ஹோட்டல்ல சாப்பிடாதீங்க உடம்பு கெட்டுடும்" நம்
அன்புக்குரியவர்கள் அடிக்கடி உதிர்க்கும் அறிவுரை. மதுரையிலோ, மனைவி முதல்
மருத்துவர் வரை “ஹோட்டல்ல சாப்பிடுங்க” என்று பரிந்துரைக்கிறார்கள்.
அவர்கள் குறிப்பிடும் அந்த ஹோட்டல், உழவன் உணவகம்.
விவசாயக் குடும்பங்களே மறந்துவிட்ட பாரம்பரிய உணவு வகைகள்கூட, இங்கே ஆர்டர்
செய்தவுடன் கிடைக்கும். பெயருக்கேற்ப இந்த உணவகத்தை நடத்துபவர்கள்
விவசாயிகள். தொடங்கி 3 ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில், இப்போது
எப்படியிருக்கிறது உழவன் உணவகம்?
பாரம்பரிய மீட்பு
மதுரை நத்தம் சாலையில் ரிசர்வ் லைன் அருகே மகளிர் மேம்பாட்டு திட்டக்
கட்டிடத்தில் தற்காலிகமாகச் செயல்பட்டுவந்த உணவகம், இன்றைக்குச் சொந்தக்
கட்டிடத்தில் கம்பீரமாக நிற்கிறது. கிட்டத்தட்ட 60 பாரம்பரிய உணவு வகைகள்
கிடைக்கின்றன.
ஒரு நாளைக்கு இரண்டு என்று வைத்துக்கொண்டாலும், அனைத்தையும் சுவைத்துப்
பார்க்க ஒரு மாதம் ஆகும். சாகுபடி செய்வதைக் கைவிடும் நிலையில் இருந்த
விவசாயிகளுக்காக, மதுரை ஆட்சியராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கொண்டு
வந்த திட்டம் இது. பொதுமக்களுக்கு ஆரோக்கியம், விவசாயிகளுக்குக்
கட்டுப்படியான விலைதான் இதன் தாரக மந்திரம். இங்குள்ள உணவு வகைகளின்
அதிகபட்ச விலையே ரூ. 25 தான். கடைக்கு வாடகை கிடையாது.
செக்கு எண்ணெய் சமையல்
"முடக்கத்தான் தோசை, முள்முருங்கை தோசை, தூதுவளை தோசை, ஆவாரம்பூ தோசை,
மஞ்சள் கரிசலாங்கண்ணி தோசை, கருவேப்பிலை பொடி தோசை, இஞ்சி பூண்டு மசால்
தோசை என்று தோசையிலேயே 20 வகைகள் இங்கே கிடைக்கும்.
குறிப்பிட்ட சில உணவு வகைகளின் சமையல் குறிப்புகளை வாடிக்கையாளர்கள்
கேட்டுச் செல்கிறார்கள். “அவற்றைச் சொல்லிக் கொடுப்பதுடன், தேவையான நவதானிய
மாவு, ரெடிமிக்ஸ்களையும் வழங்குகிறோம்” என்கிறார் இங்கு கடை வைத்துள்ள
விவசாயி ராஜேஷ். இந்த உணவகத்தின் மற்றொரு சிறப்பம்சம், ரீபைண்ட் ஆயிலைச்
சமைக்கப் பயன்படுத்துவது இல்லை.
ஒரு முறை கொதிக்க வைத்த எண்ணெயை மறுமுறை பயன்படுத்தக் கூடாது என்பது
அறிவியல் உண்மை. ஆனால், கொதிக்க வைத்துத்தான் ரீபைண்ட் ஆயிலே
தயாரிக்கப்படுகிறது. “இங்கு செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், கடலை
எண்ணெய், நல்லெண்ணெயை மட்டுமே பயன்படுத்துகிறோம்.
செக்கு எண்ணெயை விற்பனையும் செய்கிறோம்”என்கிறார் இங்கே கடை நடத்தும்
மற்றொரு விவசாயி பெருமாள். தினை சேவு, வரகரிசி முறுக்கு, சாமை பிஸ்கெட்
என்று சிறுதானிய இனிப்பு, கார வகைகள் இங்கே கிடைக்கின்றன. கிலோ 160 ரூபாய்.
வாடிக்கையாளர் வரவேற்பு
“இங்கே வசதிகள் அதிகரித்திருக்கின்றன. 20 உணவு வகைகளுடன் ஆரம்பித்து,
இன்றைக்கு ஏகப்பட்ட புதிய உணவு வகைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.
இதைப் பார்த்து எனது பள்ளிக் குழந்தைகள், பெற்றோரிடமும் சிறுதானிய உணவு
வகைகளின் பெருமையைப் புரிய வைக்கிறேன்” என்கிறார் உழவன் உணவகத்தின் நிரந்தர
வாடிக்கையாளர்களில் ஒருவரான பள்ளி நிர்வாகி பால.கார்த்திகேயன்.
“சின்ன வயசுல பாட்டி கையால சாப்பிட்ட உணவுகளோட ருசி இன்னும் நாக்குல
இருக்கு. சும்மா ருசி பார்க்கிறதுக்காக இங்கே வந்தேன், பிடிச்சுப் போச்சு.
அதன்பிறகு இரவு நேரத்தில் நண்பர்களோடு வெளியே சாப்பிடுவது என்றால்,
இங்கேதான் வருவேன்” என்கிறார் சிறப்புக் காவல்படை போலீஸ்காரரான
ஏ.எஸ்.ஆனந்தபாபு. மதுரை உழவன் உணவகத்தின் வெற்றி, நமது பாரம்பரிய உணவுக்கு
நிச்சயம் உத்வேகம் அளிக்கக்கூடியது என்பதில் சந்தேகமில்லை. நகரங்கள்தோறும்
இது போன்ற உழவன் உணவகங்கள் அமைக்கப்படலாம் என்பதற்குக் கட்டியம்கூறுகிறது
மதுரை உழவன் உணவகம்.
http://tamil.thehindu.com/general/environment/article6668010.ece?widget-art=four-rel
No comments:
Post a Comment