“ஒவ்வொரு தடவையும் கிச்சன்ல கத்திய தேடுறதே வேலையா போச்சு”
“இன்னைக்கு நியூஸ் பேப்பர் எங்கய்யா?”
“எடுத்தா எடுத்த இடத்தில வைக்கிறது கிடையாது” என்று அடுத்தவர்களைக்
குற்றஞ்சாட்டுவோம். நாம் கடைபிடிக்க மாட்டோம். இதற்கான தீர்வே ஜப்பான்
மந்திரமான 5 எஸ்.
1) செய்ரி (Sort out) பிரித்தல்
2) செய்டன் (Systemize) ஒழுங்குபடுத்துதல்
3) செய்ஸோ (Shining) சுத்தமாக்குதல்
4) செய்கிட்சூ (Standardize) நிர்வகித்தல்
5) செட்சுகி (Sustain) தக்க வைத்தல்
என்பதுதான் அந்த மந்திரம். சற்று விளக்கமாகப் பார்ப்போம்.
செய்ரி – பிரித்தல்
5 எஸ்களிலும் அதிக நேரமெடுக்கும் சிரமமான வேலை இந்த முதல் எஸ் தான்.
வீடோ, அலுவலகமோ முதலில் அதில் ஒரு இடத்தைத் தேர்வு செய்யுங்கள்.
# அதில் உள்ளப் பொருட்களில் தேவையானதைக் கணக்கெடுக்கவும்.
# தேவையில்லாததைப் பிரிக்கவும்.
# தேவையானதை ரகம் வாரியாகத் தனித்தனியாகப் பிரிக்கவும்.
# தேவையில்லாததை உடைந்தது தனியாகவும் எப்போதாவது பயன்படுத்துபவற்றைத் தனியாகவும் பிரிக்கவும்.
# எப்போதாவது பயன்படுத்தும் பொருள்களின்மீது சிகப்பு அட்டை கட்ட வேண்டும்.
# சிகப்பு அட்டை கட்டியவற்றைச் சிகப்பு அட்டை பகுதி என்று தனியாக ஒரு இடத்தில் வைக்கவேண்டும்.
# இந்தச் சிகப்பு அட்டைப்பொருள்களை பயன்படுத்துவதை ஒரு வருடம் பதிவேட்டில் பதிவு செய்து கண்காணிக்க வேண்டும்
# அதிலிருந்து தினசரி எடுக்கப்படும் பொருளைத் தேவைப்படும் பொருள்களிடம் மாற்ற வேண்டும்
# வாரத்துக்கு ஒரு முறையோ அல்லது மாதத்துக்கு ஒரு முறையே எடுக்கப்படும்
பொருள் என்றால் அதனைத் தனியாக வைத்துத் தேவைப்படும் சமயத்தில் எடுத்துப்
பயன்படுத்த வேண்டும்.
# ஒரு வருடத்துக்கு ஒரு முறை என்றால் அந்தப் பொருளை அந்த இடத்திலிருந்து அகற்ற வேண்டும்.
# ஒரு வருடத்துக்கு எடுக்கப்படவேயில்லையென்றால் அந்தப் பொருளைத் தூக்கி எறிந்துவிட வேண்டும்
செய்டன் - ஒழுங்குபடுத்துதல்
தேவையில்லாத பொருட்களை நீக்கிய பின்பு இப்போது நம்மிடம் இருப்பது தேவையானவை
மட்டுமே. இதில் எந்த இடத்தில் எதை வைக்க வேண்டும் என்று தீர்மானிக்க
வேண்டும். அதற்கான லேபிள் அதாவது தலைப்பை அதன் மேல் ஒட்டி வைக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக, துணிகளை வைக்கும் பீரோ என்றால் பீரோவின் முதல் அடுக்கில்
நைட்டி என்று எழுதி ஒட்டி அதில் நைட்டியை மட்டும் வைக்க வேண்டும்.
நமக்குத் தேவையானவை அதனதன் இடங்களில் இருக்கின்றன என்பதை உறுதி செய்து
கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒரு அலுவலக மேஜையின் டிராயரில் உள்ள
தேவையில்லாதவற்றை காலிசெய்து விட்டால் மீதம் தேவையாக இருப்பதைப்
பட்டியலிடவேண்டும். பேனா, பென்சில், ஸ்டேப்லர், ஸ்டேபிலர் பின், ரப்பர்
ஸ்டாம்ப் பேடு, இவையெல்லாம் தேவை.
சரி இதையெல்லாம் அப்படியே டிராயரில் ஏற்கனவே இருப்பதைப் போலவே வைத்தால்
போதாது. காரணம் அப்படியே வைத்தால் அவை மீண்டும் பழைய நிலைமைக்கு
வந்துவிடும். ஆகவே அதற்குரிய இடத்தில் அது அது இருக்குமாறு செய்யவேண்டும்.
அதற்காகத் தெர்மாகூலிலோ இல்லது கட்டியான அட்டையிலோ ஒவ்வொரு பொருளும்
சரியாகப் பொருந்துமாறு சற்று வெட்டி வைத்தால் பொருள்கள் இடம்மாற வழியே
இருக்காது.
செய்டனின் முக்கியக் குறிக்கோள் அந்தந்தப் பொருள்கள் அதனதன் இடத்தில் இருக்க வேண்டும்.
செய்ஸோ – சுத்தமாக்குதல்
செய்ஸோ என்பது தூய்மை செய்தல். செய்டனின் தொடர்ச்சியாகச் செய்ய வேண்டியது.
ஒரு முறை சுத்தம் செய்வதல்ல. தொடர்ந்து இந்தச் சுத்தத்தைப்
பராமரிக்கவேண்டும்.
செய்கிட்சூ - நிர்வகித்தல்
மேற்கூறிய மூன்று பணிகளும் கட்டாயமாகச் செய்ய வேண்டியது என்பதால் அதற்காகச்
சில விதிமுறைகள் உருவாக்கப்பட்டுப் பின்பு அதனை வழிமுறையாகப் பின்பற்றி
வரவேண்டும். எடுத்துக்காட்டாக, தொழிற்சாலைகளில் உள்ள இயந்திரங்கள் அல்லது
நகர்த்தக்கூடிய பொருட்களுக்கு அது இருக்கக்கூடிய இடத்தில் ஏதாவது ஒரு
கலரில் தரையில் கட்டம் கட்டப்பட்டு அந்தக் கட்டத்தைவிட்டு அந்தப் பொருள்
வெளியே வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நமது அலுவலகத்தின்
வரவேற்பறையிலும் சரி மற்ற அறைகளிலும் உள்ள நாற்காலிகள் இருக்கும் இடத்தைச்
சுற்றியும் இதைப்போன்று கட்டமிடவேண்டும்.
செட்சுகி - தக்க வைத்தல்
முதல் மூன்று பணிகளையும் கட்டாயமாகச் செய்து பின்பு நான்காவது செய்கிட்சூ
வின்படி முதல் மூன்றையும் தொடர்ந்து நிர்வகிப்பதைத் தொடர்ச்சியாகவும்
சிறிதளவுகூடத் தொய்வில்லாமல் ஒரு ஒழுங்குமுறையாகச் செய்வதைச் செட்சுகி
எனலாம்.
இதுவரை கூறிய அனைத்தையும் ஒரு கட்டளையாகவோ அல்லது விதிமுறையாகவோ
செயலாக்கிவிடலாம்;. ஆனால் தொடர்ந்து பராமரிப்பது சுலபமல்ல. மற்ற நான்கு எஸ்
களையும் செய்ததைவிட இந்த 5வது எஸ்ஸை யார் சரியாகச் செய்கிறார்களோ
அவர்களைப் பாராட்டி நினைவுப் பரிசு போன்று அளிப்பார்கள். அதனால்
மற்றவர்களும் இந்தப் பணியினைத் திறம்படச் செய்வார்கள்.
ஜப்பானின் வெற்றிக்குப் பின்னே இந்த 5எஸ் மந்திரமும் உள்ளது.
- வீ.சக்திவேல், தொடர்புக்கு: sundarisakthi@gmail.com தே.கல்லுப்பட்டி
http://tamil.thehindu.com/general/education/article6902870.ece
No comments:
Post a Comment