Sunday, July 28, 2013

மின் கம்பி அறுந்தால் ஆபத்தில்லை!


சூறைக்காற்றால், அறுந்து விழும் மின் கம்பிகளிலிருந்து பாயும் மின்சாரத்தை, தானியங்கி முறையில் நிறுத்தும் கருவியை கண்டுபிடித்த, ஹரிஷங்கர்: நான், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவன். வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லூரியில், "எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்' படிக்கிறேன். தானே புயல் போன்று, சூறைக்காற்றுடன் மழை பெய்யும் போது, மின் கம்பிகள் அறுந்து விழுவதால், எதிர்பாராத மனித இழப்பு ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில், நண்பர்களுடன் இணைந்து கண்டுபிடித்ததே, இந்த தானியங்கி கருவி. "டிரான்ஸ்பார்மரில்' இருந்து செல்லும், ஒவ்வொரு மின் கம்பியிலும், மின்சாரத்தின் அளவை உணரும், "சென்சார்'களை இணைத்தேன். புயல் மற்றும் பலத்த காற்று வீசும் போது, மின் கம்பிகள் அறுந்து, நிலத்தில் பட்ட உடன், நிலம் அதிக அளவு மின் சாரத்தை உறிஞ்சுகிறது. இதனால், மின் கம்பியில் இருந்து சாதாரண நிலையை விட, பல மடங்கு மின்சாரம் வெளியிடப்படுகிறது. அதிக அளவு மின்சாரம் வெளியிடப்படுவதை, சென்சார்கள் உணர்ந்ததும், "மைக்ரோ கன்ட்ரோலரு'க்கு, சிக்னல் மூலமாக தகவல் அனுப்பும். அறுந்து விழும் மின் கம்பிகளில் பாயும் மின்சாரத்தை, நிறுத்த வேண்டும் என்ற கட்டளையை, ஒரு, "சிப்'பில் புரோக்ராமாக பதிவு செய்து, மைக்ரோ கன்ட்ரோலரில் பொருத்தி, டிரான்ஸ்பார்மருடன் இணைத்துள்ளேன். இதனால், சென்சாரில் இருந்து தகவல் கிடைத்ததும், மைக்ரோ கன்ட்ரோலர், தன் கட்டுப்பாட்டில் உள்ள, "ரிலே' சுவிட்ச்சை ஆப் செய்யும். இதன் மூலம், அந்த கம்பி வழியாக மின்சாரம் சப்ளை செய்யப்படுவது தானாக நிறுத்தப்படும். மழை மற்றும் வெயில் காலம் என, எல்லா சூழ்நிலையிலும், 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்படும் தன்மை, இத்தானியங்கி கருவிக்கு உள்ளது. மின்கம்பி அறுபட்டுள்ளதை, அருகில் உள்ள மின்சார அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட லைன் மேனுக்கு தெரியப்படுத்த, மொபைல் போனில் உள்ள, ஜி.எஸ்.எம்., தொழில் நுட்பம் மூலம், எஸ்.எம்.எஸ்., அனுப்பும் கூடுதல் வசதியும் இதில் உள்ளது. தொடர்புக்கு: 96590 95472.

No comments:

Post a Comment