பிளாஸ்டிக் பைகள், கோப்பைகள், தட்டுகள் சுற்றுச்சூழலைக் கெடுக்கின்றன.
அதற்குச் சிறந்த மாற்று காகிதப் பைகள், கோப்பைகள், தட்டுகள் என்பதுதான்
நம்மில் பெரும்பாலோரது நம்பிக்கை. ஆனால், பிளாஸ்டிக் பையைப் போலவே, காகிதப்
பையும் சுற்றுச்சூழலை சீர்கெடுப்பது பலரும் அறியாத சேதி.
மறுசுழற்சி செய்யக்கூடியது, புதுப்பிக்கத்தக்கது, மக்கக்கூடியது என்பதால்
காகிதப் பை, காகிதக் குவளை, காகிதத் தட்டு போன்றவை சுற்றுச்சூழலுக்கு
உகந்தவையாகப் பரிந்துரைக்கப்படுகின்றன. உற்பத்தி செய்வதற்கான மூலப் பொருள்
(இயற்கை வளம்), உற்பத்தி நடைமுறைகள், மறுசுழற்சி ஆகிய அம்சங்களில் காகிதப்
பைகள் சிறப்பாக இல்லை என்பதுதான் உண்மை.
என்ன நடக்கிறது?
காகிதப் பைகள், அட்டைப் பைகள் தயாரிக்க, மரக் கூழே பயன்படுத்தப்படுகிறது.
மறுசுழற்சிக் காகிதம், நாளிதழ் காகிதத்தில் செய்யப்படும் காகிதப் பைகளை
இதில் கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது. காகிதம் உற்பத்தி செய்வதற்கு
அடிப்படை மரங்கள்தான். 2-3 கிலோ காகிதம் தயாரிக்க ஒரு வளர்ந்த மரம் தேவை.
மரங்கள் நமக்குச் செய்யும் சேவையுடன் ஒப்பிட்டால், காகிதங்கள் ஏற்படுத்தும்
இழப்பைப் புரிந்துகொள்ளலாம்.
மாசுபாடு
உற்பத்தியைப் பொறுத்தவரை பிளாஸ்டிக் உற்பத்தியைவிட காகிதப் பை உற்பத்தி 70
சதவீதம் அதிக மாசை வெளியிடுவதாக ஒரு கணிப்பு சொல்கிறது. மேலும் பிளாஸ்டிக்
பைகளைவிட காகிதப் பை தயாரிப்பு 50 மடங்கு அதிக நீர்மாசை உருவாக்குகிறது.
காகித-அட்டைப் பைகளைத் தூய்மைப்படுத்தி நிறமேற்றுவதற்கு, பிளீச்சிங் செய்ய
நிறைய குளோரின் பயன்படுத்தப்படுகிறது. இது நீர்மாசை உருவாக்குகிறது.
காகிதப் பை தயாரிக்க, பிளாஸ்டிக் பையைவிட 4 மடங்கு அதிக எரிபொருள் தேவை.
பிளாஸ்டிக் பை தயாரிப்பைவிட மூன்று மடங்கு அதிகத் தண்ணீர் காகிதப் பை
தயாரிப்புக்குத் தேவைப்படுகிறது.
பிளாஸ்டிக் நல்லதா?
அதற்காகப் பிளாஸ்டிக் பை நல்லது என்ற முடிவுக்கு எக்காரணம் கொண்டும் வர
வேண்டியதில்லை. இரண்டுமே நல்லதில்லை என்பதுதான் நாம் அறிய வேண்டியது.
உற்பத்தி நடைமுறை, கழிவாதல், மக்காத தன்மை ஆகிய அம்சங்களில் காகிதப்
பையைவிடவும் பிளாஸ்டிக் பை மோசமாக இருக்கிறது.
உலகம் முழுவதும் சராசரியாக ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி முதல் 1 லட்சம் கோடி
பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. 1977-ல் அமெரிக்க
சூப்பர் மார்க்கெட்டுகளில் காகிதப் பைகளுக்குப் பதிலாகப் பிளாஸ்டிக் பை
கொடுக்கப்பட ஆரம்பித்தது. 1996-ல் உலகில் பயன்படுத்தப்படும் 5-ல் நான்கு
பைகள் பிளாஸ்டிக் பைகளாக மாறிவிட்டன.
திடக்கழிவான பிளாஸ்டிக்கை அகற்றுவது மிகப் பெரிய பிரச்சினை. அப்புறம்
மக்காமல் ஊரெங்கும் பறந்துகொண்டு, சாக்கடைகளை அடைத்துக்கொண்டு, மழை நீரைப்
போகவிடாமல், மண்ணுக்குள் நீரைவிடாமல் தடுக்கின்றன பிளாஸ்டிக் பைகள்.
சிறந்த மாற்று
பிளாஸ்டிக் பைகள், காகிதப் பைகள் இரண்டுக்கும் சிறந்த மாற்று துணிப்
பைகள்தான். நம்ம ஊர் மஞ்சப்பை, கட்டைப் பைதான் எப்போதுமே சிறந்தது. அதை
மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும், துவைத்துச் சுத்தப்படுத்தியும்
பயன்படுத்த முடியும். அதனால், துணிப் பைக்கு ஜே போடலாம்!
http://tamil.thehindu.com/general/environment/
No comments:
Post a Comment