இடும்பன் என்ற அரக்கன் தனது பிறவிப்பிணி நீங்க இத்தலத்தில் நீராடி இறைவனை வழிபாடு செய்தான். இதனால் இவனது சகல பாவமும் நீங்கி இத்தலத்தில் இடும்பையை திருமணம் செய்து கொண்டதால் இத்தலம் இடும்பாவனம் ஆனது. ஒரு முறை திருஞான சம்பந்தர் வேதாரண்யத்திலிருந்து மதுரை வரும்போது இத்தலத்திற்கு வந்தார். அச்சமயம் அவரது கண்களுக்கு இத்தலத்திலுள்ள மணல் எல்லாம் சிவலிங்கமாக தெரிந்தது. எனவே அவர் பயந்து, காலால் நடக்காமல் கால்களை உயரே தூக்கியபடி கைகளால் நடந்து வந்தார் என தலவரலாறு கூறுகிறது.
அகத்தியருக்கு சிவன் திருமண காட்சி காட்டிய தலங்களில் இதுவும் ஒன்று. எனவே மூலவருக்கு பின்னால் சிவன் பார்வதி திருமணக்கோலம் உள்ளது. அகத்தியர் இத்தலத்தில் வாழ்ந்த காலத்தில் பாவங்களால் அரக்கர் வடிவம் பெற்ற தேவசருமன் என்ற அந்தணனுக்கும் அவன் மனைவிக்கும் தன் கமண்டல நீரை தெளித்து, சற்குணநாதரை வழிபடச் செய்து மோட்சமளித்தார்.
குணபரன் என்பவன் தன் தந்தையின் அஸ்தியை இத்தலத்திற்கு கொண்டு வரும்போது தன் தந்தையின் உருவம் தோன்றி மைந்தனை வாழ்த்தி முக்தி பெற்றது. எனவே இத்தலம் பிதுர் முக்தி தலங்களில் முக்கியமானதாக கருதப்படுகிறது. திருக்கடையூரில் மார்க்கண்டேயன் மீது பாசக்கயிறு வீசியதால் எமதர்மனுக்கு சாபம் ஏற்பட்டது. அந்த சாபமானது எமன் இத்தலத்தில் பூஜை செய்ததால் நீங்கியது. எமபயம் போக்கும் தலம்.
ஒரே கல்லால் ஆன கஜலட்சுமியும் தெட்சிணாமூர்த்தியும் சனீஸ்வரனும் இத்தலத்தின் சிறப்பாகும். போரில் ராவணனை வெல்ல ராமன் வழிபாடு செய்த தலங்களில் இதுவும் ஒன்று.
வெள்ளை விநாயகர்: கடல்நுரையால் ஆன சித்திபுத்தியுடன் கூடிய வெள்ளைவிநாயகர் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். இவருக்கு பால், பன்னீரால் அபிஷேகம் செய்து வழிபட்டால் வேண்டியது கிடைக்கும் என்பது ஐதீகம். திருமணத்தடை நீங்கவும், எதிரிகளை வெல்லவும், எமபயம் நீங்கவும் பிரார்த்தனை செய்கின்றனர்.பிரார்த்தனை நிறைவேறியதும் கோயிலில் தீபம் ஏற்ற அதிக அளவில் எண்ணெய் வாங்கிக்கொடுத்து நேர்த்திக்கடன் செய்கிறார்கள்.தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்
அருள்மிகு சற்குணநாதர் திருக்கோயில் இடும்பாவனம் - 614 703 திருத்துறைப்பூண்டி தாலுகா, திருவாரூர் மாவட்டம். +91- 4369 - 240 349, 240 200.
No comments:
Post a Comment