தமிழகத்தில், தற்சமயம், பரவலாக பருவ மழை ஆரம்பித்து விட்டது. இது, சந்தோஷமான விஷயம் தான். ஆனால், இந்த மழைக்காலங்களில் தான், மலேரியா, டெங்கு மற்றும் காய்ச்சல்களை ஏற்படுத்தும், அனபிலஸ், ஏடிஸ், எஜிப்டி கொசுக்களும், அதிகளவில் உற்பத்தியாகிறது என்பது, கவலைக்குரிய விஷயம். புதிய கட்டுமானப் பகுதிகள், காலி மனை, வீட்டுக்கு அருகாமையில் உள்ள காலியிடங்கள், மூடியில்லாத சிமென்ட் தொட்டிகள், பயன்பாடற்ற கார் டயர்கள், மற்றும் பூந்தொட்டிகள் ஆகியவற்றில் தேங்கி நிற்கும் மழை நீரில் தான், இந்த கொசுக்கள் உற்பத்தியாகின்றன. பொது சுகாதார துறையினர், கொசுக்களை ஒழிக்கும் நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான், நுாறு சதவீதம், கொசுக்களை ஒழிக்க முடியும்.
பொதுமக்கள், தாங்கள் பயன்படுத்தும் தண்ணீருள்ள பாத்திரங்கள், குடங்களை மூடி வைக்க வேண்டும்; கிணறுகளை வலைகளை கொண்டு மூட வேண்டும்; மேல் நிலை தொட்டிகளை, அடிக்கடி சுத்தம் செய்து தண்ணீர் நிரப்பலாம்; பூந்தொட்டிகளில் நீர் தேங்காமல் பராமரிப்பது அவசியம். மேலும், தங்கள் வீட்டுக்கு அருகாமையில், புதிய கட்டுமானப் பகுதிகள், காலி வீட்டு மனைகளில், அப்புறப்படுத்த முடியாத அளவிற்கு, மழைநீர் தேங்கி நின்றால், 'ஆயில் பந்துகள்' தயார் செய்து, அப்பந்துகளை, தேங்கியுள்ள நீரில் மிதக்க விட்டால், அதன் எண்ணெய் படலங்கள், தேங்கிக் கிடக்கும் நீர்பரப்பு முழுவதும் பரவுவதன் மூலம், மலேரியா, மற்றும் டெங்குவை பரப்பும், கொசுப் புழுக்கள் அழிக்கப்படும். மேலும், 'லார்வா' நிலையில் உள்ள கொசுப் புழுக்களும், மூச்சுத் திணறி இறந்து விடும். எனவே, செலவே இல்லாமல், எளிய முறையில், இந்த, 'ஆயில் பந்து'களை பொதுமக்கள், தாங்களே தயார் செய்து, பயன்பாடற்ற நீர்நிலைகளில் மிதக்க விட்டால், மலேரியா, மற்றும் டெங்கு நோய் நம்மை அண்டாது.
இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு பயன்படுத்தப்பட்ட,'கழிவு ஆயில்' எல்லா மெக்கானிக் கடைகளிலும் வைத்திருப்பர். ஆயில் பந்துகள் தயார் செய்யும் எண்ணிக்கையை பொறுத்து, இரண்டு லிட்டரோ, ஐந்து லிட்டரோ, கழிவு ஆயில் வாங்க வேண்டும். மெக்கானிக் கடைக்காரர் தெரிந்தவர் என்றால், இலவசமாகவே வாங்கலாம்.அதற்கடுத்து,'கர்சிப்' அளவிற்கு, வெள்ளை நிற காட்டன் துணியை, எடுத்து, அதில், மரத்துாளை (எல்லா மரக்கடைகளிலும் கிடைக்கும்) நிரப்பி,'கிரிக்கெட் பந்து' அளவிற்கு உருண்டையாக கட்டி கொள்ளவும், அவ்வுருண்டைகளை, கழிவு ஆயிலில் ஊற வைக்க வேண்டும்.ஒருநாள் முழுவதும், அந்த மரத்தூள் உருண்டைகளை, நன்றாக ஊற வைத்தால், அது மறுநாள், 'ஆயில் பந்துகளாக' உருமாறி விடும். தயார் செய்த ஆயில் பந்துகளை, கைகளில் உறை மாட்டி கொண்டோ அல்லது கிடுக்கியை பயன்படுத்தியோ எடுத்து, பயன்பாடற்ற தேங்கிய நீர்நிலைகளில், மிதக்க விட வேண்டும். ஆயில் பந்து பயன்பாட்டை, பொதுமக்கள் கையாண்டால், நல்ல பலன் கிடைக்கும். டெங்கு, மற்றும் மலேரியா காய்ச்சல்களால் அவதிப்பட தேவையில்லை. மேலும் விபரம் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்: 94424 51608
No comments:
Post a Comment