கோட்டயம்: கேரளா மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், கூத்தாட்டுக்குளம் பத்ரகாளி கோயிலில், "மருந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி' ஜூலை 17 ல் துவங்குகிறது. கோட்டயத்தில் இருந்து 38 கி.மீ., எர்ணாகுளத்தில் இருந்து 46 கி.மீ., தூரத்தில், கூத்தாட்டுகுளம் ஸ்ரீதரீயம் ஆயுர்வேத மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ளது இக்கோயில். நம்பூதிரி குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படுகிறது. 600 ஆண்டு பழமையானது. வழிபடும் பக்தர்களுக்கு, மருந்தை பிரசாதமாக தருவது, இக்கோயிலின் தனிச்சிறப்பு.
இது குறித்து கோயில் நிர்வாகி ஹரி நம்பூதிரி கூறியதாவது: ஆயுர்வேத ஓலைச்சுவடிகளில் குறிப்பிட்டுள்ளவாறு, நோய் தீர்க்கும் மூலப்பொருட்களை சேர்த்து மருந்து தயாரித்து, மந்திரங்கள் கூறி, அம்மன் முன் படையல் செய்யப்படுகிறது. பின்னர் அது பக்தர்களுக்கு வழங்கப்படும். விரதம் இருந்து, இந்த மருந்தை 41 நாட்கள் எடுத்துக் கொண்டால், தீராத நோய்கள் நீங்கும்; முன்ஜென்ம பாவம் தீரும் என்பது பக்தர்களின் அனுபவம். இங்குள்ள அம்மன் "கண்ணொளி தரும் கடவுள்' என்று அழைக்கப்படுகிறார். "மருத்துவத்திற்கான கடவுள்' தன்வந்திரி சுவாமிக்கு, இங்கு தனிக்கோயில் உள்ளது.
ஆடி மாத முதல் தேதியான ஜூலை 17 ம் தேதி முதல், ஆக.,16 வரை மருந்து பிரசாதம் வழங்கப்படும். தினமும் காலை 5 முதல் 11 மணி வரை, மாலை 5 முதல் 7.30 மணி வரை நடை திறந்திருக்கும். ஆடி மாதத்தில், "நாலம்பல தரிசனம்'(நான்கு கோயில் தரிசனம்) செய்வது கேரளாவில் வழக்கம். கூத்தாட்டுக்குளத்திற்கு 10 கி.மீ., சுற்றுப்புறத்தில் ராமன், பரதன், லட்சுமணன், சத்ருகனன் கோயில்கள் உள்ளன. இங்கு தரிசித்து விட்டு, அந்த இடங்களுக்கும் பக்தர்கள் சென்றுவரலாம்.
ஜூலை 31 ல் "மருந்து பொங்கல்' இடும் நிகழ்ச்சி நடக்கிறது. அம்மன் சன்னதியில், மருந்து பிரசாதம் சேர்த்து பொங்கலிடும் நிகழ்ச்சி, நாட்டிலேயே தனித்தன்மை வாய்ந்தது. நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வர். முதியோர்கள், நோயாளிகளுக்கு தனி ஏற்பாடுகள் செய்யப்படும். இவ்வாறு கூறினார்.
சென்னை, கோவையில் இருந்து எர்ணாகுளம் வழியும், மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து, கோட்டயம் வழியும் கூத்தாட்டுகுளம் செல்லலாம். மேலும் விபரங்களுக்கு 094478 75067, 094961 34500 ல் தொடர்பு கொள்ளலாம்
அருள்மிகு நெல்லிக்காட்டு பத்ரகாளி கோயில், கூத்தாட்டு குளம், எர்ணாகுளம் மாவட்டம்
காலை 5- 9 மணி, மாலை 5.30 – இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
நீங்கள் கோயிலுக்குப் போனால் பால், பழம், சர்க்கரைப் பொங்கல் இன்னும் சிலவற்றை நைவேத்யமாக படைத்திருப்பீர்கள். ஆனால், கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டம்,கூத்தாட்டுக் குளம் என்ற இடத்தில் உள்ள நெல்லிக்காட்டு பத்ரகாளி கோயிலில்,நோயாளிகள் தாங்கள் பயன்படுத்தும் மருந்தை சுவாமி முன்பு வைத்து பூஜை செய்கிறார்கள். இந்த கோயிலில் தினமும் அம்மனுக்கு மருந்து நைவேத்யமும் செய்கிறார்கள்.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் திருமந்தாம்குந்து என்ற இடத்தில் நெல்லிக்காட்டு இல்ல பரம்பரை நம்பூதிரிகள் வைத்தியம் செய்து வந்தனர். அங்குள்ள பெரியவர் ஒருவரின் கனவில் நோய் தீர்க்கும் தெய்வமான, தன்வந்திரி தோன்றி, “தளிக்குந்நு” என்ற இடத்தில் பலர் நோயால் அவதிப்படுகின்றனர். நீங்கள் சென்று காப்பாற்றுங்கள். அங்கு நிரந்தரமாக தங்குங்கள். மேற்கு நோக்கிய சிவன் கோயில் அங்கு இருக்கும்,” என்றார்.
பெரியவர் நம்பூதிரி, இந்த விஷயத்தைக் குடும்பத்தினருக்கு தெரிவிக்க நெல்லிக்காட்டு குடும்பம் தளிக்குந்நு நோக்கி புறப்பட்டது. கூடவே தங்கள் குடும்பக் கடவுளான அம்மன் விக்ரகத்தையும் எடுத்துச் சென்றனர். வழியில் ஒரு முனிவர் குறுக்கிட்டு வழிகாட்டினார்.அவர்கள் தளிக்குந்நு சிவன் கோயில் அருகில் கூத்தாட்டுகுளம் என்ற இடத்தில் தங்கி மக்களுக்கு சிகிச்சை அளித்தனர். அந்த நம்பூதிரி குடும்பம் விஷக் கடிக்கு சிகிச்சை செய்வதில் பிரபலமானது. எனவே பாம்பு கடித்து ஒருவர் சிகிச்சைக்கு வந்த போது, புதிய இடத்தில் சிகிச்சை தரச் சற்று தயங்கிய நம்பூதிரி பின்னர் சிகிச்சை அளித்தார். வந்தவர் குணமடைந்தார். ஆனால், சிறிது நேரத்தில் அங்குள்ள கால்நடைகள் எல்லாம் இறந்தன.இதனால் தலைமை நம்பூதிரி மனம் உடைந்து தொடர் பஜனை பாடிக்கொண்டே இருந்தார்.அப்போது ஏற்கனவே சந்தித்த முனிவர் வந்து, இனி விஷக்கடிக்கு சிகிச்சை தர வேண்டாம்,கண் சிகிச்சை செய்யுங்கள்” என்று கூறி கண் மருத்துவத்திற்கான ஓலைச் சுவடிகளை அவரிடம் தந்தார். முனிவரது கட்டளைப்படி தங்களோடு எடுத்து வந்த பகவதி(பத்ரகாளி)அம்மன் விக்ரகத்தை கூத்தாட்டு குளத்தில் பிரதிட்டை செய்து கோயில் எழுப்பினர்.
“இந்த அம்மனின் ஆசியோடு ஆயுர்வேத முறைப்படி கண்சிகிச்சையை நடத்துங்கள்.மருந்தை தேவிக்கு நைவேத்தியம் செய்த பின்பு நோயாளிகளுக்கு தாருங்கள்” என்று கூறி விட்டு முனிவர் மாயமானார். முனிவராக வந்தது தன்வந்திரிதான் என எண்ணி, தன்வந்திரி விக்ரகமும் அங்கு பிரதிட்டை செய்யப்பட்டது. அந்த நம்பூதிரி குடும்பத்தின் வாரிசுகள் டாக்டர். என்.பி.பி. நம்பூதிரி, என்.பி. நாராயணன் நம்பூதிரி ஆகியோர் இந்தக் கோயிலை இப்போது நிர்வகித்து வருகின்றனர். இவர்கள் குடும்பத்தினர் எல்லோரும் முறைப்படி ஆயுர்வேதம் படித்து டாக்டர்களாகி “சூஷ்ரீதரீயம்” என்ற கண் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தைக் கோயில் அருகிலேயே நடத்தி வருகின்றனர்.
இந்த மருத்துவமனையில், பிற மாநில மக்கள், குறிப்பாக தமிழகத்தினர், வெளிநாட்டினர் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். நவீன மருத்துவ கருவிகளுடன் பாரம்பரிய ஆயுர்வேத கண்சிகிச்சை அளிப்பதால் இந்த மருத்துவமனை குறுகிய காலத்தில் புகழ் பெற்று விட்டது.பரம்பரை வழக்கமாக, இங்கு நோயாளிகளுக்கு தரப்படும் மருந்தை அதிகாலையில் அம்மனுக்கு நைவேத்யம் செய்கிறார்கள். அதே போன்று நோயாளிகள் வீட்டிற்கு வாங்கி செல்லும் மருந்து களையும் அம்மன் முன்பு வைத்து சிறப்பு பூசை செய்கின்றனர்.மருத்துவமனைக்கு வருபவர்கள் தவறாமல் கோயிலுக்கு சென்று அம்மனை வழிபடுகின்றனர். கண்ணொளி கிடைக்க வேண்டுகிறார்கள்.
சாதி, மத வித்தியாசம் இல்லாமல் அனைவரும் வந்து வணங்கும் இந்த கோயில், கேரள பாரம்பரிய முறைப்படி கட்டப்பட்டுள்ளது. பூசைகள் மிக பக்தியுடைய நம்பூதிரிகளால் நடத்தப்படுகிறது.
ஆண்டு தோறும் பங்குனி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் கொடியேறி, 12 நாட்கள் திருவிழா நடக்கிறது. அப்போது அங்கு வரும் பக்தர்களுக்கு மூன்று வேளையும் உணவு இலவசம்.
வழிகாட்டி: எர்ணாகுளத்தில் இருந்து 48 கி.மீ.,தூரத்திலும், கோட்டயத்தில் இருந்து 38 கி.மீ.,தூரத்திலும் உள்ளது. கோட்டயம்- அங்கமாலி சாலையில் கூத்தாட்டுகுளம் ஜங்ஷனில் இருந்து ஒன்றரை கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.
http://www.sreedhareeyam.com/index.phpoption=com_content&view=article&id=57&Itemid=60
http://www.sreedhareeyam.com/index.phpoption=com_content&view=article&id=57&Itemid=60
No comments:
Post a Comment