பித்ருக்களை வழிபடும் திருநாள்
புரட்டாசி மாதத்தில் முன்னோர்களை வழிபடக் கூடிய மஹாளய பட்சம் என்ற 15
தினங்கள் இம்மாத பவுர்ணமி திதி முதல் தொடங்கி அமாவாசையில் நிறைவு
பெறுகிறது.
மஹாளய பட்ச அமாவாசையில் எல்லா மூதாதையர்களும் சூரிய சந்திர உலகத்துக்கு
வருவதால் அனைத்து உறவினர்களுடைய சந்திப்பும் நிகழ்கிறது. அன்று செய்கின்ற
தர்ப்பணத்தில் விடுகின்ற எள் மற்றும் தண்ணீரை ஸ்வேதா தேவி என்பவள் மிக
எளிதாக இறந்தவர்களது கையில் சேர்த்துவிடுகிறாள்.
மஹாளய தர்ப்பணத்தின் அவசியம்
மறந்துவிட்டதை மஹாளயத்தில் விடு என்பார்கள் பெரியவர்கள். நாம்
பெற்றோர்களுக்குச் செய்ய வேண்டிய திதி நாளை விட்டுவிட்டால் இந்தப் புண்ணிய
தினத்தில் செய்துவிடலாம்.
பெற்றோர்கள் ஐம்பூத உடல் எனப்படும் உடலை விட்டு விண்ணுலகம் சென்ற பிறகு
பித்ருக்கள், வைவஸ்வசன் ஆதி என்ற தலைவனின் கட்டுப்பாட்டில் வசிக்கிறார்கள்.
சொர்க்க பூமி என்ற போதிலும் அவர்களுக்கு வேண்டிய உணவு வகைகளைத் தாங்களே
எடுத்துக்கொள்ள முடியாது.
தங்கள் பிள்ளைகளுக்குச் சேர்த்து வைத்த சொத்துகளுக்கு கைம்மாறு வேண்டும்
என்று கேட்டனர். இதனால் பித்ருக்கள் மீது பரிதாபப்பட்ட எமதர்மராஜன்,
அவர்களுக்கு 15 தினங்கள் விடுமுறை கொடுத்து பிள்ளைகளின் கையால் வயிறாரச்
சாப்பிடச் சொல்லி மண்ணுலகிற்கு அனுப்பினான். அந்தக் காலமே மஹாளய பட்சம்.
பித்ருக்களுக்கு உற்சவ காலம் என்று கருதப்படுவதால் இந்த தினங்களில் அவரவர்
தந்தை, தாய் இறந்த திதியில் எள் தர்ப்பணம் செய்து பிண்டம் சமர்ப்பிக்க
வேண்டும்.
நம்மை உயர்த்திய பெற்றோர்களுக்குத் திதி கொடுப்பது நமது கடமை. மஹாளயம்
என்பதற்குச் சுப காரியம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. மஹாளய பட்ச நாட்களில்
சிரார்த்தம் செய்வதால் நமது முன்னோர்களும் சிறு வயதில் இறந்தவர்களும்
பிறந்த உடன் இறந்த குழந்தைகளும், துர்மரணம் அடைந்தவர்களும் நல்ல கதி
அடைவார்கள்.
மஹாளய பட்ச திதிகளின் பலன்கள்
நாம் அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு முதலில் பித்ருக்களைத் திருப்தி
அடையச் செய்தல் வேண்டும். மஹாளய பட்சத் திதி நாட்களில் பிரதமை முதல்
அமாவாசை வரை ஏதேனும் ஒரு கோயிலில் உள்ள புனித தீர்த்தம், நதிக்கரை,
குளக்கரைகளில் அமர்ந்து தர்ப்பணம் செய்துவிடுவதால் பித்ருக்கள் மிகவும்
மகிழ்ச்சி அடைந்து நேரடியாக நாம் தருவதை ஏற்று ஆசி வழங்குவார்கள்.
தர்ப்பணம் செய்யும் இடங்கள்
இந்திய மண்ணில் பல பித்ரு தோஷ நிவர்த்தி ஸ்தலங்கள் காணப்படுகின்றன.
அவற்றில் ராமேஸ்வரம் கடற்கரை, கோடியக்கரை, பவானி கூடுதுறை, குமரி முறை,
திருஆலங்காடு, தில தர்ப்பண புரி, திருவள்ளூர், மன்னார்குடி அருகே
திருராமேஸ்வரம், ஸ்ரீ ரங்கம் அம்மா மண்டபம், திருச்சி முக்கொம்பு,
மயிலாடுதுறை நந்திக் கட்டம், கன்னியாகுமரி, பூம்புகார், வேதாரண்யம்,
திருப்பூந்துருத்தி ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
ஆலயங்களுக்குள் பித்ரு தோஷ நிவர்த்தி தர்ப்பணத்தைச் செய்வதைத் தவிர்க்க
வேண்டும். அங்குள்ள புனித தீர்த்தக்கரைகளில் செய்துவிட்டு ஆலயத்தில் தீபம்
ஏற்றிவிட்டு வருவதே முறையான வழிபாடு.
மகத்துவம் நிறைந்த மணிகர்ணிகா கட்டங்கள்
பெற்றோர் உயிர்நீத்த பின்னர் அவர்கள் நற்கதி அடைய ஒரு முறையாவது காசிக்குச்
சென்று கங்கையில் புனித நீராடி அங்கே மணிகர்ணிகா காட் என்ற படித்துறையில்
பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும்.
அங்கே பிண்டம் சமர்ப்பித்து காசி விஸ்வநாதரை தரிசித்து மற்ற சன்னதிகளையும்
தரிசனம் செய்தபின் கயா சென்று 16 பிண்டங்களை சமர்ப்பித்து விஷ்ணுபாத
தரிசனம் செய்வது வழக்கம்.
காசி தவிர வேதாரண்யத்தில் மணிகர்ணிகா கங்கை, மதுரையில் திருப்பூவனம்
மணிகர்ணிகா குளம், திருச்சியில் உள்ள திருவெள்ளறை புண்டரீகாட்சப் பெருமாள்
கோயிலில் உள்ள வராக மணுகர்ணிகை, பல்லாவரம் அருகில் உள்ள திருநீர்மலை
ரங்கநாதர் கோயில் எதிரில் உள்ள மணிகர்ணிகா புஷ்கரணி ஆகியவை மஹாளய தர்ப்பண
வழிபாடு செய்யவும் பித்ரு தோஷங்கள் அகலவும் உகந்த மதிப்புமிக்க இடங்களாக
விளங்குகின்றன.
மஹாளய பட்சம்கடவுள்கள் செய்த தர்ப்பணம்
இல்லத்தில் உள்ள பெரியோர்களின் ஆசி என்பது மிக உயரிய சொத்து. இது பல
தலைமுறைகளைக் காக்கும் என்பதால் ராமர், கிருஷ்ணர் ஆகிய விஷ்ணு
அவதாரங்கள்கூட இந்த நாளில் தர்ப்பணம் செய்தார்களாம். அவர்களோ ஆதிமுதலான
தெய்வங்கள் அவர்களுக்கு எங்கே முன்னோர்கள் என்று தோன்றலாம்.
அவர்கள் விஷ்ணுவாக இருக்கும்போது, தர்ப்பணம் செய்ய வேண்டிய தேவை இல்லாமல்
இருக்கலாம். ஆனால் அவர்கள் மனித உருவெடுத்துப் பிறந்த இல்லங்களில்
முன்னோர்கள் உண்டல்லவா? அம்முன்னோர்களைத் திருப்திபடுத்தவே, ஆராதிக்கவே
ராமரும், கிருஷ்ணரும் தர்ப்பணம் செய்தார்கள் என்பது குறிப்பிட்டு
நோக்கத்தக்கது.
பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் வல்லமை கொண்ட அவதாரங்களே தர்ப்பணம்
பண்ண வேண்டுமென்றால், மனிதர்கள் எம்மாத்திரம்? பித்ருக்களின் ஆசீர்வாதம்
குலத்தைக் காக்கும் என்பார்கள். மனித குலத்தைக் காக்கவே அவர்களும்
தர்ப்பணம் செய்தார்கள் போலும்.
தர்ப்பணம்
உடல் நிலை சரியில்லாதவர்கள் தர்ப்பணத்தை இல்லத்திலும் அளிக்கலாம். ஆனால்
தீர்த்தத் தலங்களுக்கு சென்று தர்ப்பணத்தை எள், நீர் தெளித்துச் செய்தால்
பலன் பல மடங்கு கூடும் என்பது ஐதீகம்.
தர்ப்பணங்களில் எள் பித்ருக்களுக்கு உரித்தானதாக இருக்கிறது. இந்தத்
தர்ப்பணத்தால் பித்ருக்களுக்கு பசியும், தாகமும் தீரும் என்பது சாஸ்திரம்.
இதனால் வாய் வாழ்த்தாவிட்டாலும் வயிறு வாழ்த்தும் என்பது ஐதீகம்.
மகாளய புண்ணிய காலம்
தம் குலக் கொழுந்துகள் நன்றாக இருக்கின்றனரா என்று காண வரும் முன்னோர்கள்
மனம் மகிழும்படி இக்காலகட்டத்தில் இல்லத்தைத் தூய்மையாக வைத்திருத்தல்
அவசியம். சண்டை சச்சரவுகள் இன்றி, இல்லம் அமைதியாக இருப்பது அவர்களுக்குக்
கூடுதல் மகிழ்ச்சியை அளிக்குமாம்.
இந்த மஹாளய பட்ச நாட்களைக் குறித்து கருட புராணம், விஷ்ணு புராணம், வராக
புராணம் ஆகியவற்றில் சிறப்பித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நாட்களில்
காகத்துக்கு அன்னமிடுதலும், பசுவுக்கு அகத்திக் கீரை அளித்தலும் பல
நற்பலன்களை அளிக்கும்.
பலன்
பித்ருக்கள் ஒருபோதும் தன் குலத்தைச் சபிக்கப்போவது இல்லைதான். ஆனால்
அவர்கள் மனம் மகிழ்வடையும்பொழுது, வழங்கும் ஆசிகள் இல்லத்தில் கவலை
அளிக்கக்கூடிய, திருமணத் தடை, புத்திரப் பேறின்மை, கடன் தொல்லை, மனக் கவலை,
நவக்கிரக தோஷங்கள் ஆகியவற்றை நீக்கி மன அமைதியையும் நிம்மதியையும்
அளிக்கும் என்பது நம்பிக்கை.இந்த நன்னாட்களில் செய்யக் கூடியவை மற்றும்
செய்யக்கூடாதவை எனச் சில விஷயங்கள் உண்டு.
செய்ய வேண்டியவை
இல்லத்தில் உள்ள பெரியவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ பசியால் வாடிவிடாமல்
காக்க வேண்டும். இருக்கும்போதும், இறந்த பின்னும் முன்னோரைக் காப்போம்,
வழிபடுவோம்.
தர்ப்பணத்திற்குப் பின்னரே இல்லத்துப் பூஜைகள் செய்ய வேண்டும்.தர்ப்பணம்
செய்ய வேண்டிய இம்மாதத்தில் திவச நாள் முடிந்த பின்னரே இல்லத்து மங்கள
நிகழ்ச்சிகளை செய்ய வேண்டும்.
ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பன்றும் பித்ருக்களை வணங்கிச் சூரியனை
வழிபடலாம்.ஆண்டொன்றுக்குத் தொண்ணூற்றாறு தர்ப்பணங்கள் செய்ய வேண்டும் என்ற
கணக்கொன்று உண்டு.மகா புண்ணியத்தை அளிக்கக்கூடியது தாய், தந்தையருக்கு
இடைவிடாமல் செய்யும் திவசமே.
தவிர்க்க வேண்டியவை
கர்த்தா என்ற தர்ப்பணம் செய்பவர் தனது பெயரை இந்தக் குறிப்பிட்ட காலத்திற்கு எந்தப் பூஜையிலும் சங்கல்பம் செய்துகொள்ளக் கூடாது.
வளமெல்லாம் தரும் தேவி பாகவதம்
எல்லாச் செயல்களுக்கும் பலன் எதிர்பார்ப்பது மனித குணம். இறைவனிடம் பக்தி கொள்வதுகூடக் காரண, காரியத்துடனேயே செய்யப்படுகிறது.
பலர் வேண்டுதல் நிமித்தமாகவே கோயில்களுக்குச் செல்கிறார்கள். அனைத்து
வளங்களையும் பெறவே மனிதர்கள் ஆசைப்படுகிறார்கள். இதனை நிறைவேற்றித் தருபவள்
சக்தி. பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மூவரும் தியானித்து இருப்பதும் அந்த
தேவியையே என்று தேவி பாகவதத்தில் விஷ்ணு குறிப்பிடுகிறார்.
தேவி பாகவதத்தைப் படிப்பதால், கிடைக்கும் நற்பலன்கள் அதிலேயே
கூறப்பட்டுள்ளன. அதன்படி இதனை பாராயணம் செய்தால் அஸ்வமேத யாகம் செய்த பலனை
அடையலாம். இப்புராணத்தைப் புத்தகமாகத் தானம் செய்தால், புத்திர பாக்கியம்,
தனம், கல்வி ஆகியன கிடைக்கும் என்பது ஐதீகம். தேவி பாகவதத்தை வைத்துப்
பூஜித்தால், லஷ்மியும், சரஸ்வதியும் நீங்காத செல்வமாய் நிறைந்து இல்லத்தில்
இருப்பார்கள். வேதாளம், பேய், பிசாசுகள் இல்லத்தை அண்டாது என்று தேவி
பாகவதம் கூறுகிறது.
இதனை நவராத்திரியில் பாராயணம் செய்தால், வேண்டுதல் பன்மடங்கு பலிக்கும்
என்றும், யார் பூஜித்தாலும் பேதமின்றி வரங்களை அள்ளிக் கொடுப்பவள் என்றும்
தேவி பாகவதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவி பாகவதம் எழுவதற்கான காரணமே
ஒரு சுவையான கதைதான். வியாச முனிவர் வழக்கம்போல் ஒரு நாள் தியானத்தில்
ஆழ்ந்திருந்தார். அப்போது இரண்டு ஊர்க்குருவிகள் ஆனந்தமாக
விளையாடிக்கொண்டிருந்ததைக் கண்டார். குருவிகள்கூட ஆண், பெண்ணாய் இணைந்து
இன்பமுற முடியுமா என்ற ஆச்சரியக் கேள்வி அவருள் எழுந்தது.
இதற்குள் பெண் குருவி கருவுற்றது. ஆண் குருவி கூடு கட்டித் தயாராக வைத்தது.
குறித்த காலத்தில் பெண் குருவி முட்டையிட்டுக் குஞ்சு பொரித்தது. கீச்,
கீச் என்று குஞ்சுகள் சப்தமிட்டுத் தன் தாய், தந்தையருடன் கொஞ்சி
விளையாடின. தந்தைக் குருவி, எங்கோ சென்று கஷ்டப்பட்டு உணவை எடுத்து வந்து
குஞ்சுகளுக்கு அன்புடன் ஊட்டியது.
இதனைக் கண்ட வியாசருக்கு ஆச்சரியம். இந்தக் குஞ்சுகள் பெரியவர்களாகி
இக்குருவிகளைக் காப்பது வழக்கத்தில் இல்லை. பெரிய குருவிகள் இறந்தால்,
பிள்ளை என்ற முறையில் தர்ப்பணம் முதலானவற்றைச் செய்யப் போவதுமில்லை. ஆனால்
இருந்தும் இந்தப் பெற்றோர் குருவிகள், எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல்
அன்பு பாராட்டும் காரணம் என்ன என ஆராயத் தொடங்கினார் வியாசர்.
அனைத்து உயிரினங்களும் `புத்` என்ற நரகத்தில் வீழாமல் இருக்க புத்திரன்
தேவை என்பதை ஆய்வின் பலனாகக் கண்டார் வியாசர். தவசீலரான அவருக்கும்
புத்திரன் வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. உத்தமமான ஞானவானாக அப்புத்திரன்
இருக்க வேண்டும் என அவர் விரும்பினார். மேரு மலைக்குச் சென்று தவமியற்றி
இப்பேறு பெற விரும்பினார்.
எந்தத் தெய்வத்தைக் குறித்து தியானித்தால் பலன்முழுமையாகக் கிடைக்கும்
என்று வியாசர் யோசித்தார். அங்கு வந்த நாரதர், விஷ்ணு தியானிப்பதும் அந்த
பராசக்தியைதான் என்று கூறி, பராசக்தியைத் தியானிக்கும்படி கூறினார்.
வியாசரும் அவ்வாறே தியானித்தார். தேவியைக் குறித்து தியானம் செய்ததால்
இவருக்கு பிள்ளையாய் பிறந்தவர் கிளி முகம் கொண்ட அதி அற்புதமான ஞானி சுகர்.
எல்லாம் துறந்த முனிவருக்கே புத்திர பாக்கியம் கிடைக்கச் செய்தது தேவி
உபாசனை என்றால், மனித குலம் முழுமைக்கும் ஆனந்தத்தை அளிப்பது தேவி பாகவத
பாராயணம் என்று பாராயண பலனைச் சொல்லும் சுலோகத்தில் விளக்கப் பட்டுள்ளது.
இப்படிப் பாராயணம் செய்வதற்கான சிறந்த நாட்களாக நவராத்திரித் திருநாட்கள் கருதப்படுகின்றன.
No comments:
Post a Comment