இந்தியாவில் அமெரிக்க தொழிலதிபர்கள் முதலீடு செய்யவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துவரும் வேளையில், அமெரிக்காவில் உள்ள பெரிய தொழில் நிறுவனங்களில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்தான் தலைமைச் செயல் அதிகாரிகளாக உள்ளனர். கடல் கடந்து பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலும் அமெரிக்க நிறுவனங்களில் கோலோச்சும் இந்திய தலைமை நிர்வாகிகளில் சிலரைப் பற்றிய விவரம்.
ராகேஷ் கபூர் (ரெக்கிட் பென்கிஸர்)
டெல்லியில் பிறந்து பிர்லா அறிவியல் தொழில்நுட்பக் கல்வி மையத்தில் ரசாயனத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர். ரெக்கிட் மற்றும் பென்கிஸர் நிறுவனங்கள் ஒன்றிணைவதில் பெரும் பங்காற்றியவர்.
2011-ம் ஆண்டு முதல் நிறுவனத்துக்கு சிஇஓ-வாக இருக்கிறார். இவரது ஆண்டு சம்பளம் 66 லட்சம் டாலராகும். 56 வயதாகும் கபூர் தனது மனைவி, 2 குழந்தைகளுடன் லண்டனில் வசிக்கிறார்.
அபிஜித் தல்வாக்கர் (எல்எஸ்ஐ கார்ப்பரேஷன்)
புணேயில் பிறந்த இவர் கம்ப்யூட்டர்களுக்கு சிப்புகள் தயாரிக்கும் எல்எஸ்ஐ கார்ப்பரேஷனின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார். ஒரேகான் பல்கலையில் பொறியியல் பட்டம் பெற்றவர்.
இவரது ஆண்டு சம்பளம் 92 லட்சம் டாலராகும். மனைவி லிண்டா, மகன்கள் ஆன்டணி, ஸ்டீபன் ஆகியோருடன் ஒரேகான் மாகாணம் போர்ட்லாந்தில் வசிக்கிறார்.
சாந்தனு நாராயண் (அடோப் சிஸ்டம்ஸ்)
ஆந்திர மாநிலம் ஹைதராபாதில் பிறந்தவர். உஸ்மானியா பல்கலையில் இளங்கலை பட்டம், கலிபோர்னியா பல்கலையில் நிர்வாகவியல் பட்டம், பௌலிங் கிரீன் பல்கலையில் டாக்டர் பட்டம் பெற்றவர். 1998-ம் ஆண்டு அடோப் நிறுவனத்தில் துணைத் தலைவராக சேர்ந்தார்.
2007-ம் ஆண்டு முதல் இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார். ஆண்டு சம்பளம் 1.56 கோடி டாலர்.
சத்யா நாதெள்ளா (மைக்ரோசாஃப்ட்)
47 வயதில் உலகின் மிகப்பெரிய சாஃப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார். ஆந்திர மாநிலம் அனந்தபுரியில் பிறந்தவர்.
மணிபால் பல்கலையில் பொறியியல் பட்டம் பெற்றவர். 2 பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை, மனைவி அனுபமாவுடன் வாஷிங்டனில் வசிக்கிறார். ஆண்டு சம்பளம் 8.40 கோடி டாலர்.
இந்திரா நூயி (பெப்சிகோ)
59 வயதாகும் இவர் சென்னை கிறிஸ்டியன் கல்லூரியின் முன்னாள் மாணவி. ஐஐஎம் கல்கத்தாவில் நிர்வாகவியலில் முதுகலை டிப்ளமாவும், யேல் நிர்வாகவியல் கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்றவர். பெப்சிகோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி.
தாரா, பிரீதா என்ற 2 பெண் குழந்தைகள். கணவர் ராஜ் கே. நூயியுடன் கனெக்டிகட்டில் வசிக்கிறார். ஆண்டு சம்பளம் 2.86 கோடி டாலர்.
சஞ்சய் மெஹ்ரோத்ரா (சான்டிஸ்க்)
பென் டிரைவ் எனப்படும் கம்ப்யூட்டர் தகவல்களை சேமித்து வைக்கும் சான்டிஸ்க் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. டாக்டர் எலி ஹராரியுடன் சேர்ந்து 1988-ல் இந்நிறுவனத்தை உருவாக்கினார் மெஹ்ரோத்ரா.
சிலிக்கான் பள்ளத்தாக்கில் 500 முன்னணி நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். இவரது ஆண்டு சம்பளம் ஒரு கோடி டாலராகும்.
சஞ்சய் ஜா (குளோபல் பவுண்டரீஸ்)
பிகார் மாநிலம் பாகல்பூரில் பிறந்தவர். லிவர்பூல் பல்கலை.யில் பி.எஸ். பட்டமும், ஸ்டிராத்கிளைட் பல்கலையில் முனைவர் பட்டமும் பெற்றவர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார்.
குவால்காம் நிறுவனத்தின் தலைவராகவும், மோட்டரோலா நிறுவனத்தின் இணை தலைமைச் செயல் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.
ரவி கே சாலிகிராம் (ரிச்சி பிரதர்ஸ்)
57 வயதாகும் ரவி கர்நாடக மாநிலம் பெங்ளூருவில் பிறந்தவர். மின் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். மிச்சிகன் பல்கலையில் நிர்வாகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
அராமர்க் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 20 ஆண்டுகள் பணியாற்றிய இவர் ஆபிஸ் மேக்ஸ் நிறுவனத்தில் இணை தலைமைச் செயல் இயக்குநராக சில காலம் பணியாற்றியுள்ளார்.
தினேஷ் பாலிவால் (ஹர்மான் இண்டர்நேஷனல்)
உயர் ரக பொழுதுபோக்கு கருவிகள், ஆடியோ சிஸ்டம்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான இவர் ஆக்ராவில் பிறந்தவர். ரூர்க்கி ஐஐடி-யில் இளங்கலைப் பட்டமும், மியாமி பல்கலையில் பட்டமும் பெற்றவர்.
ஏபிபி நிறுவனத்தில் 22 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். 57 வயதாகும் இவரது ஆண்டு சம்பளம் ஒரு கோடி டாலராகும்.
http://tamil.thehindu.com/business/business-supplement/article6847917.ece
No comments:
Post a Comment