திருவனந்தபுரம் ஆட்டோக்கள்
நாட்டிலேயே திருவனந்தபுர ஆட்டோக்காரர்கள் அளவுக்கு நியாயவான்களை எங்கும் சந்திக்க முடியவில்லை. குறைந்தபட்சக் கட்டணம் ரூ. 14. ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்குள் சென்றுவிட்டு 15 ரூபாய் கொடுத்தீர்களேயானால், ஒரு ரூபாய் மீதம் தருகிறார்கள்!
மும்பை பஸ்கள் - டாக்ஸிகள்
நாடு முழுவதும் விதவிதமான பஸ்கள் ஓடினாலும் மும்பை பஸ்களின் ஒய்யாரமே தனி. அவற்றின் தனிக் கவர்ச்சிக்கு முக்கியக் காரணம் எளிமை. சென்னையின் ‘சிறப்பு பஸ்’களைவிடவும் விலை குறைவு இவை. தரமும் உழைக்கும் திறனும் அதிகம். ஆடம்பரம் இல்லாத, கழுத்தைத் தள்ளாத சாதாரண இருக்கைகள், நடுவே நின்று பயணிக்க தாராளமான இடமும் வசதியான கைப்பிடிகளும். கண்களை மறைக்காத, நல்ல காற்றோட்டம் தரும் ஜன்னல் ஓரக் கண்ணாடிகள். நிறுத்துமிடத்தை எவரும் உணர்த்துவதற்கேற்ப நீளக் கயிறுடன் ஓட்டுநருக்கு அருகில் தொங்கும் மணி. இன்னும் மாடி பஸ் சவாரி வாய்ப்பும் கிடைத்தால், ஆகாககாகா!
மும்பையில் எங்கும் டாக்ஸிகள் இழைந்துகொண்டிருப்பதில் வியப்பேதும் இல்லை. இங்கு அது வசதி படைத்தோருக்கு மட்டுமான வாகனம் அல்ல. குறைந்தபட்சக் கட்டணம் ரூ.20. மீட்டர் ரூ.28.50 காட்டி நீங்கள் நீங்கள் ரூ.30 கொடுத்துவிட்டு மீதி வேண்டாம் என்று கூறினால், கார் ஓட்டுநரின் ஒரு சலாம் உங்களுக்கு நிச்சயம்!
கொல்கத்தா படகுகள் - டிராம்கள்
தூங்கிக்கொண்டே செல்கிறோம், திடீரென்று கண் விழிக்கும்போது சாலையோரம் ஆற்றிலோ, கால்வாய்களிலோ படகுகள் செல்கின்றன என்றால், நீங்கள் கொல்கத்தாவில் இருக்கிறீர்கள் என்பது உறுதி. ஐந்து ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் வாய்ப்புள்ள இடங்களிளெல்லாம் படகு சவாரி நடத்துகிறார்கள். வெறும் சுற்றுலாப் பயணிகள் மட்டும் அல்ல; உள்ளூர்க் காரர்களும் பயணிக்கிறார்கள்.
ஆயிரம் பேரோடு பயணம் செய்யலாம்; காதலியுடன் பயணம் செய்வதுபோல் ஆகுமோ? டிராமும் அப்படித்தான். ஆயிரம் வாகனங்களில் பயணம் செய்யலாம்; எதையும் டிராம் சவாரியோடு ஒப்பிட முடியாது. பயணம் என்பது வெறுமனே ஓரிடத்தை அடைவதற்கான நோக்கத்தை மட்டும் கொண்டது அல்ல என்பதை உணர்த்துவது டிராம் சவாரி. சாலையில் ஓடும் ரயில் இது. நீங்கள் நினைத்த மாத்திரத்தில் ஏறவும் இறங்கவும் கூடிய அளவுக்கு நிதானமான சவாரி.
ரயிலுக்காக எல்லா வாகனங்களும் காத்திருப்பதைப் பார்த்துப் பழக்கப்பட்டவர்களுக்குச் சாலையில் ஏனைய வாகனங்களோடு டிராம் காத்திருப்பதைப் பார்ப்பதும், முன்னே செல்லும் சைக்கிள் ஓட்டியிடம் வழி கேட்டு அதன் ஹாரன் ஒலிப்பதும் வாழ்வின் விந்தைகளில் ஒன்று. கொல்கத்தாவில் பாதி இடங்களைப் பார்த்துவிடலாம் ஆறு ரூபாயில். டிராம் சவாரியில்.
டெல்லி ரிக்ஷாக்கள்
ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் டெல்லி காட்டும் அற்புதமான வழி சைக்கிள் ரிக்ஷாக்கள். கொல்கத்தாவில் கை ரிக்ஷாக்களைப் பார்க்கும் பலர் ஏன் வங்காளிகளுக்கு சைக்கிள் ரிக்ஷா தெரியாதா என்று கேட்கலாம். உண்மையில் நாட்டிலேயே முதன்முதலில் கை ரிக்ஷாக்களைக் கொண்டுவந்த மாநகரங்களில் ஒன்று கொல்கத்தா.
1930-களிலேயே இங்கு கை ரிக்ஷாக்கள் வந்துவிட்டாலும் ஏனோ வங்காளிகளுக்கு இன்னமும் கை ரிக்ஷாக்கள் மீதே தனி மோகம். ஒரு கை ரிக்ஷாக்காரர் “ஹே... இது ராஜ வாகனம் இல்லையோ? ’’ என்று கேட்டது ஞாபகத்துக்கு வருகிறது. பொதுவாகவே, இந்தியாவின் தென்பகுதி நீங்கலாக எல்லா நகரங்களிலும் சைக்கிள் ரிக்ஷாவுக்கு முக்கிய இடம் இருக்கிறது என்றாலும் டெல்லியில் சைக்கிள் ரிக்ஷா சவாரி அலாதியானது (அழுது வடியும் பாடாவதி ரிக்ஷாக்கள் இங்கு கிடையாது; தவிர, எல்லா ரிக்ஷாக்களும் ஒரே மாதிரியானவை).
டெல்லியில் 1940-களில்தான் ரிக்ஷா பரவலானது. ஆனால், டெல்லிக்காரர்கள் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்கள். இன்றைக்கும்கூட நகரில் எங்கும் ரிக்ஷாக்களைப் பிடிக்க முடிகிறது. டெல்லியில் மட்டும் கிட்டத்தட்ட ஆறு லட்சம் ரிக்ஷாக்கள் ஓடுவதாகச் சொல்கிறார்கள். குறைந்தபட்சக் கட்டணம் 20 ரூபாய். ரொம்பப் பக்கம் என்றால், 10 ரூபாய் கொடுத்தால்கூட வாங்கிக் கொள்கிறார்கள். சைக்கிள் ரிக்ஷா பயணம் என்பது வேடிக்கை பார்த்துக்கொண்டே நடக்கும் பயணத்தைத் தாண்டி இரு நிம்மதிகளைத் தரக் கூடியது. 1. சமூகத்தில் அடித்தட்டில் இருக்கும் தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் வாய்ப்பு அது. 2. சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத பயணம் அது!
அகமதாபாத் பிரத்யேக பஸ் தடங்கள்
நாட்டிலேயே பொதுப் போக்குவரத்துக்குக் கொடுக்க வேண்டிய சரியான மரியாதையை அகமதாபாதில் பார்க்கலாம். நாடு முழுவதும் சாலைகள் எல்லா வாகனங்களுக்கும் பொதுவாக போக, வர என்று இரு தடங்களாகப் பிரிக்கப் பட்டிருக்கின்றன என்றால், அகமதாபாதில் மூன்று தடங்கள். இடது - வலது, போக - வர. நடுவில் உள்ள தடம் பஸ்களுக்கு மட்டுமேயானது. வேலிபோல் தடுப்பு அமைத்து ஒதுக்கியிருக்கிறார்கள். விரைவுவழி பஸ் போக்குவரத்துத் திட்டத்தின் கீழ் இயங்கும் பஸ்கள் மட்டும் இந்தத் தடத்தில் செல்கின்றன (ஏனைய பஸ்கள் இட வலத் தடங்களில்). இந்த பஸ்களுக்கான நிறுத்தங்களும் இந்தப் பாதைக்குள்ளேயே அமைக்கப்பட்டிருக்கின்றன. பஸ்கள் ரயில்கள்போல் சென்றுவருகின்றன.
இந்தியா முழுவதும் பெட்ரோல் - டீசல் விலையும் வாகனங்களின் விலையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கிறது. எல்லா ஊர்களிலுமே பணக்காரர்களும் இருக்கிறார்கள்; ஏழைகளும் இருக்கிறார்கள். ஆனால், வாகனங்களிலும் பயண முறைகளிலும் மட்டுமே எத்தனை எத்தனை வித்தியாசங்கள்? காரணங்கள் என்ன? அரசின் தொலைநோக்கின்மையும் பொறுப்பற்றதனமும் மட்டுமே காரணங்கள் என்று நான் நம்பவில்லை!
No comments:
Post a Comment