Showing posts with label nagapatnam. Show all posts
Showing posts with label nagapatnam. Show all posts

Friday, April 3, 2015

தேர்தல் வெற்றி, இழந்த பதவி மற்றும் சொத்து மீட்பு

தேர்தல் வெற்றி, இழந்த பதவி மற்றும் சொத்து மீட்பு ஆகியவற்றுக்காக நாகப்பட்டினம் மாவட்டம் ஆதலையூர் பீமேஸ்வரரை வழிபடலாம்.
தல வரலாறு: குரு÷க்ஷத்திரப் போர் தொடங்குவதற்கு முன் இழந்த தேசத்தையும், பதவியையும் மீண்டும் பெற வேண்டி பஞ்ச பாண்டவர்கள் சேர்ந்தும், தனித்தனியாகவும் பல தலங்களுக்குச் சென்று வழிபட்டனர். அவர்களில் ஒருவனான பீமன். இத்தலத்திற்கு வந்து, தாமரைக்குளத்தில் நீராடி சிவனை வணங்கி வெற்றி பெற வலிமை தர வேண்டினான். சிவபெருமான் பீமனுக்கு காட்சி தந்து அருள்பாலித்தார். பிறகு தான் குரு÷க்ஷத்திரப் போரில் வெற்றி பெற்று, இழந்த தேசத்தையும், பதவியையும் மீட்டார்கள். பீமன் வழிபட்டதால் இவ்வூர் ஈசன், "பீமேஸ்வரர்' எனப்பட்டார்.
ஊர் பெயர்க்காரணம்: சிவனும் பார்வதியும் கயிலாயத்தில் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது சிவன், தன்னை உருமாற்றி விளையாடும் திருவிளையாடலை துவக்கினார். முதலில் வில்வமரமாகவும், அடுத்து கங்கையாகவும் மாறிய பெருமானை பார்வதி கண்டுபிடித்தாள். விளையாடியபடியே அவர்கள் பூலோகம் வந்தனர். அங்கே பசுவாக மாறி நின்ற சிவனை காணாமல் பார்வதி தேடியலைந்தாள். அந்த முரட்டுப்பசு யாருக்கும் அடங்காமல் ஓரிடத்தைச் சுற்றிவந்தது. அந்தணர்களுக்கு சொந்தமான வயல்களை துவம்சம் செய்தது, ஒருவழியாக அதைப் பிடித்தனர்.
"இப்படி ஒரு பசுவை ஊரில் எவரும் பார்த்ததே இல்லையே, யாருடையதாக இருக்கும்' என்று அந்தணர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. மாட்டுக்குச் சொந்தக்காரன் வந்து மாட்டை ஓட்டிக் கொண்டு போகட்டும் என்று ஊர் மத்தியிலேயே கட்டி வைத்தனர். சிவனைத்தேடி அலைந்த பார்வதிதேவி, கட்டிப் போடப்பட்டிருந்த பசுவைக் கண்டு மனம் இரங்கினாள். மாட்டை அவிழ்த்துவிட்டாள்.
உடனே மின்னலென மறைந்தது அந்தப்பசு. பசுவாக வந்தது சிவனே என்று அறிந்து ஆனந்தம் அடைந்தாள். "ஆனந்தநாயகி' என்ற பெயர் பெற்றாள். தாங்கள் வந்த இடத்திலேயே தங்க சிவபார்வதி முடிவெடுத்தனர். "ஆ' என்றால் பசு, தளை' என்றால் கட்டுதல். மாட்டைக் கட்டிப் போட்டதால் இந்த ஊருக்கு ஆதளையூர் எனப்பெயர் வந்தது. அதுவே மருவி "ஆதலையூர்' ஆனது.
சிறப்பம்சம்: எட்டுக்குடி முருகனுக்கு காவடிகள் இங்கிருந்து புறப்பட்டு செல்கின்றன. நாச்சியார்கோவிலைப் போல, இங்கு பெருமாள் சந்நிதியில் கல்கருட பகவான் உள்ளார். இழந்த பதவியையும், சொத்துக்களையும் இழந்தவர்கள் பீமேஸ்வர சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் மீண்டும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் அடுத்த தேர்தலில் வெற்றி பெற, இங்கு வந்து வழிபடுகின்றனர். அர்த்தமண்டபத்தில் அழகு பிள்ளையார் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, வள்ளி தெய்வானையுடன் முருகன், பூமிதேவி நீளாதேவி சமேத வரதராஜப்பெருமாள், பைரவரை தரிசிக்கலாம். இங்கு திருப்பணி நடந்து வருகிறது.
திறக்கும் நேரம்: காலை 6- 10, மாலை 4.30- 8 மணி
இருப்பிடம்: கும்பகோணம்- நாகப்பட்டினம் ரோட்டில் 32 கி.மீ., தூரத்தில் ஆதலையூர். பஸ் ஸ்டாப்பில் இருந்து ஒரு கி.மீ., தூரத்தில் கோயில். ஆட்டோ உள்ளது.
போன்: 98654 02603, 95852 55403.

திருவெண்காடு

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் நவகிரகதலத்தில் இது புதன் தலமாகும். காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது. தினந்தோறும் ஸ்படிக லிங்கத்துக்கு நான்கு அபிசேகங்களும் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிசேகங்களும் நடைபெறுகிறது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது பிரணவ சக்தி பீடம் ஆகும். 

இங்கு கல்வி, தொழிலுக்கு அதிபதியான புதனுக்கு தனி ஆலயம் உள்ளது. கல்வி மேன்மையடைய, தொழில் சிறக்க, பிணி நீங்க, பிள்ளைப்பேறு பெற புதனை வழிபட்டால் மேன்மையடைவது உறுதி. இத்தலத்தில் உள்ள வடவால் ஆல விருட்சத்தின் அடியில் ருத்ர பாதம் உள்ளது.21 தலைமுறையில் வருகின்ற பிதுர் சாபங்கள் நீங்கும். இதன் பெயர் ருத்ர கயா. காசியில் இருப்பது விஷ்ணு கயா.

பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கும். குழந்தைப் பேறு , திருமண வரம் ஆகியவை இத்தலத்தில் கைகூடுகிறது. மேலும் நரம்பு சம்பந்தமான வியாதிகள் குணமாகும்,கல்வி மேன்மை, நா வன்மை ஆகியவை கிடைக்கும்.பேய் ,பிசாசு தொல்லைகள் நீங்கும்.

இத்தலத்தில் வழிபடுவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

அகோர பூஜை: புதன் தலமான திருவெண்காடு சுவேதாரணேஸ்வரர் கோயிலில் அகோர சிவபெருமானுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் இரவு 12 மணியளவில் சிறப்பு பூஜை நடைபெறும். எல்லாவிதமான துன்பங்களையும் அழிக்கும் சக்திகொண்டது இந்த அகோர பூஜை.

 இத்தலத்தில் மூர்த்திகள்(திருவெண்காடர், அகோரமூர்த்தி, நடராஜர்), சக்தி(துர்க்கை, காளி, பிரம்மவித்யாம்பாள்),தீர்த்தம் (அக்னி தீர்த்தம்,சூர்ய தீர்த்தம்,சந்திர தீர்த்தம்) தலவிருட்சம்(வடவால், வில்வம், கொன்றை ) என்று மும்மூன்றாக அமையப்பெற்ற சிறப்பு உள்ளது.
 புதனுக்கு தனி சன்னதி: நவக்கிரகங்களில் புதன் பகவான், கல்வி, அறிவு, பேச்சுத்திறமை, இசை, ஜோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவம், மொழிகளில் புலமை ஆகியவற்றை தர வல்லவர். இவருக்கு இத்தலத்தில் தனி சன்னதி உள்ளது. புதனின் தந்தையான சந்திரனின் சன்னதியும், சந்திர புஷ்கரணி தீர்த்தமும், புதன் சன்னதிக்கு எதிரில் அமைந்துள்ளது. ஜாதகத்தில் புதன் சரியாக அமையாவிட்டால் புத்திரபாக்கியம் கிடைக்காது. அத்துடன் அறிவுக்குறைபாடும், நரம்புத்தளர்ச்சியும் ஏற்படும். இப்படி குறைபாடுகள் உள்ளவர்கள் இங்கு வந்து சந்திர புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி புதன் பகவானை வழிபட்டால் தோஷ நிவர்த்தி பெறலாம். இசைக்கு அதிபதியான புதனை இசைக்கலைஞர்களும், திரைப்படக்கலைஞர்களும் வழிபட்டு பயன் பெறுகின்றனர். நவகிரகங்களில் இது புதன் சிவபெருமானை பூஜித்து பேறு பெற்ற தலம். மிகப்புகழ்பெற்ற பிரார்த்தனை தலம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தலம் காசிக்கு இணையான ஆறு தலங்களில் முதன்மையானது.காசியில் உள்ள 64 ஸ்நானக் கட்டடங்களுக்கு இணையான மணிகர்ணிகை ஆறு இங்குள்ளது.
 அருள்மிகு சுவேதாரண்ய சுவாமி திருக்கோயில், திருவெண்காடு - 609 114, நாகப்பட்டினம் மாவட்டம். http://temple.dinamalar.com/New.php?id=530