Showing posts with label Samayapuram theni Tanjore Natham sathur mealmalayanur Kovai Putlur Chidambaram Mylai Virudachalam Siruvachur Mayilam Arani. Show all posts
Showing posts with label Samayapuram theni Tanjore Natham sathur mealmalayanur Kovai Putlur Chidambaram Mylai Virudachalam Siruvachur Mayilam Arani. Show all posts

Tuesday, October 28, 2014

அம்மன் தரிசனம்

சமயபுரம் மாரியம்மன்

வைணவி எனும் திருப்பெயரோடு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வீற்றிருந்தாள் அம்பிகை. உக்கிரமாக இருந்ததால் அங்கிருந்து கண்ணனூரிலுள்ள மேட்டின் மீது கோயில் கட்டி வைத்தார்கள். இந்த கண்ணனூர் அம்மன்தான் சமயபுரத்து மாரியம்மனாக இன்று பேரருளை பொழிகிறாள். விஜயநகர மன்னர் ஒருவர், ‘‘தென்னாட்டுப் போரில் வெற்றி பெற்றால் உனக்கு இங்கு கோயில் எழுப்புவோம்’’ என்று வேண்டிக்கொண்டு, அந்த மாரியின் அருளால் போரில் வெற்றியும் பெற்றார். உடனே, அம்மனை கோயிலுக்குள் கொலுவிருத்தி அழகு பார்த்தார். பரிவார தெய்வங்களாக விநாயகரும் கருப்பண்ணசாமியும் அமைந்தனர். சமயபுரம், தமிழகத்தின் முக்கிய சக்தித் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. கோயிலில் எப்போதும் பக்தர் மயம்தான். மாவிளக்கு ஏற்றுதல், மொட்டை போடுதல், உடல் உறுப்புகள் உரு காணிக்கை செலுத்துதல் என்று பலவித பிரார்த்தனைகளையும் இங்கு நிறைவேற்றுகிறார்கள். சமயபுரத்து மாரியம்மன் பேரருளும், பேரழகும் பொலிய வீற்றிருக்கும் மகாசக்தியாவாள். கைகூப்பி மனதில் நினைத்த கணத்திலேயே வரங்களை ஈனும் வரப்பிரசாதி. திருச்சியிலிருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 15 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

வீரபாண்டி கௌமாரியம்மன்

தேனி மாவட்டத்தில் முல்லையாறு பாய்ந்தோடும் பகுதியான வீரபாண்டியில் வீற்றிருக்கிறாள், கௌமாரியம்மன். இந்த அன்னை, இந்த மாவட்ட மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்குகிறாள். மதுரையை ஆண்ட மன்னன் வீரபாண்டியனுக்கு இரு கண்களும் பாதிப்படைந்தன. அரசன் பார்வை பெறவேண்டி ஈசனை நோக்கி தவமிருந்தான். ஈசனும் ‘‘புள்ளைநல்லூரில் கண்ணுடைய தேவி தவமிருக்கிறாள். அவளுக்காக கோயில் எழுப்பு’’ என்று அருளாணையிட்டார். மன்னனும் அதை ஏற்று கோயில் கட்டினான்; கண் பார்வை பெற்றான். வீரபாண்டி கௌமாரி என்று அன்று முதல் அம்மன் வழிபடப்பட்டு வருகிறாள். இன்றும் பார்வைக் கோளாறு உள்ளவர்கள் இத்தலத்தை நோக்கி வந்து நலம் பெறுகிறார்கள். தேனி-கம்பம் வழியில் தேனியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

தஞ்சாவூர் வடபத்ரகாளி

தஞ்சை, பூமால் ராவுத்தர் கோயில் தெருவில், வடபத்ரகாளியம்மன் எனும் பெயரில் உள்ள நிசும்ப சூதனி ஆலயம் அமைந்துள்ளது. சும்பன், நிசும்பன் எனும் அசுரர்களின் அட்டகாசத்தை பொறுக்க முடியாத தேவர்கள் தேவியை நோக்கி துதித்தனர். தேவி காளியாக கௌசீகி எனும் பெயரோடு வெளிப்பட்டு அசுரர்களை வதைத்தாள். அதனாலேயே நிசும்ப சூதனி எனும் பெயர் வழங்கப்படுகிறது. விஜயாலயச் சோழன் முதல் ராஜராஜன், ராஜேந்திரன் என்று மாபெரும் சோழ அரசர்கள் இந்த காளியை வணங்கிச் சென்றனர். தீய சக்தியால் பாதிக்கப் பட்டவர்கள் இத்தல மண்ணை மிதித்தாலே போதும் தெளிவு பெறுவது நிச்சயம். 

நத்தம் மாரியம்மன்

மதுரை சிற்றரசர்களில் ஒருவரான சொக்கலிங்க நாயக்கரின் அரச பீடத்தை அலங்கரித்த தெய்வமே நத்தம் மாரியம்மன். அரண்மனைக்கு பால் அளக்கும் ஒருவன், பக்கத்து சிற்றூரிலிருந்து குடத்தில் பால் கொணர்வான். பாலைக் கறந்து குறிப்பிட்ட  இடத்தில் இறக்கி விட்டுத் திரும்பிப் பார்க்க பால் குடம் தானாக காலியாகி இருந்தது. அரசனுக்கு இந்த விஷயம் சென்றது. அடுத்தடுத்து சோதித்துப் பார்த்தபோதும் அப்படியே நடந்தது. மன்னன் அந்த இடத்தை தோண்டச் சொன்னார். ரத்தம் பீறிட்டது. அம்மனின் சிலை தெரிந்தது. அங்கேயே அரசன் அம்மனுக்கு கோயிலைக் கட்டினான். இத்தலம் திண்டுக்கல்லுக்கு அருகேயே உள்ளது. நோய் தீர்க்கும் தேவியாக நத்தம் அம்மன் விளங்குகிறாள்.

இருக்கன்குடி மாரியம்மன்

சதுரகிரியில் வாழ்ந்த சிவயோகி ஞானசித்தர் என்பவர் பராசக்தியை நோக்கி தவமிருந்தார். தான் யோக நிஷ்டையாகும் இடத்தில் மாரியம்மனாக அருள்பாலிக்க வேண்டுமென வரம் கோரினார். அன்னையும் அவ்வாறே அருளினாள். வெள்ளப் பெருக்கால் அழிந்து விட்ட கிராமத்திலுள்ள மாரியம்மன் சிலையொன்று சித்தர் ஐக்கியமான பூமிக்குள் வந்து புதைந்தது. பூசாரிப் பெண் ஒருத்தி, தரையில் வைத்த சாணக் கூடையை எடுக்க முயன்றபோது தூக்க முடியவில்லை. அப்போது அங்கு பூசாரிப் பெண்ணுக்கு அருள்வந்து, தான் மாரியம்மனாக இங்கிருப்பதாக வாக்களித்தாள். பக்தர்கள் இன்றுவரை அவளின் அருட்சாரலில் நனைந்து சுகமாக வாழ்கின்றனர். விருதுநகர் மாவட்டம், சாத்தூரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது இக்கோயில்.

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி

பிரம்மனின் கர்வத்தை அடக்குவதற்காக அவனுடைய ஐந்தாவது தலையைக் கொய்து எறிந்தார் ஈசன். பிரம்மனின் தலையைக் கொய்த பாவமும் சரஸ்வதியின் சாபமும் ஈசனைத் துரத்தின. திருவோடு ஏந்தி பசியோடு ஈசன் அலைந்தார். இத்தலத்தில்தான் புற்றுருவாக பார்வதி எழுந்தருளி பிரம்ம கபாலத்தை ஈசனிடமிருந்து பறித்து சாப நிவர்த்தி பெற்றுத் தந்தாள். எளிமையான மக்களிடையே, அவர்களுக்குள் ஒருவளாக அங்காளம்மன் புற்றுக்கு பின்னால் எழுந்தருளியிருக்கிறாள். ஒவ்வொரு அமாவாசையன்றும் பல லட்சம் பக்தர்கள் இங்கு கூடுகிறார்கள். திண்டிவனம்-செஞ்சி சாலையின் நடுவே பிரியும் பாதையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. சகல தோஷங்களையும் சிதறடிக்கும் சீரியவள் இவள்.

கோவை -சௌடாம்பிகை

ஈசனின் ஆணைப்படி தேவலன் எனும் முனிவர் திருமாலை நோக்கி தவமிருந்தார். ஆனால், அசுரர்களோ அவரைத் தொந்தரவு செய்த வண்ணமே இருந்தார்கள். அவர்களின் தொல்லையை திருமாலின் சக்ராயுதம் தடுத்தது. அதையும் தாண்டி ஒரு அம்பு தேவலனை துளைத்தது. அப்போதுதான் அம்பாள் சௌடாம்பிகை எனும் திருநாமத்தோடு எழுந்தருளி முனிவரைக் காத்தாள். மனவேதனை போக்குவதில் இவள் மகாதேவி. கோவை நகரின் மையத்தில், ராஜவீதியில் கம்பீரமாக வீற்றிருக்கிறாள், சௌடாம்பிகை.

புட்லூர் பிள்ளைத்தாய்ச்சி அம்மன்

பார்க்கும்போதே உடலும் உள்ளமும் சிலிர்க்கும். கர்ப்பிணிப் பெண் வடிவில் உலகையே சுமந்து கருணையோடு கால்நீட்டிப் படுத்திருக்கும் இந்த அம்மனை வேறெந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. கருவைச் சுமக்கும் பெண்ணின் தாய்மையை, இங்கு உலகைச் சுமந்து வெளிப்படுத்துகிறாள். குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டுவோர்கள் விரைவில் மழலையோடு நன்றிக் கண்ணீர் பெருக நிற்கிறார்கள். சென்னை, ஆவடி-திருவள்ளூர் வழியில் காக்களூர் நிறுத்தத்திற்கு முன்பாக உள்ளது, ராமாபுரம் என்ற புட்லூர். அம்மையை தரிசியுங்கள்; ஆனந்தம் பெற்றிடுங்கள்.

சிதம்பரம் - தில்லை காளி  

சிதம்பரத்தில் ஈசனோடு போட்டியிட்டு நடனம் புரிந்து தோற்றவள், தில்லையின் எல்லையில் கருணையோடு வீற்றிருக்கிறாள். அலகிலா விளையாட்டுடையவனின் பெருமையை உணர்ந்து தானும் அந்த ஆதிசக்தியில் பாதி என்பதை உணர்ந்து, நான்கு முகமான பிரம்ம சாமுண்டியாக கருவறையிலும் உக்கிரகமான காளியாக வெளியே தனி சந்நதியிலும் அமர்ந்திருக்கிறாள். உக்கிரம் குறையக் கூடாது என்பதற்காகவே அபிஷேகம் எதுவும் இவளுக்கு செய்யப்படுவதில்லை. தீவினைகளோ, தீய சக்திகளின் பாதிப்புகளோ இருந்தால் தில்லை காளியின் தரிசனத்தில் எல்லாம் தகர்ந்து போகும். இந்த ஆலயம் சிதம்பரத்தில் உள்ளது.

மயிலாப்பூர் - முண்டகக் கண்ணி

மயிலையின் பேசும் தெய்வம். எப்போது வந்தமர்ந்தாள் என்ற வரலாறு தெளிவாக இல்லை. ஆனால், எப்போதுமே பக்தர்களை காக்க இங்குதான் நான் இருக்கப்போகிறேன் என்பதுபோல வீற்றிருக்கிறாள். மூலவருக்கான கருவறை விமானம் இல்லை. ‘கட்ட அன்னை உத்தரவு தரவில்லை’ என்கிறார்கள். அதனாலேயே கீற்றுக் கொட்டைக்குள் கருணை மணம் கமழ வாசம் செய்கிறாள். முண்டகம் என்றால் தாமரை என்று பொருள். தாமரை போன்ற கண்களை உடையவள் என்று பொருள். ஞான சூரியனை கண்ட தாமரை மலர்வதுபோல உங்களுக்குள்ளிருக்கும் ஞான தாமரையை இவள் மலர வைப்பாள். உயிரை காப்பாற்றுதலும், உயர்ந்த பதவியில்  அமர்த்துதலையும் இவள் இங்கு எளிதாக செய்கிறாள். சென்னை- மயிலாப்பூர் நகரத்தின் மையத்திலேயே இவள் கோயில் கொண்டிருக்கிறாள்.

மங்கலம்பேட்டை - மங்களநாயகி

செவ்வகக் கல் மூர்த்தத்தில் சற்று உக்கிரமாக அருளும் வனதுர்க்கை இவள். கண்ணகிக்கு கோயில் கட்ட சேரன் செங்குட்டுவன் இமய மலையிலிருந்து இரு கற்களை கொண்டு வந்தபோது தனக்கு மிகப் பெரிய உதவிகளை செய்த பரூர் பாளையத்தை சேர்ந்த குறுநில மன்னனுக்கு தான் கொண்டு வந்த இரு புனிதக் கற்களில் ஒன்றை அவனுக்கு ஈந்தான். அதில்தான் உக்கிர நாயகியான இந்த மங்களநாயகியை எழுந்தருளச் செய்தான், பரூர் மன்னன். நம் பகைகளை விலக்கி, நம் மனதிலும் தீய எண்ணங்கள் புகாதபடி காப்பாள் இந்த வனதுர்க்கை. கடலூர் மாவட்டம், உளுந்தூர் பேட்டையிலிருந்து விருத்தாசலம் செல்லும் சாலையில் 7 கி.மீ. தொலைவில், மங்கலம்பேட்டையில், இக்கோயில்  அமைந்துள்ளது.

சிறுவாச்சூர் - மதுரகாளியம்மன்

காளியின் அருளால் மதுரையை எரித்தாள் கண்ணகி. அங்கிருந்து சிறுவாச்சூர் செல்லியம்மன் ஆலயத்திற்கு வந்தாள். செல்லியம்மனோ, ‘‘நீ இங்கு இருக்க வேண்டாம். என்னிடமிருந்து வரம் பெற்ற அரக்கன் ஒருவன் என்னையே அடிமைப்படுத்தி வைத்துள்ளான். கொடுத்த வரத்தை கொடுஞ்செயலுக்கு உபயோகப்படுத்துகிறான். எனவே, நீ இங்கிருந்து சென்று விடு, தாயே!’’ என்றாள். கண்ணகி கண்களை மூடி காளியை துதித்து அரக்கனை அழிக்குமாறு வேண்டினாள். அதன்படியே அந்த அசுரனை வதம் செய்து செல்லியம்மனுக்கு ஆறுதல் அளித்தாள். காளிக்கு நன்றி கூறி கண்ணகி விடைபெற, செல்லியம்மன் மலைமீது குடி கொண்டாள். காளியும் மதுரகாளியம்மன் என்று திருப்பெயரோடு கீழே குடிகொண்டாள். திங்கள் மற்றும் வெள்ளி மட்டும்தான் ஆலயம் திறந்திருக்கும். மாவிளக்கு ஏற்றினால் எண்ணமெல்லாம் ஈடேறும். ஆலய வளாகத்திலேயே உரல்களும் உலக்கைகளும் வைக்கப்பட்டிருக்கின்றன. அரிசி கொண்டு வந்து ஊற வைத்து அங்கேயே இடித்து மாவாக்கி விளக்கேற்றுகின்றனர். குழந்தைப் பேறு தடை, கணவன்-மனைவி பிரச்னை எல்லாம் வெருண்டோடும் இந்த அம்மன் அருளால். திருச்சி-பெரம்பலூர் நெடுஞ்சாலையில் உள்ளது, சிறுவாச்சூர்.

அறச்சலூர் அறச்சாலை அம்மன்

அறம் வளர்த்த ஊர் என்பதால் அறச்சலூர் அம்மன் என்று பெயர் வந்தது. கம்பீரமான குதிரைகளுக்கு மத்தியில் எண்கரங்களோடு சூரனை வதம் செய்த கையோடு வீற்றிருக்கிறாள் அன்னை. ஜாதகப் பொருத்தமே இல்லை என்றாலும் கூட இந்த அம்மனின் உத்தரவு இருந்தால் போதும், திருமணம் கைகூடும்; திருமண வாழ்க்கையும் வளம் பெறும் என்கிறார்கள். பூ போட்டு வாக்கு கேட்கிறார்கள். வெள்ளை நிற பூக்கள் மூன்றும் சிகப்பு நிற பூக்கள் மூன்றும் பயன்படுத்துவர். சிகப்பு பூ வந்தால் சுப விசேஷங்கள் நிறைவேறும் என்றும், வெள்ளை நிற பூக்கள் வந்தால் வீடு, மனை, நிலம் வாங்கலாம் என்றும் அம்மன் உத்தரவிடுகிறாள் என்பது ஐதீகம். மாங்கல்ய தோஷம் நீங்க அம்மனுக்கு மாங்கல்யத்தை வைத்து வழிபட்டு அம்மனுக்கே அதை காணிக்கையாக தருகிறார்கள். ஈரோடு-காங்கேயம் சாலையில் 24வது கிலோ மீட்டரில் இக்கோயில் உள்ளது.

திருவக்கரை - வக்ரகாளி

ஆதித்ய சோழரும் பராந்தகரும் கண்டராதித்தரும் செம்பியன் மாதேவியாரும் பார்த்துப் பார்த்து உருவாக்கிய கோயில் இது. சந்திரமௌலீஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாகவே வக்ரகாளி அதி உக்கிரமாக தனிச் சந்நதியில் வீற்றிருக்கிறாள். வக்ராசுரன் என்பவன் ஈசனை நோக்கி தவம் புரிந்தான். ஈசனின் தரிசனமும் வரங்களும் பெற்றான். தேவலோகத்தை புரட்டிப் போட்டான். கேட்பாரே இல்லாமல் திரிந்தவனை காளி எதிர்கொண்டாள். வக்ராசுரனையும் அவள் தங்கையான துன்முகியையும் விஷ்ணுவும் காளியும் முறையே வதம் செய்தனர். வதம் செய்த உக்கிரத்தோடேயே இத்தலத்தில் அம்பிகை அமர்ந்தாள். இன்றும் அந்த வெம்மை அங்கு பரவியிருப்பதை தரிசிப்போர் நிச்சயம் உணர்வர். ஜாதக ரீதியாகவோ, தீய சக்திகளாலோ பாதிக்கப்பட்டு மனநிலை சரியில்லாதவர்கள் இச்சந்நதியை நெருங்கும்போது தெளிவடைவர் என்பது உறுதி. திண்டிவனம்-விழுப்புரம் பாதையில் மயிலத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் வக்ரகாளி அருள்பாலிக்கிறாள்.

திருவேற்காடு - கருமாரியம்மன்

வெள்வேல மரங்கள் அதிகமாக இருந்ததால் வேற்காடு என்றானது. வேதங்களையே மரங்களாக்கி அதனடியில் லிங்க மூர்த்தத்தில் ஈசன் வெளிப்பட்டார். லிங்கத்தோடு அன்னையும் உதயமானாள். கொடிய அசுரனை அழிக்க முருகனுக்கு கருமாரி அன்னை தம் திருக்கரத்தால் வேல் அளித்தாள். அதனாலேயே வேற்கன்னி ஆனாள். வேலன் வேலால் கீறி தீர்த்தம் உண்டாக்கினான். அதுவே வேலாயுத தீர்த்தமாயிற்று. அந்த பராசக்தியே இங்கு மாரியம்மனாக அமர்ந்து எல்லோரையும் காக்கிறாள். கலியுகத்தின் கண்கண்ட தெய்வமே இந்த கருமாரி. வேண்டுதல் இல்லாமலேயே வேண்டியதை தருவதில் பெற்றவளுக்கும் மேலாக விளங்கும் தாய் இவள். இத்தலம், சென்னை-பூவிருந்தவல்லி பாதையில் மதுரவாயலுக்கு அருகே உள்ளது.

மாங்காடு - காமாட்சி

மாங்காட்டின் மையத்தில் அமர்ந்த மகாதேவி. ஆதிசங்கரரால் போற்றித் துதிக்கப்பட்ட ஆதிசக்தி. ஒரு காலத்தில் அக்னிக்கு மத்தியில் உக்கிர தவமிருந்தாள். தவத்தின் வெம்மை, யாரையும் அவளருகே அண்டவிடாமல் விரட்டியது. ஆதிசங்கரர் அம்மையின் உக்கிரமான இருப்பை உணர்ந்து சாந்தமாக்கி எல்லோரையும் அருகே வரச் செய்தார். அர்த்தமேரு மகாயந்திரம் எனும் யந்திரத்தை பரப்பி சக்தியின் மழையில் எல்லோரையும் நனையச் செய்தார். அம்மை தாய்மைப் பரிவோடு உயிர்களை நோக்கினாள். இன்னருளை பொழிந்தாள். திருமணமா, குழந்தைப்பேறா, உத்யோக உயர்வா, ஞானத் தேடலா... எல்லாவற்றையும் கைமேல் கனியாக எளிதாக அருள்கிறாள், இந்த மாங்காட்டு நாயகி. சென்னையில் குன்றத்தூர், பூவிருந்தவல்லி ஆகிய இரு ஊர்களுக்கும் அருகே அமைந்துள்ளது இந்தத் தாயின் கோயில்.

புன்னைநல்லூர் - மாரியம்மன்

திக்குகளையே ஆடையாக அணிந்து ஞானத்தின் உச்சியில் தோய்ந்திருந்த சதாசிவபிரம்மேந்திரரின் திருக்கரங்களால் உருவாக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட மாரியம்மன் இவள். துளஜா மன்னனின் மகளுக்கு அம்மை நோயினால் கண் பார்வை பாதிக்கப்பட்டது. அரச மருத்துவம் பார்த்தும் பலனில்லை. அரசரின் கனவில் தோன்றி பாலகியாக சிரித்தாள், அம்பிகை. தனிக்கோயில் எழுப்பும்படி அருளாணையிட்டாள். புற்றுருவாக இருந்தவளை சதாசிவ பிரம்மேந்திரர் உருவமாக்கினார். அங்கேயே சக்ர பிரதிஷ்டையும் செய்தார். மாரியம்மன் உடனேயே பேரருள் புரிந்தாள். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தைலக் காப்பில் நனைகிறாள் இவள். அம்மை நோய் கண்டவர்களுக்காக அம்மை நோய் மண்டபம்  இங்கே உள்ளது. இங்கு மாவிளக்கு மாவு பிரார்த்தனை நிறைவேற்றுகிறார்கள். பார்வைக் குறைபாடு உடையவர்கள் இவளை தரிசிக்க விரைவில் நலமடைகிறார்கள். தஞ்சையிலிருது 9 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

ஒருவந்தூர் பிடாரி செல்லாண்டியம்மன்

ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இந்த நிலம் முழுக்க உப்பு மண்ணாக இருந்திருக்கிறது. உப்பு மண்னை வெட்டியபடியே இருக்க, ‘ணங்...ணங்’ என்று சத்தம் கேட்டது. ஓசை வந்த இடத்தில் தோண்டிப் பார்த்தால், குருதி பொங்க அன்னையின் சிலை காணப்பட்டது. ஈசனும் அம்மையும் சேர்ந்து அருள்புரியும் மூர்த்தமாக இருந்ததால் ஒருவந்தூர் என்றானது. பக்தர்கள் பிடாரி செல்லாண்டியம்மன் என்று திருப்பெயரிட்டு அழைத்தனர். பார்வதி தேவி பூஜை செய்வது போன்ற அமைப்பில் சிற்பம் ஒன்று இங்கு உள்ளது. தினந்தோறும் கோயிலைச் சேர்ந்த வேலும் பூஜைப் பொருட்களும் மேளதாளத்தோடு எட்டுப்பட்டி கிராமங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் கோயிலை அடைகின்றன. திருமண வரம் வேண்டி பெண்கள் இத்தலத்திற்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள். விரைவிலேயே தம்பதியராக வந்து கைக்கூப்பி வணங்கவும் செய்கிறார்கள். நாமக்கல் மாவட்டம், மோகனூர்-காட்டுப்புத்தூர் சாலையில் இத்தலம் அமைந்துள்ளது.

படவேடு ரேணுகாம்பாள்

ஜமதக்னி முனிவரின் ஆணைப்படி அன்னையின் தலையை வெட்டிக் கொணர்ந்தார் பரசுராமர். சொன்னதை செய்த உனக்கு என்ன வேண்டுமென்று தந்தை ஜமதக்னி கேட்க, ‘என்னைப் பெற்றவளையே திருப்பிக் கேட்கிறேன்’ என்று தீர்க்கமாக சொன்னார், பரசுராமர். ‘தலையையும் உடலையும் கொண்டு வா, உயிர்ப்பித்துத் தருகிறேன்’ என்றார், ஜமதக்னி முனிவர். அப்படி அவர் கொண்டுவந்த உடலை நீர் தெளித்து சேர்த்து ஒளியில் பார்க்க, தலைக்குரிய உடல் மாறியிருந்தது. ஆனாலும் அவளே ரேணுகாம்பாள் என்று மகாசக்தியாக மலர்ந்தாள். அவளே படவேடு எனும் தலத்தில் அமர்ந்தாள். துயர் எனும் சொல் இனி உங்கள் வாழ்வில் இல்லை என்று திடமாக பக்தர்களுக்கு அறிவுறுத்துகிறாள். படவேட்டிலுள்ள இத்தலத்தைச் சுற்றிலும் நிறைய ஆலயங்கள் உள்ளன. காளி கோயில்களும் நிறைந்திருக்கின்றன. சக்தியின் வீச்சு மிகுந்த இந்தப் பகுதியின் தலையாய தலமாகவும் இது விளக்குகிறது. சம்புவராயர்கள் படவேடை கோயில் நகரமாகவே உருவாக்கினார்கள். ஆரணிக்கும் வேலூருக்கும் இடையில் மலைகளுக்கு நடுவே படவேடு ரேணுகாம்பாள் கோயில் அமைந்துள்ளது.

சேலம் கோட்டை மாரியம்மன்  

சூரிய, சந்திர கிரகண நேரங்களில் கோயில்கள் பூட்டப்படுவது வழக்கம். ஆனால், கோட்டை மாரியம்மன் ஆலயம் பூட்டப்படாது. சூரிய, சந்திர கிரகண கதிர்களால் வரும் பாதிப்பிலிருந்து அன்னை அனைவரையும் காக்கிறாள் என்கிறார்கள். ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம். அக்னி திசை நோக்கி, வலது காலை ஊன்றி, இடது காலை மடக்கி வீராசனத்தில் வீற்றிருக்கிறாள். பெரிய மாரியம்மனின் கண்களும் பலி பீடத்திலுள்ள அம்மனின் கண்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது சிறப்பாகும். பக்தர்கள் வீட்டில் அம்மை வார்த்திருக்கும் நேரத்தில் அம்மையின் வெம்மையை குறைக்க பலி பீடத்தில் வேப்பிலை கலந்த நீரை ஊற்றி அம்மனை குளிர வைப்பார்கள். உப்பு, பருப்பு, மிளகு, வெங்காயம் போன்றவற்றை பிரார்த்தனை பொருட்களாக செலுத்துகின்றனர். கண் வலி, நெஞ்சுவலி போன்ற உபாதைகள் தீர கண் மலர், மண் உரு, கை, கால், முகம் போன்ற பிரதிமைகளை பிரார்த்தனை பொருட்களாக செலுத்துகின்றனர். சேலம் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகிலும், ரயில் நிலையத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலும் இந்த ஆலயம் அமைந்துள்ளது.