Thursday, August 1, 2013

பொதுநல வழக்கு தொடுக்கலாம்!

பாதிக்கப்பட்டவர், பொது நல வழக்கை எவ்வாறு தாக்கல் செய்ய வேண்டும் என்பதை கூறும், வழக்கறிஞர் எஸ்.சத்தியநாராயணன்: "பப்ளிக் இன்ட்ரஸ்ட் லிட்டிகேஷன்' எனும் பொது நல வழக்கு, எவ்வித சட்ட திட்டத்திற்கும் உட்பட்டதல்ல. இது தான், இவ்வழக்கின் முக்கிய சிறப்பம்சம். பாதிக்கப்பட்டவர், உயர் நீதிமன்றத்தில், 200 ரூபாய் செலுத்தி, பொது நல வழக்குக்கான மனுவை, தாக்கல் செய்யலாம்.பாதிக்கப்பட்ட நபர் அல்லது குழு, ஒரு அஞ்சல் அட்டை மூலம், பாதிக்கப்பட்ட விவரங்களை, உயர் நீதிமன்றத்திற்கு தெரிவித்தாலே, அது பொது நல வழக்காக ஏற்கப்படும். பத்திரிகை செய்திகளை அடிப்படையாக வைத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வு காண, உயர் நீதிமன்றமே தன்னிச்சையாகவும் வழக்கு தொடரும். வழக்கு தொடுக்கும் முன், மனுவின் நகல்களை பாதிப்பு ஏற்படுத்தியவருக்கு முறையாக அனுப்பி, அந்த ஆதாரத்தை, நீதிமன்ற மனுவுடன் இணைத்து, தாக்கல் செய்ய வேண்டும்.உயர் நீதிமன்றம், பாதிப்பு ஏற்படுத்தியவரை வரவழைத்து, இரு தரப்பு வாதங்களையும் கேட்டே, உரிய தீர்ப்பு வழங்கும். திருமண மண்டபம், கேளிக்கை விடுதி, பொது இடங்களில், அளவுக்கு மீறி அதிக ஒலி எழுப்பி பாதிப்பு ஏற்படுத்தும் போது, பொதுநல வழக்கு தொடுக்கலாம்.


தொழிற்சாலை கழிவுகளால், விஷவாயு வெளியேறுவது மற்றும் விவசாயம் பாதிக்கப்படுவது; குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது; "திருமண திட்டம்' என்ற பெயரில், பெண்களுக்கு குறைந்த ஊதியம் வழங்குவது; கட்டுமான பணிகளுக்காக, சட்டத்திற்கு எதிராக பசுமை மரங்களை அழிப்பது; பொதுமக்கள் பாதிக்கும்படி, அதிக வரிகளை அரசு தன்னிச்சையாக அமல்படுத்தினாலும், பொதுநல வழக்கு தொடுக்கலாம்.மேலும், போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் விளம்பர பலகைகளை அகற்ற; சிறைச் சாலைகளில் எவ்வித காரணமும், ஆதாரமும் இன்றி, காலவரையின்றி வாடும் சிறை கைதிகளை விடுவிக்க; உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகளின் லஞ்ச நடவடிக்கைகள் தொடர்பாகவும், பொதுநல வழக்கு தொடுக்கலாம்.

No comments:

Post a Comment