Wednesday, June 8, 2016

தேர்வில் மாணவிகள் ஏன் அதிக மதிப்பெண்கள் குவிக்கிறார்கள்? - உளவியல் 'காரணங்கள்'

'இந்த முறையும் மாணவிகளே முதலிடம்' என்று ஒவ்வொரு வருடம் பள்ளி தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில் கேட்கப்படுகின்ற, செய்தித் தாள்களில் பார்க்கப்படுகின்ற செய்தி சலித்துப் போனதாக கூட இருக்கலாம்.
''அட அது என்ன எப்போ பார்த்தாலும் மாணவிகள்தான் அதிக மார்க்கும் வாங்குறாங்க... அதிக தேர்ச்சி விகிதமும் எடுக்குறாங்க.  அறிவியல் பூர்வமா ஏதாவது காரணம் இருக்குமா?"  என பல சந்தேகங்களோடு விடைதேடி,  கோவை கே.ஜி.மருத்துவமனை உளவியல் மருத்துவர் பொன்னியை சந்தித்தோம்.

"தேர்வுகளில் மாணவிகளே பெரும்பாலும் முதலிடம் பெறுவதற்கும், அவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருப்பதற்கும் ஓரிரு காரணங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் மூளை அமைப்பு. ஆண்கள், பெண்களுக்கான மூளை அமைப்பு வித்தியாசப்படுவது முக்கிய காரணம். இது தொடர்பாக நிரூபிக்கப்பட்ட ஆய்வு எதுவும் இல்லை என்றாலும், மூளை அமைப்பை பொறுத்தவரை பெண்களின் மூளை நன்றாக யோசிக்கிற திறன் அதிகம் கொண்டது என்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளக்கூடியதுதான்.
பெண்களின் மூளை, வார்த்தைகளை எளிதில் புரிந்து கொண்டு, அதை மிக எளிதில் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும். ஆண்களின் மூளை நியூமெரிக்கலை ( Numerical ) எளிதில் புரிந்து கொள்ளும். நம்ம கல்வி முறையை பொறுத்தவரை படிப்பது, மனப்பாடம் செய்வது, அதை எழுதுவது என்பதுதான். எனவே இதில் மிக எளிதாக பெண்களால் சாதிக்க முடிகிறது. இதுவே பிராக்டிக்கலாக செய்து, புரிந்து படிப்பது என்றால் ஆண்களுக்கு இணையாகத்தான் பெண்களும் இருப்பார்கள்.
 
பொதுவாக ஆண்கள் அளந்து பார்க்கும் மூளை கொண்டவர்கள். கணக்கிடும் வேகம் ஆண்களுக்கு அதிகமாக இருக்கும். அதாவது மெக்கானிக்கல் மைன்ட். பெண்களுக்கு மொழித் திறன் அதிகமாக இருக்கும். அதனால் வேகமாக படிக்க வேண்டும், மனப்பாடம் செய்ய வேண்டும் என்பது பெண்களுக்கு எளிதாக கைவருகிறது. ஆண் குழந்தைகளுக்கு எழுத்துப்பிழை அதிகமாக வந்தாலும் பிராக்டிகலாக நன்றாக பெர்ஃபார்மன்ஸ் செய்வார்கள். ஆனா இந்த மனப்பாடம் செய்வது, எழுதுவது என்பது அவர்களுக்கு சற்று சிரமம்தான்.

அடுத்ததாக‌ மூளை அமைப்பு.  அடிப்படையில் பெண்களுக்கு மல்டி டாஸ்கிங் என்பது கைவந்த கலை. ஒரு வேலையை கொடுத்துவிட்டு, அதை செய்து கொண்டிருக்கும்போதே பல வேலைகளை கொடுக்கலாம். ஆனால் ஆண்களுக்கு சிங்கிள் டாஸ்கிங்தான் கைவரும்.

இது தவிர வளர்ப்புச் சூழலும் ஒரு காரணம். ஆண் குழந்தைகளுக்கு ஃப்ரெண்ட்ஸ், அவுட்டிங் என்று ஆயிரம் வெளி வேலைகள் இருக்கும். பெண்களுக்கு அது குறைவதால் கவனம் அதிகம் சிதறாது.

ஆண் குழந்தைகளை பொறுத்தவரைக்கும், 'அதிகம் படிக்கிறான்...'  என்று சக நண்பர்கள் கிண்டல் செய்வார்கள் என்பதாலேயே அதிகம் படிப்பதை குறைத்துக் கொள்கிறார்கள்" என பிராக்டிகலாக சொல்லி முடித்தார் டாக்டர் பொன்னி.

No comments:

Post a Comment