Saturday, January 10, 2015

மரகத நடராஜரின் மகிமை

திருஉத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் நடக்கும் ஆருத்ரா தரிசனம் மகத்துவம் வாய்ந்ததாகக் காலம்காலமாகக் கருதப்பட்டு வருகிறது. அதற்குக் காரணம் இங்கே இருக்கும் மரகத நடராஜர் சிலைதான்.
நவரத்தினங்களில் ஒன்றான பச்சை மரகதம் மிகவும் மென்மையான கல். மத்தளம் முழங்க மரகதம் பொடிபடும் என்று கூறுமளவுக்கு மென் இயல்புடையது. அவ்வளவு மென்மையான மரகதக் கல்லை உளி கொண்டு செதுக்கி 6 அடி உயரத்தில் அற்புதச் சிலையாக வடித்துள்ளனர் நமது முன்னோர்கள்.
ஒளி மற்றும் ஒலியால் பாதிக்கப்படாமல் இருக்க ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டு பாதுகாக்கப்படுகிறது இந்த மரகத நடராஜர் சிலை. நித்ய அபிஷேகங்கள்கூட, இந்தச் சிலைக்குப் பதிலாக உள்ள உள்ளங்கை அளவு மரகத லிங்கத்திற்குத்தான் நடைபெறும்.
ஆண்டில் ஒருநாள், அதுவும் சிவனுக்கு உகந்த நாளான ஆருத்ரா தரிசனம் அன்று மட்டுமே மரகத நடராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அன்றைய தினம் முழுவதும் சந்தனக்காப்பு இல்லாமல் மரதகத் திருமேனியுடன் நடராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். அதைக் காணவே நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் இங்கு குவிகிறார்கள். 
 காலை 10 மணிக்கு மரகத நடராஜரின் சந்தனக்காப்பு களையப்படுகிறது. இரவு 9 மணிக்கு மீண்டும் சந்தனக்காப்பு பூசப்படும். அதுவரையில் பக்தர்கள் ஒளிவீசும் பச்சை மரகத நடராஜரைக் கண் குளிர தரிசிக்கலாம். மதுரையில் இருந்து ராமநாதபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த ஆலயம் மிகமிகப் பழமையானது. பூலோக கைலாசம் என்றும், ஆதிசிதம்பரம் என்றும் அழைக்கப்படும்.
மதுரையில் இருந்து ராமநாதபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த ஆலயம் மிகமிகப் பழமையானது. பூலோக கைலாசம் என்றும், ஆதிசிதம்பரம் என்றும் அழைக்கப்படும் இந்த ஆலயத்தைப் புனரமைக்கச் சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசின் தொல்லியல் துறை 2 கோடி ரூபாய் ஒதுக்கியது என்பதே இதன் பழமைக்கு சாட்சி.
சிவபூஜைக்கு தாழம்பூ பயன்படுத்தப்படும் ஒரே ஆலயம் இது தான். சிவனின் அடி, முடியை காண விஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும் நடந்த போட்டியில் பிரம்மன் வெல்வதற்காக தாழம்பூ பொய் சாட்சி சொன்னது. ‘இனி எந்தப் பூஜைக்கும் நீ பயன்பட மாட்டாய்’ என்று சாபத்துக்குள்ளான தாழம்பூ, இந்தத் தலத்தில் தான் சிவனிடம் வேண்டி மன்னிப்பு பெற்றதாம். அதனால்தான் இங்கு மட்டும் பூஜையில் தாழம்பூ பயன்படுத்தப்படுவதாக அர்ச்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.
சிதம்பரத்தில் அம்பலத்தில் ஆடியதுபோல, இறைவன், உமையவள் மட்டுமே காணும் வகையில் அறைக்குள் நடனமாடிய தலம் இது. இந்தக் கோயிலில் மாணிக்கவாசகரும் லிங்க வடிவத்தில் அருள்பாலிக்கிறார். இங்குள்ள சகஸ்கரலிங்கமும் பிரசித்தி பெற்றது. தெப்பக்குளமான அக்னிதீர்த்தமும், தல விருட்சமான இலந்தையும் அவ்வளவு அழகு.
இங்கிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் தான் ராமேஸ்வரம் உள்ளது. தற்போது நேரடியாக ராமேஸ்வரத்திற்கு பஸ் இயக்கப்படுகிறது என்பதால், ஒரே நாளில் இரு தலங்களுக்கும் செல்ல முடியும். ஆருத்ரா தரிசனத்தன்று சிறப்பு பஸ்களுக்கும் பஞ்சமிருக்காது.

No comments:

Post a Comment