேண்டும் என்பதற்காகத் தான் வாசல் தெளித்து கோலமிட்டு அந்த நாளை மங்களகரமாக தொடங்குகிறோம். எவ்வளவு அதிகாலை வேளையில் புறப்பட்டாலும், அதற்கு முன் வாசல் தெளித்து கோலமிட்டு, குளித்து, சுவாமி விளக்கேற்றி கும்பிட்டு கணவருக்குச் சிற்றுண்டி கொடுத்து அனுப்புவது தான் இல்லத்தரசியின் கடமை.


* கருவறைக்கு நேர் எதிரில் கண்ணாடி வைத்திருப்பது ஏன்? சுவாமிக்கு மூன்று கண்கள். வலக்கண் சூரியனாகவும், இடக்கண் சந்திரனாகவும், நெற்றிக்கண் அக்னியாகவும் உள்ளன. இதில் சூரியசந்திர பார்வை நம் மீது பட்டால் நல்லது. நெற்றிக்கண் நெருப்புப்பார்வை நம் மீது விழாமல் இருக்க கண்ணாடி வைத்துள்ளனர்.


* ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசை வந்தால் சுபநிகழ்ச்சி நடத்தலாமா? இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருமானால் சுபநிகழ்ச்சி நடத்தக்கூடாது. புதிதாக கும்பாபிஷேகம் செய்யக்கூடாது. கோயிலைப் புதுப்பித்து கும்பாபிஷேகம், மணிவிழா, வளைகாப்பு, காதுகுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தலாம். தவிர்க்கமுடியாதபட்சத்தில் தோஷ சாந்திஹோமம் செய்து விட்டு சிலர் திருமணம் நடத்துவர்.


* பஞ்சாங்கம் தினமும் பார்க்கலாமா? அதைப் படிப்பதன் பலன் என்ன? கிழமை, நட்சத்திரம், தேதி முதலியவற்றைத் தெரிந்து கொள்ளப் பஞ்சாங்கம் பார்த்துத் தானே ஆக வேண்டும். ஒருமுறை பஞ்சாங்கம் படித்தால், கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும்.

* நியாயம் தங்கள் பக்கம் இருந்தாலும், ஆண்கள் உடன்பிறந்த சகோதரியின் சாபத்திற்கு ஆளாக நேரிடுகிறதே. இது பலிக்குமா? நியாயம், அநியாயம் பார்க்கும்படி உடன் பிறந்தவர்களிடையே அப்படி என்ன மனக்கசப்பு? சட்டென்று கோபப்படும் சுபாவமுள்ளவர்களாக இருந்தாலும், பெண்களுக்குப் பிறந்த வீட்டாரிடம் தனிப்பாசம் எப்போதும் இருக்கும். சகோதர, சகோதரிகளிடையே சாதாரண பேச்சுவார்த்தை சண்டையாக முற்றும்போது அமைதி காக்க வேண்டும். இந்த பிறவியில் சகோதர சகோதரிகளாகப் பிறந்திருக் கும் நாம், அடுத்த பிறவிகளில் எங்கு எப்படி பிறப்போமோ? எனவே, ஒற்றுமையாக மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால் விட்டுக் கொடுத்துப் போவதில் தவறில்லை. நியாயமும், தர்மமும் உங்கள் பக்கம் இருக்கும் பட்சத்தில் யாருடைய சாபமும் பாதிக்காது. பயப்படவேண்டாம். எனினும், சகோதரிகளின் மனம்கலங்காமல் பார்த்துக் கொள்வது சிறப்பு.

** ஆலய வழிபாட்டிற்கு நல்லநேரம் பார்த்துச் சென்றால் தான் பலன் கிடைக்குமா?  நல்லவேளை! சாப்பிடுவதற்கு, தூங்குவதற்கு, காலை எழுந்திருப்பதற்கு இவற்றிற்கும் நல்லநேரம் பார்க்கலாமா என்று கேட்கவில்லையே! ஆலய வழிபாடு என்பது தினமும் செய்யவேண்டிய வழக்கங்களில் ஒன்று. இதற்கெல்லாம் நல்லநேரம் பார்ப்பதும், அதைக் காரணம் காட்டி போகாமல் இருப்பதும் சோம்பேறிகளின் வழக்கம்.


* கணவன் மனைவி ஒற்றுமை வளர எந்த விரதம் இருக்கவேண்டும்? சோமவார(திங்கள்கிழமை) விரதம் இருந்து வாருங்கள். பார்வதியை சிவன் திருமணம் செய்து கொண்டது சோமவாரத்தில் தான். விரதம் இருப்பது மட்டும் முக்கியமில்லை. நீங்கள் எதற்காக விரதம் இருக்கிறீர்கள் என்று மனைவி புரிந்து கொள்ளவேண்டும். சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் சண்டையிடாமல் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் அன்பு அகலாமல் வாழ்வதே ஒரு விரதம் தான்.


*பார்வைக் குறைபாடு நீங்க எந்த தெய்வத்தை வழிபடவேண்டும்? எல்லாத் தெய்வங்களையும் வழிபடலாம். விடியற்காலையில் சூரிய உதயத்தின் போது சூரியனைப் பார்த்தவாறு 12முறை நமஸ்காரம் செய்து வாருங்கள். ஆதித்ய ஹ்ருதயம் நூல் தமிழில் கிடைக்கிறது. அதையும் பாராயணம் செய்யுங்கள்.

* செருப்பணிந்து பெண்கள் வாசல் தெளித்துகோலமிடுவது சரியானதா? வீடு என்பது கோயில் போன்றது. வீட்டிற்குச் செய்யப்படுகின்ற எல்லாமே கோயிலுக்கு செய்யப்படுவதாக எண்ண வேண்டும். சாணம் தெளித்து கோலம் போடுவது என்பது, மகாலட்சுமியை வீட்டிற்குள் வரவேற்கும் நிகழ்ச்சியாகும். கிருமிகளை வீட்டிற்குள் வராமல் பார்த்துக் கொள்ளும் ஆற்றலும் அதற்கு உண்டு. அரிசி மாவினால் தான் கோலம் போடவேண்டும். எறும்பு, பறவைகள் அதை உண்பதால் நமக்கு புண்ணியம் சேரும். இவ்வளவு தெய்வீகமான செயலைச் செருப்பணிந்தபடி செய்வது கூடாது.

தீட்டு என்றால் என்ன என்பதை விளக்குங்கள் பிறரைத் தீண்டக்கூடாத நாட்களை சுருக்கமாகத் தீட்டு என்பர். பங்காளிகள் வீட்டில் பிறப்பு, இறப்பு நிகழ்ந்தால் பத்துநாட்கள் தீட்டு உண்டு. பெண்களின் மாதவிடாய் காலமான மூன்றுநாள் தீட்டு. இக்காலங்களில் கோயிலுக்குச் செல்வது கூடாது. பிறரைத் தீண்டக்கூடாது. இதனால் லட்சுமி கடாட்சம் குன்றி வறுமை உண்டாகும். ஆயுள் குறையும் என சாஸ்திரம் கூறுகிறது. ஆனால், தற்காலத்தில் பலர் இதை ஏற்றுக் கொள்வதில்லை.


ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா? ஒவ்வொருவரும் பிறக்கும் போது அந்தந்த நட்சத்திரங்களின் அடிப்படையில் ஏதாவது ஒரு கிரகத்தின் தசையில் வாழ்வு தொடங்குகிறது. உதாரணமாக ஒருவர் பரணி நட்சத்திரத்தில் பிறந்தால் சுக்கிரதசையில் பிறந்திருக்கிறார். பொதுவாக சுக்ரதசை நல்லது என்றாலும், தொடர்ந்து வரும் தசாபுத்திகளான செவ்வாய், ராகு நடக்கும் காலத்தில் திருமண வயதை அடைவார். இதே பரணியில் பிறந்த பெண்ணை மணம் முடித்தால் இருவருக்கும் ஒரே தசாபுத்தி நடக்கும். இதற்கு "தசாசந்தி' என்று பெயர். நல்ல தசை நடந்தால் இருவருக்கும் நன்மை. கெட்ட தசை நடந்தால் இருவருக்கும் கஷ்டம் ஏற்படும். எனவே தான் ஒரே நட்சத்திரத்தில் பிறந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம் செய்யக்கூடாது என்பர். இது தவிர ஜாதகத்தில் கிரகபலம் அதிகமிருந்து, தசை சந்திப்பு இல்லாவிட்டால் ஒரே நட்சத்திரக்காரர்கள் திருமணம் செய்யலாம். சிறந்த ஜோதிடரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.


**மெகாசைஸ் சிலைகளை சில கோயில்களில் வைக்கிறார்களே. சாஸ்திரத்தில் இதற்கு இடமுண்டா?

மிகவும் பழமை வாய்ந்த கோயில்களில் அமைந்திருக்கும் சிலைகளைப் பற்றி ஆராயக்கூடாது. இவை கோயில் தலவரலாறோடு சம்பந்தப்பட்ட விஷயமாக அமைந்திருக்கும். ஆனால், தற்போது இதுபோல மெகாசைஸ் சிலைகள் அமைப்பதற்கான காரணம் புரியவில்லை. மூலஸ்தான விக்ரஹத்தின் அளவைக் கணக்கிட்டே மற்ற சிலைகளைச் செய்ய வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. 


* கழுத்தில் சந்தனம் குங்குமம் வைக்கலாமா? நெற்றி, கழுத்து, மார்பு, இரு புறங்கைகள் ஆகிய ஐந்து இடங்களில் சந்தனம் குங்குமம் திலகமிட்டுக் கொள்ளலாம். அவரவர்களின் சமயம் மற்றும் குடும்ப வழக்கப்படி மாறுபடலாம்.

**காயத்ரி மந்திரத்தைப் பெண்கள் சொல்லலாமா? சொல்லக்கூடாது என்று சொன்னால் ஏன் என்று காரணம் கேட்கிறார்கள். காரணம் சொன்னால் இக்காலத்துப்பெண்கள் ஏதேதோ கேள்விகள் கேட்டு விவாதம் செய்கின்றனர். சாஸ்திரங்கள் வேண்டாம் என்று சொல்வதை செய்யாமல் இருப்பது தான் பண்பாடு. ஒரு சில நிறுவனங்கள் நம் ஹிந்து தர்மத்தை வளர்ப்பதாகக் கூறி எல்லோரும் காயத்ரி மந்திரத்தைச் சொல்லலாம் என்று பெண்களை உற்சாகப்படுத்தவும் செய்கின்றனர். இரண்டு விஷயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். இந்த மந்திரத்தின் அதிதேவதையாக காயத்ரி என்னும் பெண் தெய்வத்தையே வழிபடுகிறோம். இதனால் பெண் சமுதாயத்தை உதாசீனப்படுத்தவில்லை என்பது நிதர்சனம். இரண்டாவது யுகதர்மம். இதைப் பற்றி விளக்க விருப்பமில்லை.


* திருவண்ணாமலையில் கிரிவலம் வருபவர்கள் வேகமாக நடந்தோ அல்லது ஓடியோ செல்வது சரியானதா? இறைவனுடைய திருநாமத்தை உச்சரித்துக் கொண்டு அடிமேல் அடிவைத்து நடப்பது தான் பிரதக்ஷிணம் (வலம் வருதல் )என்று கூறப்படுகிறது. இது பொதுவான விதி. ஆலயம் வலம் வருவதற்குப் பொருந்துவது. திருவண்ணாமலை கிரிவலப்பாதை 18 கி.மீ., சுற்றளவு உடையதாக இருக்கிறது. சிலருக்கு நீண்டநேரம் நடப்பதை விட வேகமாகச் சென்றால் களைப்பு தெரிவதில்லை. கிரிவலப்பாதையின் தூரத்தை அனுசரித்து வேகமாக நடந்து செல்வதில் தவறு ஒன்றுமில்லை. ஆனால் சிலர் பிறருக்கு இடையூறாக தள்ளுமுள்ளு செய்கிறார்கள். இதனைத் தவிர்க்க வேண்டும்.



* ஆயுள் அதிகரிக்கவும், ஆரோக்கியம் உண்டாகவும் எந்தக் கடவுளை வழிபடவேண்டும்? பக்தனுக்காக (மார்க்கண்டேயன்)எமனையே அழித்தவர் என்பதால் சிவனுக்கு "மிருத்யுஞ்ஜயர்'(ஆயுளை அதிகரிப்பவர்) என்று பெயர் உண்டு. சோமவார விரதம் இருந்து சிவனை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும். மகாவிஷ்ணுவின் அவதாரமான தன்வந்திரிபகவானை வழிபட்டால், எல்லா நோய்களையும் தீர்த்து, நிறைந்த ஆரோக்கியத்தை அருளுவார். 



* ஹாலில் 2 அடி விநாயகர் சிலை செய்து வைக்க ஆசைப்படுகிறோம். இதற்காக தனியாக சாஸ்திர விதிமுறைகள் இருந்தால் தெரிவிக்கவும். வீட்டில் பூஜை செய்வதற்கு ஆறு அங்குலத்திற்கு மேற்பட்ட விக்ரஹங்கள் கூடாது. பூஜை செய்பவர்களின் வலதுகையை முஷ்டியாகப் பிடித்து கட்டை விரலை மட்டும் உயர்த்தினால் ஏற்படும் உயர அளவே, வீட்டு பூஜைக்கு உகந்த விக்ரஹங்களின் அளவாகும்.

* குளிக்காமல் சமைத்து காகத்திற்குச் சாதம் வைப்பது தவறா? குளிக்காமல் சமைப்பதே தவறு. இதில் காகத்திற்கு வேறா? சமையற்கட்டு அடுப்பு, அரிசி எல்லாமே தெய்வீகமானவை. திருமணத்திற்குப் பிறகு ஒருவர் வாழ்க்கையில் உயர்ந்தால் "பானை பிடித்தவள் பாக்கியசாலி' என்று பெண்ணினத்தைத் தானே பெருமைப்படுத்துகிறார்கள். பானையில் உள்ள அரிசியை எடுத்து நீங்கள் சமைக்க ஆரம்பித்த நாள் முதல், உங்கள் குடும்பம் உயர்ந்த நிலையை அடைவதையே அது குறிக்கிறது. தெய்வீகமான சமையலை குளித்துவிட்டு ஆசாரமாகச் செய்வது நல்லது.


* பூனை குறுக்கே சென்றால் பரிகாரமாக என்ன செய்யவேண்டும்? தொட்டதற்கெல்லாம் சகுனம் பார்த்து நேரத்தை வீணடிப்பதை தவிர்ப்பதே எல்லாவற்றிற்கும் சிறந்த பரிகாரம். முக்கிய அலுவல் நிமித்தமாக செல்லும்போது இது போன்ற விஷயங்கள் நடந்தால், மீண்டும் வீட்டிற்குள் சென்று சிறிதளவு தண்ணீர் பருகிச் சென்றால் போதும்.



* வீட்டில் ஒருவிளக்கு மட்டும் ஏற்றக் கூடாதாமே? எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும் என்று சொல்லுங்கள். பூஜையறையில் இருவிளக்குகள் ஏற்ற வேண்டும். மாலையில் வாசல் நிலைக்கருகில் ஒன்றும், துளசிமாடத்தில் ஒன்றும் ஏற்ற வேண்டும். 



** பெண்கள் பூசணிக்காய் வெட்டக்கூடாது என்பது ஏன்? சில விஷயங்கள் பெண்கள் செய்யக்கூடாது என்பதற்குக் காரணம் அவர்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான். தாய்மை எனப்படும் கருணையுள்ளம் பெண்களுக்கே உரித்தானது. பூசணிக்காய், தேங்காய், பரங்கிக்காய் போன்றவை வாஸ்து புருஷன், பைரவர், காளி போன்ற தெய்வங்களுக்கு பலியிடுவதற்கு உபயோகப்படுத்தப் படுகின்றன. உயிர் பலிக்கு ஈடானதாக இவை செய்யப்படுகின்றன. இதுபோன்ற செயல்களை பெண்கள் செய்வதால் மனதில் ஒருவித பயமும், கருச்சிதைவும் ஏற்படும் என்பதால் ஆண்களே செய்யவேண்டும் என ஆன்றோர்கள் வகுத்துள்ளனர்.

** பக்திக்குப் பயம் தேவைதானா? பயபக்தி என்று சொல்வது ஏன்? பயம் இருக்கும் இடத்தில் தவறு இருக்காது. குறித்த நேரத்தில் பணிக்குச் சென்றுவிட்டால் யாரும் குறைகூற இடமிருக்காது. இப்படி பொறுப்புடன் செயல்படுவதை வேலையில் பயம் இருப்பவர்களிடத்தில் மட்டுமே காணலாம். இது பாராட்டுக்குரிய பயம். அதுபோல், இறைவனுக்கு பூஜை செய்யும் போது அதில் குறை ஏற்பட்டு விடக்கூடாது என்ற சிரத்தையுடன் செய்தால் பக்தி முழுமை பெறுகிறது. இந்த சிரத்தையையும் ஒருவித பயம் என்று கூறலாம். அதாவது, நாம் செய்யும் எந்த வேலையாக இருந்தாலும் தவறு ஏற்படாமலிருக்க, முழுக்கவனத்தையும் செலுத்திச் செய்வதை பயம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். மனபீதியைக் குறிக்கும் பயத்துடன் இதனை ஒப்பிடக்கூடாது. எனவே, பயபக்தியுடன் வழிபடுங்கள். அஞ்சுதற்கஞ்சாமை மடமை என்பது தமிழர் மரபல்லவா?


* பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பதன் சிறப்பு என்ன? எல்லாத் தெய்வங்களின் ஒருமித்த வடிவம் பசு. இதற்கு உணவு அளித்தால் எல்லா தெய்வங்களையும் வழிபட்ட பலன் உண்டாகும். மற்ற தீவனங்களைக் காட்டிலும் உயர்ந்தது அகத்திக்கீரை. தன் ரத்தத்தைப் பாலாக்கி நமக்கு அளிக்கும் பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பது புனிதமானதாகும்.



* கோயிலில் சிலர் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு வழிபடுவது சரிதானா? பிரதட்சிணம் என்றால் வலம் வருதல் என்று பொருள். ஆலய பிரதட்சிணம் செய்வது போல தன்னைத் தானே சுற்றிக் கொள்வது ஆத்மபிரதட்சிணம். இதைச் செய்வது விசேஷம். 



* காலையில் நேரம் இல்லாவிட்டால் மதியவேளையில் பூஜை செய்யலாமா? இயலாத பட்சத்தில் செய்யலாம். ஆனால், காலை10.30 மணிவரை தேவகாலம் எனப்படுகிறது. இதற்குள் பூஜைகளை முடிப்பதே விசேஷம்.



* வாகனம் புறப்படும் போது சக்கரத்தின் அடியில் எலுமிச்சம்பழத்தை நசுக்குவது ஏன்? பயணத்திற்கு உதவும் வாகனம் விபத்திற்குள்ளாகும்போது ஆபத்தில் முடிகிறது. சில உக்கிர சக்திகளால் இந்த விபரீதம் நிகழ்கிறது. எனவே, அவற்றை திருப்தி செயய எலுமிச்சம்பழத்தை நசுக்குதல், பூசணிக்காய் உடைத்தல் போன்றவற்றைச் செய்கிறோம். இதனால், விபத்து நேர்ந்து விடாமல் அந்த சக்திகளே பார்த்துக் கொள்வர்.



* தலைதிவசம் கொடுப்பதற்கு முன் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடத்துவது சரிதானா? தாராளமாகச் செய்யலாம். செய்வது சிறப்பானதும் கூட. ஒரு வருடம் வரை இறந்தவர்களுக்குச் சில கிரியைகள் செய்யப்படுவதால் அவரும் உடனிருந்து வாழ்த்துவதாகக் கூறுகிறார்கள்.

** மாதம் மும்மாரி மழை பெய்ய எந்த தேவாரப்பாடலைப் பாராயணம் செய்ய வேண்டும்?  நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகில் திருப்புன்கூர் என்னும் சிவத்தலம் உள்ளது. இக்கோயிலுக்குரிய நிபந்தங்களில் முக்கியமான குறிப்பு ஒன்று உள்ளது. மழை பெய்ய12 வேலி நிலமும்(84ஏக்கர்) மழை நிற்க 12 வேலி நிலமும் காணிக்கையாக ஒரு அடியார் இக்கோயிலுக்கு எழுதி வைத்துள்ளார். இத்தலம் குறித்து சுந்தரர் பாடியருளிய தேவாரத்தில் இக்குறிப்பு காணப்படுகிறது."வையகமுற்றும் மாமழை மறந்து வயலில் நீர்இலை மாநிலந்தருகோம் உய்யக்கொள்க மற்று எங்களை என்ன ஒளிகொள் வெண்முகிலாயப் பரந்து எங்கும் பெய்யும் மாமழைப் பெருவெள்ளந் தவிர்த்தும் பெயர்த்தும் பன்னிருவேலி கொண்டு அருளும் செய்கைக் கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திருப்புன்கூர் உளானே''  என்பது அத்தேவாரப் பாடல். மழை பெய்யவும் நிற்கவும் இங்கு சிறப்பு வழிபாடும் வழக்கில் இருக்கிறது. அதற்கு திருப்புன்கூர் பதிகம் முழுவதும் பாராயணம் செய்யுங்கள். குறைந்த பட்சம் இப்பாடலை மட்டுமாவது ஓதி வாருங்கள். மாதம் மும்மாரி பெய்து வளம் சுரக்கும்.

* கோயிலுக்கு எதிரே இருக்கும் வீட்டில் குடியிருக்கக்கூடாது என்கிறார்களே ஏன்? கோயிலுக்கு நேர் எதிர்புறம் வீடு கட்டக்கூடாது. அந்தப் பகுதியை சந்நிதித்தெரு என்று விட்டுவிட வேண்டும். தெய்வத்தின் நேர் கொண்ட பார்வையில் திருக்குளம், நந்தவனம், சந்நிதிதெரு இவற்றைத் தவிர வேறு கட்டடங்கள் இருக்கக்கூடாது



* 30வருடம் வாழ்ந்தவருமில்லை. 30வருடம் கெட்டவரும் இல்லை என்று சொல்கிறார்கள். இதன் பொருள் என்ன? கஷ்டப்படுபவர்களை நம்பிக்கையூட்டி உற்சாகப்படுத்துவதற்காக இப்படிச் சொல்வார்கள். நன்றாக வாழ்பவர்கள் கூட, 30 வருடத்திற்கு ஒருமுறை கெட்டு விடுவார்கள் என்று விபரீத அர்த்தம் செய்வது கூடாது.



* திறந்தவெளியில் 50, 60 அடி உயரத்திற்கு சிலை வைக்கிறார்களே! அவை வழிபாட்டுக்குரியவை தானா?

எவ்வளவு அடி உயரத்தில் வேண்டுமானாலும் சிலை வைக்கட்டும். திறந்த வெளியில் இருப்பது தான் கேள்விக்கு இடமளிக்கிறது. திருச்சி உறையூர் வெக்காளியம்மன், நாமக்கல் ஆஞ்சநேயர் போன்ற தெய்வங்கள் திறந்த வெளியில் உள்ளனவே என்று கேட்கிறார்கள்! அவை பழமையானவை. திறந்தவெளியில் இருப்பதற்கு அந்தந்தக் கோயிலுக்கென்றே புராண வரலாறுகள் இருக்கின்றன. எனவே, அத்தலங்களை உதாரணமாகக் கொண்டு புதிதாகத் திறந்தவெளியில் சிலை அமைப்பதை ஏற்றுக் கொள்ள இயலாது. இதற்கு மேல் இப்படிச் செய்பவர்கள் தான் விளக்கம் அளிக்க வேண்டும்.


* சாப்பிடும் முன், உணவிருக்கும் இலையை நீரால் சுற்றுகிறார்களே ஏன்? இறைவன் நம் உயிராக நமக்குள்ளேயே இருக்கிறார். இப்படி ஆன்ம வடிவமாக இருக்கும் இறைவனுக்கு நாம் சாப்பிடுவதை நிவேதனம் செய்யும் முறையாக இது செய்யப்படுகிறது. இதை "பரிசேஷனம்' என்பர்

* பூஜையறையில் ஒரே ஒரு விளக்கை மட்டும் ஏற்றலாமா? பொதுவாக பூஜையறையில் குலதெய்வதீபம் என்று ஒரு காமாட்சி விளக்கும், எல்லா தெய்வங்களுக்குமாக குத்துவிளக்கும் ஆக இரண்டு தீபம் ஏற்ற வேண்டும். ஊதுபத்தி சூடம் போன்றவற்றை இந்த விளக்கில் இருந்து ஏற்றக் கூடாது. அதற்கு பூஜை நேரத்தில், தனியாக ஒரு கைவிளக்கை ஏற்றிக் கொள்ள வேண்டும்.

* சிவபெருமான் சுடுகாட்டுச் சாம்பலைப் பூசி நடனம் ஆடுவது ஏன்?  எல்லா சுகபோகங்களையும் அருளும் சிவபெருமான், நமக்கு தேவையில்லாதவற்றை, நாம் விரும்பாததை தனக்காக வைத்துக் கொண்டுள்ளார். இதுதான் கருணையும், எளிமையும் இணைந்த திருவருள். உலக போகங்களையே பெரிதும் விரும்பி மயங்காமல் வாழவும், இறுதியில் நம் உடல் கைபிடிச்சாம்பல் தான் என்பதை உணர்த்தவும் சுடலைப்பொடி பூசி அருள்கிறார்.



* சுமங்கலி பூஜை செய்வதன் நோக்கம் என்ன? பக்தர்களையும் இறைவனாகவே காணும் உயர்ந்த தத்துவத்தைக் கொண்டது இந்துமதம். உமையம்மை மகாலட்சுமி போன்ற தெய்வங்களின் அருளைப்பெற சுமங்கலிப் பெண்களை அம்பாளாக வழிபட்டு, புடவை குங்குமச்சிமிழ் போன்ற மங்கலப்பொருட்களைக் கொடுத்து விருந்தளிப்பது சுமங்கலி பூஜை. இதுமிக உயர்ந்த வழிபாடு. இதனைச் செய்தால் சுமங்கலிகளாக இறந்த மாதர்கள் சந்தோஷப்பட்டு, குடும்பத்தினர் நலமாகவும், தீர்க்கசுமங்கலிகளாகவும் வாழ வாழ்த்துவார்கள்.



* விரதநாட்களில் பகலில் தூங்கக் கூடாதாமே ஏன்? சாப்பாடும் தூக்கமும் உடலுக்கு சுகமளிப்பவை. ஒரு நிலைப்பட்ட மனதுடன் அன்று முழுவதும் தெய்வசிந்தனையாகவே இருப்பதற்குத் தடையாக இருப்பவை. பசியோடும், தூங்காமலும் இருக்கும்போது, நாம் இன்று விரதம் இருக்கிறோம் என்ற எண்ணம் மறக்காமல் இருக்கும். முழுமையான தெய்வ சிந்தனையுடன் விரதம் இருந்தால் நாம் எண்ணியது நிறைவேறும். 



* ஒரே நேரத்தில் அக்கா, தங்கை அல்லது அண்ணன், தம்பி இருவருக்கும் திருமணத்தடை பரிகாரபூஜை நடத்தலாமா? பரிகார பூஜை சேர்ந்தே செய்யலாம். ஒன்றும் தவறில்லை. இறையருளால் உங்கள் குடும்பத்தில் தடை நீங்கி விரைவில் திருமணம் கைகூடட்டும்.

* பூஜையறையில் தனியாக முருகனின் வேலாயுதத்தை மட்டும் பூஜிக்கலாமா? முருகனின் ஞானசக்தி வடிவமே வேலாயுதம். இதைத் தனியாக வைத்து பூஜிக்கலாம். மலேசியா பத்துமலை, இலங்கை கதிர்காமம் முருகன் கோயில் மூலஸ்தான கருவறையில் வேலாயுதம் மட்டுமே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

** கோயில் வீதியில் குடியிருப்பவர்கள் கோபுரத்தை விட அதிக உயரத்திற்கு வீடு கட்டலாமா? பொதுவாக விமானத்தை விட உயரமாகக் கட்டுவதே தவறு என்றிருக்கும் போது, கோபுரம் உயரத்துக்கு எப்படி கட்டலாம்? கோபுரம் வேறு, விமானம் வேறு. கோபுரம் என்பது கோயில் நுழைவு வாயில். இது உயரமாகக் கட்டப்பட்டிருக்கும். விமானம் என்பது கருவறை மேல் அமைந்திருக்கும். 



* தவிர்க்க முடியாத பட்சத்தில் ராகுகால வேளையில் ஏதேனும் ஒரு செயலைச் செய்ய நேர்ந்தால் பரிகாரம் உண்டா? ஞாயிறு ராகுகாலத்தை தவிர, மற்ற நாட்களில் துர்க்கையை மனதார வழிபட்டு அந்தப் பணிகளைச் செய்யலாம்.


* கடைகளில் பலவிதமான ஜபமாலைகள் விற்கின்றன. துர்க்கை பக்தனான நான் எந்த ஜபமாலையைப் பயன்படுத்த வேண்டும்? பொதுவாக ருத்ராட்ச மாலையை எந்த தெய்வ ஜபமாக இருந்தாலும் பயன்படுத்தலாம். அதற்கு அடுத்த நிலையில், துளசி மணிமாலையைப் பயன்படுத்தலாம்.



* கிரகப்பிரவேசத்தின் போது பசுமாட்டை வீட்டிற்குள் அழைத்து வருவது ஏன்? பசுமாடு எல்லா தெய்வங்களின் வடிவாக உள்ளது. நாம் குடிபுகும் வீட்டிற்கு எல்லா தெய்வங்களின் திருவருளும் கிடைத்த பிறகு அதில் குடிபுகுந்தால் ஐஸ்வர்யம் பெருகும் என்பதால் இவ்வாறு செய்கிறார்கள்.



* உடல்நிலை காரணமாக விரதத்தை தவிர்த்து சத்துள்ள உணவை உண்ணும்படி வைத்தியர் எனக்கு ஆலோசனை கூறுகிறார். என்ன செய்வது? சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். உடம்பைக் கோயில் என்று திருமூலர் திருமந்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். கடவுள் மீது பக்தி செலுத்த உடம்பு ஆதாரமாக இருக்கிறது. அதைப் போற்றிப் பாதுகாக்க ஒவ்வொருவரும் முயலவேண்டும். அதனால், முடிந்தால் மட்டுமே விரதத்தை மேற்கொள்ளுங்கள்.

* துளசி மாடத்தை வீட்டில் வைப்பதன் நோக்கம் என்ன? அதை எத்தனை முறை சுற்றி வந்து வழிபடவேண்டும்? துளசி மகாவிஷ்ணுவின் வாசஸ்தலம். துளசி இதழ்கள் மகாலட்சுமி வடிவமானவை. லட்சுமி நாராயண ஸ்வரூபமானது துளசிச்செடி. இதை வீட்டில் வைப்பதால் வறுமை, நோய், கண்திருஷ்டி, தோஷம் நீங்கி லட்சுமி கடாட்சம் பெருகும். மூன்று முறை வலம் வர வேண்டும்.


* மந்திரம் சொல்லும்போது முடிவில் ததாஸ்து' என்று சொல்கிறார்களே. இதன் பொருள் என்ன? ததா+ அஸ்து= ததாஸ்து. "ததா' என்றால் "அப்படியே' என்று பொருள். "அஸ்து' என்றால் "ஆகட்டும்' என்பது பொருள். ஆசிர்வாதம் எனப்படும் வாழ்த்து கூறும்போது,""எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் இறையருளால் கிடைக்கட்டும்'' என்பார்கள். மற்றவர்கள் அப்படியே ஆகட்டும் என்று வாழ்த்துவது தா

** ஆடம்பரபக்தி, எளியபக்தி இதில் எதைக் கடவுள் விரும்புகிறார்? விருப்பு வெறுப்பைக் கடந்தவர் கடவுள். வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாகுபாடும் அவருக்கு கிடையாது. பக்தி என்பது மனதைப் பொறுத்த விஷயம். ஆடம்பரமாய்ச் செய்தால் பலன் அதிகம் என்றோ, எளிமையாகச் செய்தால் குறைவு என்றோ எண்ணத் தேவையில்லை. உள்ளத் தூய்மையே பக்திக்கு தேவை. மன்னர் கட்டிய கற்கோயிலை விட, பூசலார் நாயனார் கட்டிய மனக்கோயிலில் சிவன் விரும்பி ஏற்றுக் கொண்டார் என்பதை பெரியபுராணம் காட்டுகிறது. பொருளாதாரம் இடமளித்தால் ஆடம்பரமாக வழிபடுங்கள். இல்லாவிட்டால் எளிமையைப் பின்பற்றுங்கள். எதுவானாலும் உள்ளன்போடு செய்யுங்கள். <இறைவன் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வார்.


* பிரதோஷ வேளையில் கோயிலுக்குச் சென்று வழிபடமுடியவில்லை.அப்போது வீட்டில் இருந்தே வழிபாடு செய்யலாமா? கோயிலுக்குச் செல்வதே சிறந்தது. தவிர்க்க முடியாத பட்சத்தில் வீட்டிலிருந்து வழிபடுங்கள். பிரதோஷ வேளையில் சிவபெருமானுக்குரிய சிவாயநம, நமசிவாய ஐந்தெழுத்து மந்திரங்களை ஜெபிக்கலாம். தேவார, திருவாசகப் பாடல்களைப் பாராயணம் செய்யலாம். 



* அமாவாசையில் பிறந்தவர்கள் திருடர்களாக இருப்பார்கள் என்கிறார்களே. உண்மையா? சற்று கூட உண்மை இல்லை. அமாவாசையில் பிறந்தவர்களுக்கு திருட்டு குணம் உருவாகும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படவில்லை. ஆனால், இந்த பொய் எப்படியோ மக்கள் மத்தியில் பரவி விட்டது. 



* சுவாமி படங்களுக்கு வைத்த பூ காய்ந்துவிட்டால் எடுத்துவிடலாமா அல்லது மறுமுறை பூ வைக்கும்போது தான் எடுக்க வேண்டுமா?  சுவாமி படங்களுக்கு வைத்த பூ காய்ந்து விட்டால் எடுத்துவிடலாம். தூய்மையும் வழிபாட்டில் ஒரு அங்கமே. நம் வசதிக்குத் தகுந்தாற்போல அடுத்தமுறை எப்போது வேண்டுமானாலும் பூ வைக்கலாம். 


* கோயிலில் வாங்கிய விபூதி, குங்குமத்தை சிலர் அங்கேயே விட்டுவிடுவது சரியா? பிரசாதமாக வாங்கிய விபூதி, குங்குமத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்வது அவசியம். கோயில் சுவரில் விபூதி, குங்குமத்தை வைப்பதால் கீழே சிந்தி கால்மிதி படும்படி ஆகி விடுகிறது. கோயில் தூண்களும் பாழாகி பாவத்தைச் சம்பாதித்துக் கொள்கிறோம். கோயில்களில் போதுமான அளவு விபூதி கொடுத்தால் போதும். வாங்குவோரும் வீணாக்காமல் வீட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

* சிலர் வீடுகளில் ஸ்டிக்கர் கோலம் ஒட்டி இருப்பது சரிதானா? ஒன்றும் தவறில்லை. அழகாகவும், மங்களகரமாகவும் இருக்கும். எனினும், வீட்டு வாசல், பூஜையறை, சமையற்கட்டு, கொல்லைப்புறம் முதலிய இடங்களில் அரிசிமாவில் கோலம் போட வேண்டும். 


* சூரிய நமஸ்காரத்தைப் பெண்களும் செய்யலாமா? சூரியனுக்கு யார்வேண்டுமானாலும் நமஸ்காரம் செய்யலாம். இதற்கு தடையேது! அதுசமயம் சொல்லவேண்டியஸ்லோகங்களை யாரிடமாவது தெரிந்து கொண்டு சொல்லலாம். கோளறு பதிகமும் சொல்லலாம்.



* திருஷ்டி கழிக்க ஏற்ற நாள் செவ்வாயா, வெள்ளியா? ஏன்?  நீங்கள் கேட்ட இரண்டு நாட்களுமே ஏற்புடையது தான். திருஷ்டியின் பாதிப்புகளைப் போக்கும் தெய்வங்களாக முருகனும் துர்க்கையும் உள்ளனர். முருகனுக்கு செவ்வாயும், துர்க்கைக்கு வெள்ளியும் ஏற்ற நாட்கள்.


* விரதகாலத்தில் கறுப்புநிற உடை உடுத்துவது சரியா? விரதமும் ஒரு சுபநிகழ்ச்சி தான். இதில் கறுப்பு நிற உடை உடுத்துவது கூடாது. 


* சிவன் வீற்றிருக்கும் கயிலாயம் வடக்கில் இருக்கும்போது, தென்னாடுடைய சிவனேபோற்றி என்று கூறுவது ஏன்? வடக்கில் இருப்பது பூலோக கயிலாயம். சிவன் வீற்றிருக்கும் கயிலாயம் என்பது எல்லா உலகங்களுக்கும் மேலான இடம். மோட்சம் எனப்படும் வீடுபேறு அங்கே தான் உள்ளது. வடக்கு, தெற்கு பிரச்னை வழிபாட்டில் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் மாணிக்கவாசகர் "எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி' என்று பாடினார்.

** நான்காம்பிறையைப் பார்த்தால் நாய்படாதபாடு என்பது உண்மையா? நாய் என்ன படாதபாடு படுவதைக் கண்டீர்கள்? அவை சொகுசாக இருப்பதற்காகப் பலர் படாதபாடு படுவதைத் தான் இன்று கண்டு கொண்டிருக்கிறோம். மூன்றாம் பிறை பார்த்தால் நீண்டஆயுள் கிடைக்கும் என்றார்கள். அப்ப நான்காம் பிறை பார்த்தால் என்று ஒருவர் கேட்கிறார். "நாய்படாத பாடுதான்' என்று கூறிவிட்டார்கள். மூன்றாம் பிறை பார்ப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக இப்படிச் சொல்லப்பட்டதே தவிர, நான்காம்பிறை பார்ப்பவர்களுக்கெல்லாம் நாய்பாடு ஏற்படும் என்பதல்ல. நான்காம்பிறையைப் பார்க்கக் கூடாது என்று கண்ணை மூடிக் கொண்டு நடந்து எங்காவது கீழே விழுந்து விடாமல் இருந்தால்  சரி தான்.

* காசிக்குச் சென்றால் ஏதாவது விட்டுவிடுவது ஏன்? காசிக்குத் தினமும் லட்சக்கணக்கானவர்கள் செல்கிறார்கள். இவர்கள் எதையாவது விட்டு விட்டால் இந்தியாவின் பொருளாதாரம் சரியாகி விடுமா என்ன! இவ்வாறு விட்டு வருதல் என்பது கயா சென்று சிராத்தம்(திதி கொடுப்பது) செய்பவர்களுக்கு மட்டும் தான். கயாவில் செய்யும் பிதுர்காரியம் மிக உயர்ந்த புண்ணியத்தை தரும். இதைச் செய்துவிட்டு வந்த பிறகு, மனதில் எழும் அல்ப ஆசைகளை விடுத்து, தர்மநெறியில் வாழ்ந்தால் அந்த புண்ணியம் நம்மைக் காப்பாற்றும் என்பதால் அப்படிக் கூறுகிறார்கள். அதாவது நமக்குப் பிடித்தமான ஒன்றுக்காக சில சமயம் நெறி தவற நேரிடுகிறது. எனவே, தான் ஏதாவது ஒன்றை என்றில்லாமல், நமக்குப் பிடித்தமான ஒன்றை விட்டு விட வேண்டும்.

*வழிபாட்டில் காற்றடித்து கற்பூரம், விளக்கு அணைந்துவிட்டால் மனம் வருந்துகிறது. பரிகாரம் கூறுங்கள்.  காற்றடிப்பதை நிறுத்த இயலாது. இது இயற்கையாக நிகழ்வது. இதுபோன்ற இடங்களில் நாம் தான் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். கனத்த திரியாகப் போட்டு விளக்கேற்றலாம். கற்பூரத்தை கட்டியாக வைக்காமல் நொறுக்கி தூளாக நிறைய வைத்து ஏற்றலாம். இவையும் மீறி காற்றில் அணைந்தாலும் வருத்தப்படத் தேவையில்லை. மீண்டும் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.


மனத்தூய்மை பெற எத்தனை முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்? ஐந்துமுக ருத்ராட்சம் மிக உயர்ந்தது. கண்,காது,மூக்கு, வாய், மெய் என்னும் ஐம்புலன்களே மனதில் எழும் எண்ணங்களுக்கு காரணமாகின்றன. ஐந்து முக ருத்ராட்சம் அணிந்து அதில் ஐம்புலன்களும் பொருந்திவிட்டதாக எண்ணிக் கொள்ளுங்கள். புலன்கள் மனதைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்வது தடுக்கப்படும். தவறான எண்ணங்கள் ஏற்படாவிட்டால் மனம் தூய்மை பெற்றுவிடும். 


சுபம், அசுபம் இரண்டிலும் சங்கு ஊதுகிறார்களே ஏன்? சங்கு ஊதுவது எல்லாவற்றிற்கும் பொருந்தும் என்பதால் இப்படிச் செய்கிறார்கள். சுபநிகழ்ச்சியில் ஊதப்படுவதால் தேவர்கள் சந்தோஷப்படுகிறார்கள். அசுபத்தில் ஊதுவதால் பிதுர்கள் (நம் முன்னோர்) அவர்களது பிரிவால் சோகத்திலுள்ள நாம் மீண்டும் மகிழ்ச்சி பெற வாழ்த்துவார்கள்.

No comments:

Post a Comment