Friday, August 29, 2014

சஞ்சீவனி மூலிகை & செங்காந்தள் மலர்

ரோடியோலா எனும் அதிசய மூலிகை.ராமாயணத்தில் அனுமார் கொண்டு வந்ததாகக் கருதப்படும் சஞ்சீவனி மூலிகை போன்ற ஒன்று இமாலயத்தில் இருப்பதாக ஆய்வாளர்கள் அதிசயித்துள்ளனர்.

இமாலயத்தில் உயிர்வாழ்வதற்கே கடினமான பகுதிகள் உள்ளன. இந்நிலையில் உடல் நோய் எதிர்ப்புச் சக்தியை பன்மடங்கு அதகரித்து ஒழுங்கு படுத்துவதும், பிராண வாயு பற்றாக்குறை இருக்கும் மலைப்பிரதேசங்களில் உயிர்களைப் பாதுகாக்கவும் செய்யும் ரோடியோலா என்ற அதிசய மூலிகையின் மகத்துவங்களை விஞ்ஞானிகள் விதந்தோதி வருகின்றனர்.

இந்த ரோடியோலாவை ‘சஞ்சீவனி’ என்றே கருதுகின்றனர் விஞ்ஞானிகள். லடாக்கில் ‘சோலோ’ என்று அழைக்கப்படும் இந்த மூலிகையின் அரிய குணங்கள் இன்னும் கண்டுபிடிக்கப் படாமலே உள்ளது. ஆனால் லடாக்வாசிகள் இதன் இலைகளை உணவுப்பொருளாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

லே பகுதியில் உள்ள மலைப்பகுதி ஆய்வுக்கான ராணுவ அமைப்பின் விஞ்ஞானிகள் இதன் மருத்துவ குணங்களை ஆராய்ந்து வருகின்றனர்.

ரோடியோலா என்ற இந்த மூலிகை உடலின் இயற்கையான நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகிறது, கடினமான வாழ்விடச் சூழலில் நம்மை தகவமைத்துக் கொள்வதற்கான சக்தியை வழங்குகிறது, அனைத்திற்கும் மேலாக கதிரியக்கத்தின் விளைவுகளிலிருந்தும் இந்த மூலிகை உயிர்களைப் பாதுகாக்கிறது என்று ஆய்வுக் கழகத்தின் ஆர்.பி.ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

ரசாயன ஆயுதங்கள், வெடிகுண்டுகள் ஆகியவை வெளிப்படுத்தும் நச்சுக் கதிரியக்கத்தின் விளைவுகளை இந்த ரோடியோலா மூலிகை அகற்றும் என்கிறார் இவர்.

மேலும் மன உளைச்சல், கவலை ஆகியவற்றுக்கு சிறந்த நிவாரணையாகவும் ஜீரண சக்திகளை மேம்படுத்தும் குணங்களும் இந்த மூலிகைக்கு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 தமிழக அரசின் மாநில மலரான செங்காந்தள்மலர்.
தமிழ்நாடு அரசின் மாநில மலரான செங்காந்தள் அழிவின் விளிம்பில் உள்ள நிலையில், புற்று நோய் தீர்க்கக் கூடிய அரிய மருத்துவ குணம் கொண்டுள்ளதால், உலக அளவில் அதற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.
தமிழக அரசின் மலராக செங்காந்தள் மலர் போற்றப்படுகிறது. சங்க இலக்கியமான பத்துப் பாட்டு, எட்டுத்தொகை ஆகியவற்றில்ஏழு இடங்களில் செங்காந்தள் மலர் இடம் பெற்றுள்ளது. இதில் 64 இடங்களில் காந்தள் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. செங்காந்தள் மலர் உயர்ந்த மலைகளிலும், மலை முகடு, சரிவுகளிலும் அதிக அளவு காணப்படும். மலரின் நிறம் நெருப்பு போன்றதாக வும், குருதி வண்ணம் மிக்கதாகவும், ஒளி பொருந்தியதாகவும் புலவர்களால் வர்ணிக்கப் பட்டுள்ளது. அந்தக் காலத்தில் வேடுவர்களிடம் செங்காந்தள் மலர்களைச் சூடும் பழக்கம் இருந்துள்ளது. மற்ற பெண்களும் பிற மலர்களுடன் செங்காந்தள் மலரைக் கோர்த்து சூடி மகிழ்ந்துள்ளனர்.
தேன் மிகுதியாகக் காணப்படும் செங்காந்தள் மலரை எப்போதும் வண்டினங்கள் வட்டமிட்டுக் கொண்டே இருக்குமாம். பிற மலர்கள் பூத்து உதிரும். ஆனால், செங்காந்தள் மலர் வாடினாலும் உதிர்வது இல்லை. கிராமங்களில் கண்வலி பூ என்றும் இதனை அழைப்பது உண்டு. இந்தப் பூவை உற்றுப் பார்த்தால் கண்வலி ஏற்படும் என்பதால் அவ்வாறு அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
உயிர் காக்கும் மகத்துவம்
செங்காந்தள் மலர் புற்று நோயைத் தீர்க்கக் கூடிய அரிய மருத்துவ குணம் கொண்டது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் பரவாமல் தடுக்கக் கூடிய கால்சிசின், குலோரியோசின் மருந்துகள் செங்காந்தள் செடியில் உள்ள விதை களிலும், கிழங்குகளிலும் அதிக அளவு உள்ளது. இதில் இருந்து மருந்துகளை எடுத்து, ஹீமோ தெரபி மூலம் புற்றுநோய் பரவாமல் தடுக்கலாம் என சொல்லப்படுகிறது. செங்காந்தள் செடியின் விதையை ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு மருந்து நிறுவனங்களும் அதிகஅளவு வாங்குகின்றன.
உலக அளவில் மவுசு
தமிழகத்தில் திண்டுக்கல், ஈரோடு மாவட்டம் சித்தோடு, துறையூர் ஆகிய இடங்களில் விவசாயிகள் அதிக அளவில் செங்காந்தள் மலரை பயிரிட்டு வருகின்றனர். விதையை வெளிநாட்டு நிறுவனங்கள் கிலோ ரூ.850-க்கு கொள்முதல் செய்கின்றன.
இதன் கிழங்கிலும் மருத்துவ குணம் இருந்தாலும், ஐந்தாண்டுகள் வரை இந்தப் பயிர் வளர்வதால், இதன் விதையையே அதிக அளவு வாங்குகின்றனர். செங்காந்தள் கிழங்கு கிலோ 300 ரூபாய் விலையில் விற்கப்படுகிறது. குறைந்த தண்ணீர் இருந்தாலே இந்தப் பயிர் செழித்து வளரும் தன்மை கொண்டது. தமிழக மலரில் புற்று நோய் தீர்க்கும் மருத்துவ குணத்தால், உலக அளவில் வரவேற்பு அதிகரித்துள்ளது.
அழிவின் விளிம்பில் செங்காந்தள்
இதுகுறித்து சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் உயிர் தொழில்நுட்பவியல் பேராசிரியர் பி.வெங்கடாசலம் கூறியதாவது:
‘‘தமிழகத்தில் அழிந்து வரும் தாவரங்களை பாதுகாக்கும் முக்கிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறோம். திசு வளர்ப்பு மூலம் அழிந்து வரும் தாவரங்களை சோதனைக் கூடங்களில் வளர்த்து, புத்துயிர் அளித்து, நிலங்களில் விளைவித்து வருகிறோம்.
மாநில மலரான செங்காந்தள் அழிந்து வரும் தாவரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. வனத்துறையின் சிவப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ள அழிந்து வரும் தாவர இனங்களில் செங்காந்தள் மலரும் உள்ளது.
புற்றுநோயைத் தீர்க்கக் கூடிய அரிய மருத்துவ குணம் கொண்ட செங்காந்தள் மலரை அழிவின் விளிம்பில் இருந்து காத்திட, விவசாயிகள் பெருவாரியான இடங்களில் பயிரிட வேண்டும். இதன் மூலம் உயிர் காக்கும் மருந்தும், மாநில மலரின் பெருமையும் வருங்காலத்தில் நிலை நிறுத்தப்படும்’’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment