பிறந்த குழந்தை முதல் பள்ளி செல்லும் குழந்தைவரைக்கும் தடுப்பூசி போடப்படுவது வழக்கம். இப்போது பெரியவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்களே, இது எந்த அளவுக்கு உண்மை?
இது நூற்றுக்கு நூறு உண்மை.
கால் நூற்றாண்டுக்கு முன்புவரை குழந்தைகளுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுவது நடைமுறையில் இருந்தது. அதற்குப் பிறகு வந்த ஆராய்ச்சியாளர்கள் பெரியவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த முடிவை ஏற்றுக்கொண்ட உலகச் சுகாதார நிறுவனம் எந்தத் தடுப்பூசியை எந்த வயதில் பெரியவர்களுக்குப் போட வேண்டும் என்று பரிந்துரை அளித்துள்ளது.
நிமோனியா தடுப்பு
வயதாக ஆக நோய் எதிர்ப்பு ஆற்றல் உடலில் குறைய ஆரம்பிக்கிறது. அதிலும், முதுமைப் பருவத்தில் இது மிகமிக குறைவாகவே இருக்கிறது. அந்த நேரத்தில் பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் தொற்றினால், உடல்நலம் பாதிக்கப்படுவதுடன், உயிர் இழப்பும் ஏற்படலாம். முதியவர்கள் சில தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதன் மூலம் தீவிர நோய்களை வரவிடாமல் தடுக்கலாம்.
முதுமையில் பெரும்பாலோரைப் பாதிப்பது நிமோனியா. கடுமையான காய்ச்சல், மூச்சுவிடுவதில் சிரமம், நெஞ்சுவலி எனப் பல தொந்தரவுகளை ஏற்படுத்தி, உயிர் இழப்புவரை கொண்டு செல்லும் நோய். இதைத் தவிர்க்க ‘பி.பி.எஸ்.வி.23 நிமோகாக்கல் தடுப்பூசியை (PPSV23 - Pneumococcal vaccine) போட்டுக்கொள்ள வேண்டும். புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள், இதய நோயாளிகள், ஆஸ்துமா, சிறுநீரக நோய் உள்ளவர்கள் இதைப் போட்டுக்கொள்வது நல்லது. ஐந்து வருடங்கள் இடைவெளியில் இரண்டு தவணைகள் போட்டுக்கொள்ள வேண்டும்.
புற்றுநோய் தடுப்பு
10 வயது முடிந்த பெண் குழந்தைகள் ஹெச்.பி.வி. தடுப்பூசியைப் ( HPV vaccine) போட்டுக்கொள்ள வேண்டும். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை இது தடுக்கிறது. பத்து வயதில் போட்டுக்கொள்ளவில்லை என்றால், 45 வயதுக்குள் எப்போது வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். முதலில் ஒரு ஊசியைப் போட்டுக்கொண்டு, இரண்டு மாதங்கள் இடைவெளியில் இரண்டாம் தவணை, இரண்டு மாதம் அல்லது நான்கு மாத இடைவெளியில் மூன்றாம் தவணையைப் போட்டுக்கொள்ள வேண்டும்.
ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில் பன்றிக் காய்ச்சலை ஏற்படுத்தும் ஃபுளு வைரஸ்களுக்குத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். சின்னம்மையைத் தடுக்கவும் தடுப்பூசி (Varicella vaccine) போட வேண்டியது அவசியம். மூன்று மாதங்கள் இடைவெளியில் இரண்டு தவணை போட்டுக்கொள்வது நல்லது. இதைப் போட்டுக் கொள்பவர்களுக்கு ‘அக்கி அம்மை’ (Herpes zoster அல்லது Shingles)
வருவதும் தடுக்கப்படும்.
மஞ்சள் காமாலையைத் தடுக்கிற ‘ஹெப்படைடிஸ் பி தடுப்பூசி’யை மொத்தம் மூன்று தவணைகள் போட்டுக்கொள்ள வேண்டும். அதாவது, முதல் ஊசியைப் போட்டுக்கொண்டு, முறையே ஒரு மாதம், ஆறு மாதங்கள் இடைவெளியில் மற்ற இரண்டு தவணைகளைப் போட்டுக்கொள்ள வேண்டும். அடுத்து, ‘ஹெப்படைடிஸ் ஏ தடுப்பூசி’யை ஆறு மாதங்கள் இடைவெளியில் இரண்டு தவணைகள் போட்டுக்கொள்ள வேண்டும்.
இவை தவிர டைபாய்டு காய்ச்சல், மூளை உறை அழற்சிக் காய்ச்சல், ஜப்பானிய மூளை காய்ச்சல் ஆகியவற்றுக்கும் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment