'ஆர்கானிக்'
இன்றைய வணிக உலகின் மந்திரச்சொல். ஆர்கானிக் என்று சொல்லி விற்கப்படும் பொருளுக்கு
இன்றைய விலை மற்றவற்றோடு ஒப்பிடுகையில் 3 மடங்கு அதிகம். ஆனாலும் விலை எவ்வளவு இருந்தாலும்
பரவாயில்லை என்று மக்களும் ஆர்கானிக் பொருட்களை அதிகம் வாங்குவதை பெருமையாக நினைக்கின்றனர்.
ஆர்கானிக் என்ற சொல் மட்டுமே தெரிந்தவர்களுக்கு ஆர்கானிக் பொருட்கள் எப்படி இருக்கும்
என்று பெரும்பாலும் தெரிவதில்லை. இதனால் வியாபாரிகளும் தங்கள் தொழில் 'உத்தி'யை பயன்படுத்தி
மக்களை எளிதில் ஏமாற்றுகின்றனர். ஆனால் ஆர்கானிக் பொருட்களை வாங்கும்போது நாம் கவனிக்க
வேண்டிய விஷயங்கள் என சில இருக்கின்றன. அதில் இந்த 10 விஷயங்கள் மிகவும் முக்கியம்.
மின்னுவதெல்லாம் ஆர்கானிக்
அல்ல: காய்கறிகள் கண்களைக் கவரும் வண்ணம் பளபளப்பாக இருந்தால், அது ஆர்கானிக் அல்ல. இயற்கை
பொருட்களின் தோல் மென்மையாக சற்று சுருங்கி இருக்கும். இயற்கை பழங்கள் மற்றும் காய்கறிகள்
ஒரே வடிவத்திலும், ஒரே நிறத்திலும் இருக்காது. தக்காளி ஒருவாரம் வரை கெடாமல், தோல்
மட்டும் சுருங்கினால் அது ஆர்கானிக்.
பூச்சிகள் இருக்கத்தான் செய்யும்: நாம் வாங்கும் ஆர்கானிக்
காய்கறிகளில் 20% முதல் 25%வரை வண்டுகள், பூச்சிகள் இருக்கத்தான் செய்யும். வண்டுகளே
ஒதுக்கிய பழங்களையும், காய்கறிகளையும் நாம் வாங்குவது நம் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.
வண்டுகள் தாக்கிய பகுதிகளை மட்டும் அப்புறப்படுத்திவிட்டு காய்கறிகளை பயன்படுத்தலாம்.
பளிச்சிடும் வெள்ளை? உஷார்! அரிசி, பருப்பு வகைகள்,
சிறுதானியங்களில் வண்டுகள் இருந்தாலோ அல்லது பழுப்பு நிறமாக இருந்தாலோ அந்த பொருட்களை
தாராளமாக வாங்கலாம். அதை சுத்தப்படுத்தி நம் வீட்டில் சேமித்து பயன்படுத்தலாம். சிறுதானியங்கள்
'பளீர்' என வெள்ளையாக இருந்தால் அதில் பச்சரிசி கலக்கப்பட்டிருக்கலாம். சிறிது பழுப்பு
நிறத்தில் இருக்கும் தானியங்களை தேர்ந்தெடுப்பது நல்லது. ஆர்கானிக் அரிசிகளில் தயாரிக்கப்படும்
உணவு மறுநாள் வைத்தாலும் கெட்டுப்போன மணம் வராது.
இனிப்பு மட்டுமல்ல..துவர்க்கவும்
செய்யும்! ஆர்கானிக் தேனை சுவைக்கும்போது சிறிது துவர்ப்புச்சுவையும் இருக்கும். தற்போது
கடைகளில் சர்க்கரை, வெல்லப்பாகை சேர்த்து வேகவைத்த தேன்களே அதிகமாக கிடைக்கிறது.
காலத்திற்கு ஏற்ப உண்ண வேண்டும்: முக்கியமாக அந்தந்த சீசனில்
கிடைக்கும் பழங்களையும், காய்கறிகளையும் பயன்படுத்துவதே ஆரோக்கியத்துக்கு மிகவும் சிறந்தது.
ஆர்கானிக் காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு என பிரத்யேக மணம் இருக்கும். சுவையும் நன்றாக
இருக்கும்.
விலை அதிகம்தான்..ஆனால்..செக்கில் ஆட்டிய எண்ணையாக
இருந்தால் சற்று விலை அதிகமாக இருக்கும். எள்ளிலிருந்து நல்லெண்ணெய் எடுக்கப்படுகிறது.
ஆனால் இங்கு விற்கப்படும் நல்லெண்ணெய், எள்ளை விட விலை குறைவு. செக்கில் ஆட்டிய எண்ணையானது
நல்ல மணமாகவும், உணவுக்கு சுவையூட்டக் கூடியதாகவும் இருக்கும்.
கீரைகளில் இதைக் கவனித்தீர்களா? கீரைகள் பார்ப்பதற்கு
பச்சை நிறமாகவும், செழிப்பாகவும் இருந்தால், அதில் மருந்து வாசனை இருக்கிறதா என பரிசோதிக்க
வேண்டும். கீரைகள் பார்ப்பதற்கு 'பளீர்' என பச்சை நிறத்தில் இருந்தால் மட்டும் போதாது.
பச்சை மணமும் அதில் இருக்க வேண்டும்.
அளவு மட்டுமே அளவுகோல் அல்ல! பொதுவாக அளவினைப்
பொறுத்து மட்டுமே ஆர்கானிக் காய்கறி என நிர்ணயித்து விடக்கூடாது. வீரியரக காய்கறிகள்
பார்ப்பதற்கு அளவில் பெரியதாக இருக்கும். பயிர்களுக்கும், கனிகளுக்கும் கொடுக்கப்படும்
ரசாயன உரங்களை பொறுத்தே ஆர்கானிக் என்பது நிர்ணயிக்கப்படுகிறது.
நாட்டு சர்க்கரைன்னா இப்படி
இருக்கணும்! ஆர்கானிக்கில் பொதுவாக
கருப்பட்டி கருப்பாக இருக்கும், நாட்டுச்சர்க்கரை சுவைத்தால் நாக்கு எரியக் கூடாது.
எங்கிருந்து வருகிறது என்பது
முக்கியம்! நீங்கள் ஆர்கானிக் கடைகளுக்கு
சென்று காய்கறிகள் வாங்குவதாக இருந்தால் எங்கிருந்து காய்கறிகள் வருகின்றன என்ற விபரங்களை
விசாரிக்கலாம். விபரங்களை சொல்லாத கடைக்காரர்களிடம் வாங்குவதை காய்கறிகளை தவிர்க்கலாம்.
பெரிய ஆர்கானிக் கடைகளில் காய்களை வாங்குவதை விட சிறிய வியாபாரிகளிடம் விசாரித்து வாங்குவதே
சரியானது.
முடிந்தவரையில் ஆர்கானிக் காய்கறிகளை நேரடியாக விவசாயிகளிடமோ அல்லது வீட்டில் மாடித்தோட்டம்
அமைத்தோ உற்பத்தி செய்துகொள்ளலாம். இதனால் நம் செலவு குறைவதோடு, ஆரோக்கியமும் அதிகரிக்கும்!
No comments:
Post a Comment