திங்கள்கிழமையானால் திமிலோகப்படுகிறது தாடிச்சேரி கிராமத்தைத் தழுவி
இருக்கும் நாகமலை. அன்றுதான் இங்குள்ள பெருமாள் கோயிலில் பேயோட்டும்
கச்சேரி களைகட்டுகிறது.
தேனி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் எட்டுக் கிலோ மீட்டர் தொலைவில்
இருக்கிறது தாடிச்சேரி. ஒரு காலத்தில் கம்பும், சோளமும் காய்த்துக்
குலுங்கிய இந்தக் கிராமத்து மண்ணில் இப்போது கரண்டு வெள்ளாமை (காற்றாலை
மின் உற்பத்தி) கனஜோராய் நடக்கிறது. காலம் மாறிவிட்டது. ஆனால், மக்கள்
இன்னும் பழமை மாறாமல் இருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கைகளும் வாழ்க்கை
முறைகளும் பெரிதாக மாறிவிடவில்லை. அதற்கு ஒரு அடையாளம்தான் இந்தப்
பேயோட்டும் பெருமாள் கதையும். இந்த உரையாடலைக் கேளுங்கள்:
“மதியச் சாப்பாட்டுக்கு வீடு திரும்பிருவோமாக்கா..?”
“நேரமானா என்னாடி.. அங்கிய யாராச்சும் கறிச்சோறு ஆக்கிப் போடுவாக.. அதுல கொஞ்சம் அள்ளிப்போட்டுக்கலாம்டீ.”
“கரட்டுமேல ரொம்ப தொலை நடக்கணுமோ?”
“ரெண்டு மைலு போகணும்டி இவளே..”
பேச்சும் நடையுமாய் நாகமலையிலிருக்கும் கோயிலை நோக்கி சரளைப் பாதையில்
சரசரவென நகர்கிறது பெண்கள் கூட்டம். அவர்கள் செல்வது பேயோட்டும் பெருமாள்
கோயிலுக்கு.
“சட்டுப்புட்டுன்னு வைச்சு இறக்கிப் போடுங்கப்பே..” அன்றைய தினத்துக்கு
கோயில் வாசலில் கோழிக்கறியும் சோறும் ஆக்கிப்போடும் உபயதாரர்கள், சமையல்
ஆட்களை வேகப்படுத்தும் சத்தம் காதில் விழவும், “இந்தா வந்துருச்சுல்ல...”
என்றபடி நடையை எட்டிப்போடுகிறது சனம்.
சரியாக மதியம் 12 மணி - பெருமாளுக்கு உச்சிக் காலப் பூஜை தொடங்குகிறது.
சாம்பிராணிப் புகையின் மகிமையில் சும்மா இருப்பவர்களும்
சாமியாடிவிடுவார்கள் போலிருக்கிறது. பயபக்தியுடன் பூஜையை முடித்துக்கொண்டு
கருவறைக்கு வெளியே சந்நிதிக்கு எதிரே வந்து உட்காருகிறார் தங்கவேல் பூசாரி.
அதற்கு முன்பாகவே நாலைந்து பெண்கள் சந்நிதிக்கு எதிரே வந்து பவ்யமாய்
உட்கார்ந்துவிட்டார்கள். பூசாரியின் கையில் அதிரத் தயாராய் இருக்கிறது
உடுக்கை. அவருக்குப் பக்கத்திலேயே கையில் ஒரு மினி டிரம்ஸுடன் வந்து
அமர்ந்துகொண்டு தொண்டையைச் செருமுகிறார் லெட்சுமண பெருமாள்.
“நீ யாரா இருந்தாலும், எவரா இருந்தாலும், ஒரு வாழும் பொண்ணு வாழ்க்கையை
கெடுக்கலாமா சண்டாளப் பாவிகளா?” தாளக்கட்டு மாறாமல் பாடுகிறார் லெட்சுமண
பெருமாள். கை டிரம்ஸில் விளையாடுகிறது. அவருக்குப் பக்கவாத்தியமாகத்
தங்கவேல் பூசாரியின் உடுக்கையும் உறுமுகிறது. எதிரே உட்கார்ந்திருக்கும்
பெண்களில் ஒருவர் மட்டும் வித்தியாசமாக உடம்பை முறிக்கிறார்.
“வந்துட்டியா பாண்டி..” கூடப் படிக்கும் தோழனை அழைப்பதுபோல் அந்நியோன்யமாய்
அழைக்கிறார் பூசாரி. மேற்கொண்டு தொடர்வதற்கு முன்பாகக் கொஞ்சம் பின்கதை.
எதிரே முறுக்கிக்கொண்டு இருக்கும் பெண்ணின் பெயர் ராமாத்தா.
திருப்பூருக்குப் பிழைக்கப் போனவர். அங்கே இவர் தங்கியிருந்த இடத்திற்கு
அருகில் குடும்பத்தோடு வசித்த குடிகாரன்தான் பாண்டி. குடிப்பதற்குக் காசு
தரவில்லை என்பதற்காக விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாராம் பாண்டி.
அவருடைய ஆவிதான் இப்போது ராமாத்தாவுக்குள் வந்திருக்கிறதாம். கடந்த வாரம்
இங்கே வந்தபோது, ராமாத்தாவுக்குள் இருந்த பாண்டியே இத்தனையும்
சொல்லிவிட்டாராம்.
“ஆனது ஆகிப்போச்சப்பா... அது வாழ வேண்டிய புள்ள. ஒனக்கு வேணுங்கிறத கேட்டு
வாங்கிட்டு, மூணு வாரமோ அஞ்சு வாரமோ வந்து சந்தோஷமா ஆடிட்டுப் போயிரு”
“அப்டினா.. எனக்கு குவாட்டர் பிராந்தியும் பஞ்சு வைச்ச சீரெட்டும் வாங்கிக் குடுப்பா. மூணு வாரம் மட்டும் ஆடிட்டுப் போயிடுறேன்”
திருவாளர் பாண்டிக்கும் தங்கவேலு பூசாரிக்கும் இடையில் கடந்த வாரம் ஏற்பட்ட
எழுதப்படாத ஒப்பந்தம் இது. கேட்டதை வாங்கிக்கொள்ளத்தான் இப்போது
ராமாத்தாவுக்குள் இருந்து வாய்ஸ் கொடுக்கிறாராம் பாண்டி.
“இந்தாப்பே ஏய்.. நீ கேட்ட பிராந்தி...” பூசாரி எடுத்து நீட்ட, மொடாக்
குடிகாரன் கணக்காய் குவாட்டரின் கழுத்தை திருகி, அப்படியே உள்ளே
தள்ளுகிறார் ராமாத்தா. மன்னிக்கணும் பாண்டி! “டேய்.. அளவா குடிடா.
பச்சப்புள்ள ஒடம்பு தாங்காது...” பூசாரியின் கெஞ்சல் எதுவும் பாண்டி காதில்
ஏறியதாகத் தெரியவில்லை. “அவளா குடிக்கிறா? உள்ளார இருக்கிற பாண்டில்ல
குடிக்கிறான்?” தள்ளி இருக்கும் பெண்கள் தங்களுக்குள் கிசுகிசுக்கிறார்கள்.
“சும்மா.. நொச்சு.. நொச்சுன்னு பேசாதீங்கம்மா” என்று தாய்குலத்தை
அதட்டிவிட்டுப் பாண்டி பக்கம் திரும்புகிறார் பூசாரி.
“ஏலேய் பாண்டி, நீ கேட்டத குடுத்தாச்சப்பா...” பூசாரி சொல்லி முடிப்பதற்குள் குறுக்கிட்டார் பாண்டி. “பஞ்சு வைச்ச சீரெட்டு?”
பக்கத்தில் இருந்தவர்கள் மஞ்சள் பைக்குள் இருந்து ஃபில்டர் சிகரெட்டை
எடுத்துக் கொடுக்க, “தீப்பட்டி யாரு குடுப்பாவாம்?” கிசும்பாய்க் கேட்டார்
பாண்டி. கூட்டத்தில் இருந்து யாரோ தீப்பட்டியை எடுத்து வீச, கச்சிதமாய்
அதைக் கேட்ச் பிடித்த ராமாத்தாள், அதே வேகத்தில் சிகரெட்டைப் பற்றவைத்து
ஆனந்தமாய் ஊதித் தள்ளினார். அதுவரை பொறுமை காத்த பூசாரி, எல்லாவற்றுக்கும்
சேர்த்து ஒரு பிடி பிடிக்கக் கிளம்பினார்.
“சரிப்பா.. நாங்க சொன்னபடி நடந்துக்கிட்டோம். நீயும் அதே மாதிரி
நடந்துக்கணும். இன்னும் ஒரு வாரம் ஒனக்கு பாக்கி இருக்கு. அடுத்த வாரமும்
வந்து ஆடிட்டு சந்தோஷமா(!) இந்தப் புள்ளைய விட்டுட்டுப் போயிடணும்.”
பூசாரியின் கட்டளைக்கு மூச்சே விடவில்லை பாண்டி. “என்னடா.. பேச்சக்
காணோம்... சொன்னபடி நடந்துக்கிறியா... இல்ல, தரையை நூறு தடவ நக்கவிடவா?”
பூசாரி மிரட்டியதும் பாண்டி கிளம்பிவிட்டார் (ராமாத்தாள் மயங்கி
விழுந்துட்டாங்கன்னா அதுதானே அர்த்தம்!).
சற்று நேரத்தில் முகத்தில் தண்ணீர் அடித்து ராமாத்தாளை எழுப்புகிறார்கள்.
“பயப்படாதம்மா... அடுத்த வாரத்தோட அந்தப் பய ஓடிப் போயிருவான்” என்று
சமாதானப்படுத்தும் பூசாரி, கை நிறைய திருநீறை அள்ளி ராமாத்தாளின் கையில்
திணிக்கிறார். அழுக்கான மூன்று பத்து ரூபாய் நோட்டுக்களைத் தட்டில்
போட்டுவிட்டுச் சாதுவாய்க் கிளம்புகிறார் ராமாத்தாள். ஒரு குவாட்டரை
மிக்ஸிங் ஏதும் இல்லாமல் உள்ளே தள்ளியதற்கான சிறு தள்ளாட்டம்கூட இல்லாமல்
அவர் நடந்து செல்கிறார்.
தமிழகத்தின் பல ஊர்களிலிருந்தும் இப்படிப் பல வித்தியாசமான முகங்கள்
நாகமலைக்குத் திங்கள் தவறாமல் வந்து போகின்றன. இங்கு வந்து போனால் பேய்,
பிசாசு, பில்லி, சூனியம் அத்தனையும் அறுத்துக்கொண்டு ஓடிவிடும் என்பது இந்த
மக்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கை பொய்க்காமல் குணமடைந்தவர்கள், அடுத்த
வாரமே இங்கு வந்து கறிச் சோறாக்கிப் போட்டுக் கடனை நேர் செய்கிறார்கள்.
பேய், பிசாசு இதெல்லாம் பிதற்றல் என்று அறிவியல் மட்டுமல்ல, சாதாரண
மக்களில்கூடப் பலரும் திட்டவட்டமாகச் சொல்கிறார்கள். எல்லாம் மனப் பிராந்தி
என்று சொல்வார்கள். ஆனால் ராமாத்தாள் உருவில் வந்து நிஜப் பிராந்தி
குடிக்கும் பாண்டிகளைத்தான் நாகமலைக்கு வரும் மக்களுக்குத் தெரியும்.
இதுதான் அவர்கள் கண்கண்ட உண்மை. அவர்கள் நம்பிக்கை.