என்.சி.டி.இ.எக்ஸ்., அமைப்பு துவங்கியுள்ள, ஆன்லைன் மூலம் தங்கத்தை வாங்கி விற்பதற்கான தேசிய அளவிலான, 'கோல்ட் நவ்' மையம், அதன் இரண்டாவது கட்டத்தில் சில்லறை முதலீட்டாளர்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. கோல்ட் நவ் மையம் பற்றி ஒரு பார்வை:
பங்குகளை வாங்கி விற்பதற்கான பங்குச்சந்தை போல, பண்டகங்கள் என்று குறிப்பிடப்படும் பொருட்களை பரிவர்த்தனை செய்வதற்காக, என்.சி.டி.இ.எக்ஸ்., செயல்பட்டு வருகிறது. பிரதானமாக, விவசாய பொருட்களை முன்பேர அடிப்படையில் வாங்கி, விற்க உதவும் இந்த சந்தை, தங்கத்தையும் இதே முறையில் வாங்கி, விற்பதற்காக, கோல்ட் நவ் மையத்தை அமைத்துள்ளது.
ஆன் - லைன் மூலம் தங்கத்தை வாங்கி விற்பதற்கான தேசிய அளவிலான சந்தை இது என்று கோல்ட் நவ் பற்றி, என்.சி.டி.இ.எக்ஸ்., குறிப்பிடுகிறது. தங்கத்திற்கான சந்தை விலையை வெளிப்படையான முறையில் கண்டறியவும், இது உதவும்.
ஓராண்டுக்கும் மேலாக பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த கோல்ட் நவ் மையத்தில், என்.சி.டி.இ.எக்ஸ்., சந்தையால் அங்கீகரிக்கப்பட்ட சுத்திகரிப்பு மையங்களில் இருந்து தங்கத்தை வாங்கி, விற்கலாம். லண்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தையும், பரிவர்த்தனை செய்யலாம்.
ஒரு கிலோ மற்றும் 100 கிராம் அளவுகளில் தங்கத்தை வாங்கி, விற்கலாம். குறிப்பிட்ட காலத்தில் ஒப்பந்தம் செய்த விலையில், பொருட்களை வழங்கும் முன்பேர அடிப்படையில் பரிவர்த்தனை நடைபெறும். இந்த மையம், தங்க வணிகர்கள் மற்றும் தங்க நகை வர்த்தகர்களுக்கானது என்றாலும், இரண்டாவது கட்டத்தில் இதில், 5, 10 மற்றும் 50 கிராம் நாணயங்களையும் வாங்கி விற்க முடியும். அப்போது சில்லறை முதலீட்டாளர்களையும் ஈர்க்கலாம்.
வங்கிகள் கூட தங்க நாணயங்களை விற்பனை செய்கின்றனவே தவிர, அவற்றை மீண்டும் வாங்கி கொள்வதில்லை. இந்நிலையில் முதலீட்டாளர்கள் தங்க நாணயங்களை விற்று பணமாக்கி கொள்ளும் வழியாக, இந்த பரிவர்த்தனை அமையும் என கருதப்படுகிறது. ஆனால் இதற்கு குறைந்தது, ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டும். அரசின், 'மேக் இன் இந்தியா' திட்டம் மற்றும் தங்க டிபாசிட் திட்டத்துடன் இணைந்து செயல்படும் வகையில் இது அமைந்துள்ளது. தங்க இறக்குமதி மீதான சார்பை குறைப்பதும், உள்ளூரில் உள்ள தங்கத்தை மறு சுழற்சிக்கு கொண்டு வந்து பயன்பட வைப்பதும், இதன் நோக்கமாக இருக்கிறது. இதன் மூலம் நாட்டில் உள்ள சுத்திகரிப்பு மையங்களின் திறனையும், பெரும் அளவில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இந்தியாவில், 20 ஆயிரம் டன்னுக்கு மேல் தங்கம் இருப்பு உள்ளதாக கருதப்படுகிறது. இவற்றின் பெரும் பகுதி, வீடுகளில் ஆபரணத் தங்கமாகவும், திருக்கோவில்கள் மற்றும் அறக்கட்டளைகள் வசமும் உள்ளன. இப்படி முடங்கி கிடக்கும் தங்கத்தை, மறுசுழற்சி மூலம் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால், உள்ளூர் சந்தையில் தங்கம் தாராளமாக கிடைப்பதோடு, இறக்குமதியின் தேவையும் குறையும். அதே நேரத்தில், இந்த தங்கங்களின் மதிப்பை, வருமானமாக்கி கொள்வதும் சாத்தியமாகும்.
இருப்பில் உள்ள தங்கத்தில், 5 சதவீதம் இப்படி வெளியே வந்தால் கூட, பொருளாதாரத்திற்கு அது பேருதவியாக இருக்கும்.
எனவே தான், அரசின் தங்க டிபாசிட் திட்டத்திற்கும் இது துணையாக இருக்கும் என்கிறார், என்.சி.டி.இ.எக்ஸ்., தலைவர், சமீர் ஷா.
தங்க டிபாசிட் திட்டத்தில் ஆர்வம் உள்ள பிரிவினர் என கருதபடக் கூடிய வர்த்தகர்கள் உள்ளிட்டோர், ஏற்கனவே, கோல்ட் நவ் மையத்தில் உறுப்பினர்களாக இருப்பதாகவும், என்.சி.டி.இ.எக்ஸ்., தெரிவித்துள்ளது.
கோல்ட் நவ் மையத்திற்கான இரண்டாவது டெலிவரி மையம், அண்மையில், சென்னையில் துவங்கப்பட்டது. தங்க வணிகத்தில், தென்னிந்தியா, 40 சதவீத பங்கும், அதில் தமிழகம், 70 சதவீத பங்கும் வகிக்கும் நிலையில், இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆமதாபாத், மும்பை ஆகிய நகரங்களில், இது போன்ற மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த சந்தை நடுத்தர மக்களையும் கவரும் வகையில் இருக்குமா என்பதை, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=25523&ncat=1332
No comments:
Post a Comment