Monday, May 12, 2014

இந்தியாவில் அறிவுஜீவியாகப் பிறக்கக் கூடாது! - இயக்குநர் ஞான. ராஜசேகரன் பேட்டி

http://tamil.thehindu.com/cinema/cinema-May 9, 2014

‘பாரதி’, ‘பெரியார்’ ஆகியோரின் வாழ்க்கையை மையப்படுத்திய படங்களை இயக்கிக் கவனம் பெற்றவர் ஞான. ராஜசேகரன் இ.ஆ.ப. தற்போது கணித மேதை ராமானுஜத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படமொன்றை ‘ராமானுஜன்’ என்ற தலைப்பிலேயே இயக்கி முடித்திருக்கிறார். சுயசரிதைப் படங்கள், ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாறு, தமிழ்த் திரையுலகம் போன்ற பல விஷயங்கள் குறித்து அவரிடம் உரையாடியதிலிருந்து...
ராமானுஜன் வாழ்க்கையைப் படமாக்க என்ன காரணம்?
குட்வில் ஹன்டிங் (Goodwill Hunting) என்ற ஹாலிவுட் படம் பார்த்தேன். அந்தப் படத்துல ஒரு கதாபாத்திரம், இன்னொரு கதாபாத்திரம் கிட்ட “நீ என்ன பெரிய ராமானுஜன்னு நினைப்பா?”ன்னு சொல்லுது. “உனக்கு என்ன பெரிய ஜீனியஸ்னு நினைப்பா..” அப்படிங்கிறதுக்குப் பதிலா “நீ என்ன பெரிய ராமானுஜன்னு நினைப்பா?”ன்னு சொல்றாங்க. தமிழ்நாட்டுல பிறந்த ஒருத்தனைப் பத்தி ஹாலிவுட்ல வசனம் இருக்கு. ராமானுஜன் பற்றி அமெரிக்காவுல ஒரு புத்தகம் வெளியாச்சு. அதோட 15-வது பதிப்பு இப்போ வித்துகிட்டு இருக்கு.
ராமானுஜன் கண்டுபிடித்த ‘ஈக்குவேஷன்’ல (Equation) இன்னும் ஒரு 30% கண்டுபிடிக்கப்படாம இருக்கு. முயற்சி பண்ணிட்டு இருக்காங்க. அப்படிப்பட்ட ராமானுஜனைப் பற்றி நம்மோட பாடப் புத்தகத்தில் இருக்கா? நாம யாராவது அவரைப் படிச்சிருக்கோமா? அவரை இளைய தலைமுறை தெரிஞ்சுக்கணும்ங்கிற நோக்கத்துக்காகப் பண்ணியிருக்க படம் ‘ராமானுஜன்'.
ராமானுஜத்தோட வாழ்க்கையைப் படிச்சப்போ உங்கள் பார்வையில எதெல்லாம் புதுசா பட்டுது?
ஒருத்தரோட வாழ்க்கைச் சரிதத்தை நினைச்ச உடனே படமா எடுக்க முடியாது. அதுல ஒரு சினிமா இருக்கணும். அவரைப் பற்றிப் படிக்க ஆரம்பிச்சப்போ நிறைய விஷயங்கள் புதுமையாவும், புதுசாவும் இருந்தது. ராமானுஜன் வெளிநாட்டுல 5 வருஷம் இருந்தாரு. அங்கே அவரை காச நோய் தாக்கிடுச்சு. இங்க வந்து 32 வயசுல இறந்துட்டாரு. அவரோட மருத்துவக் குறிப்புகளைப் பற்றி ஒரு பெரிய புத்தகமே ஆங்கிலத்துல இருக்கு. ராமானுஜன் எப்படிச் செத்தார், அது காச நோய்தானா, அவரு சாப்பிட்ட மருந்துகள் என்ன... இப்படி நிறைய விஷயங்கள் அந்தப் புத்தகத்துல இருக்கு.
அப்புறம் இந்தியாவுல அறிவுஜீவியா பிறந்தா அவங்க படுற பாடு இருக்கே, அதைச் சொல்லி முடியாது. ஒருவனோ இல்ல ஒருத்தியோ ஜீனியஸ்னு தெரிஞ்சா அவங்க குடும்பம், சமூகம் முதற்கொண்டு பஞ்சர் பண்ணத்தான் பாக்குறாங்க. நீ ஒரு ஜீனியஸ் கிடையாதுடா, பைத்தியக்காரன்டா, மத்தவங்கள மாதிரி ஏன் இருக்க மாட்டேங்குறன்னு சொல்றாங்க. ஒரு சராசரி மனிதனைத்தான் எல்லாருக்குமே பிடிக்குது. இல்லைன்னா ஜீனியஸா இருக்குறவங்களுக்குக் கல்யாணம் பண்ணி வெச்சுட்டா சரியா ஆயிடுவாங்கன்னு பேச ஆரம்பிச்சுடுவாங்க. இப்போ இந்த 2014-ல கூட ராமானுஜன் மாதிரியான ஜீனியஸ் நம்ம மத்தியில வாழ்ந்தாக்கூட இந்த நிலைமைதான். கொஞ்ச நாளே வாழ்ந்த அந்த அறிஞன் வாழ்க்கையைப் பத்திப் பேச இப்படி நிறைய இருக்கு......

No comments:

Post a Comment